நீட் தேர்வு தேதி அறிவிப்பு: அரசின் முடிவு மாணவர் நலனுக்கு எதிரானதா?- கல்வியாளர்கள் கருத்து


நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 12ம் தேதி நடக்கவிருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இதுபற்றிய கல்வியாளர்கள் கருத்தை கேட்டோம்.

நீட் தேர்வு குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், “ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பதால், விரைவில் நீட் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்த்துதான் இருந்தோம். கண்டிப்பாக செப்டம்பர் வரை தள்ளிப்போகும் என்றே நினைத்தோம். அந்தவகையில் இது எதிர்ப்பார்க்கப்பட்ட ஓர் அறிவிப்புதான்.

இப்போதைக்கு மாணவர்கள் அரசியல் காரணங்களை மனதில் கொள்ளாமல் தேர்வுக்கு மனதளவிலும் செயலளவிலும் தயாராக வேண்டுமென்பதே நான் சொல்ல விரும்புவது. தேர்வு நடக்கிறது, நடக்கவில்லை என்ற குழப்பங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நீட் தேர்வுக்கு அப்ளை செய்து, தேர்வுக்கு தயாராவதே இப்போதைக்கு நல்லது. இனி நடக்கும் விஷயங்களை, இப்போது மாணவர்கள் கணிக்கவோ யோசிக்கவோ வேண்டாம்” என்றார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு இதுபற்றி பேசுகையில், “இன்றைய சூழலில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒரு சராசரி மாணவனால், தான் படித்த பள்ளியிலோ அல்லது தனக்கு மிக அருகில் உள்ள ஒரு மையத்திலோ நேரடியாக சென்று எழுதமுடியும். ஆனால் நீட் நுழைவுத்தேர்வு அப்படியல்ல. எந்த மையத்தை அரசு ஒதுக்குகிறதோ, அங்கு சென்றுதான் எழுதவேண்டும் என்பது நீட் தேர்வாளர்களுக்கான விதி. இங்கே, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுத மாணவர்கள் நேரில் செல்வது உகந்ததல்ல / சிரமப்படுவர் என அரசுக்கு புரிகிறது; அதனால் அதை ரத்து செய்தது. ஆனால் நீட் தேர்வில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் அரசுக்கு புரியவில்லை. இதை நாங்கள் எப்படி புரிந்துக்கொள்வது? இப்போது நீட் தேர்வை நடத்தவேண்டிய அவசியம் அரசுக்கு எங்கிருந்து வருகிறது? எந்த அடிப்படையில் இந்த முடிவை அரசு எடுத்தது என தெரியவில்லை.

‘பொதுத்தேர்வென்றால் ஐந்து லட்சம்பேர் எழுதுவர் – அப்போது கொரோனா பரவும்; நீட் என்றால் 1 லட்சம்பேர்தான் எழுதுவர் – அப்போது கொரோனா பரவாது’ என்று பேசப்போகிறீர்களா என்றும் தெரியவில்லை. கொரோனா, எத்தனை பேரென்றாலும் பரவும்தானே! ஒரு உயிரென்றாலும், அதுவும் உயிர்தானே…

அந்தவகையில் மாணவர் நலன் சார்ந்த அறிவிப்பாக இதை நாங்கள் பார்க்கவில்லை. மத்திய அரசு, தங்களின் இந்த அறிவிப்பில் எங்கு மாணவர் நலன் உள்ளதென்பதை கூற வேண்டும். மனிதாபிமானத்தோடு இயங்கும் எந்தவொரு அரசிடமும் மக்கள் இதை எதிர்ப்பார்க்க மாட்டார்கள்” எனக்கூறினார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive