தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஜூன் மாதப் பருவத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
'எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் கல்வி' என்ற குறிக்கோளுடன் 2002-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துவருகின்றனர்.
அவர்களுக்கான செமஸ்டர் எனப்படும் பருவத் தேர்வுகள், ஜூன் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டன. அதில், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை https://exam.tnouniv.com/result21/ என்ற இணையதளத்தில் காணலாம். மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விவரங்களும் அதே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: www.tnou.ac.in
மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் தமிழக திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 80-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெற்றுள்ளது. இதன்மூலம் நம் நாட்டில் தொலைநிலைக் கல்வியைத் திறம்படச் செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.