நீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 22, 2021

நீட் தேர்வைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்?


உறவினர் ஒருவரின் தந்தை, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே காவல்துறையில் பணியாற்றியவர். ஆங்கிலேயர் ஆட்சியில் சிவப்பு நிற தொப்பி, அரைக்கால் ட்ரவுசர் போட்டுக் காவலராகப் பணியாற்றியவர். சிறுவயதில் அவருடன் பேசும்போது, அந்தக் காலத்தில் காவல்துறைக்கு எப்படி ஆள் எடுப்பார்கள் என்பதை விளக்கியது நினைவுக்கு வருகிறது.

'அப்போதெல்லாம் மாலை நேரத்தில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிக்கு காவல்துறை வேன் வந்து நிற்கும். கூட்டத்தில் திரியும் திடகாத்திரமான ஆட்களைப் பிடித்து வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிக் கொண்டுபோய் காவல்துறை பயிற்சி அளித்து காவலர்கள் ஆக்கி விடுவார்கள்' என்று சொன்னது நினைவில் நிற்கிறது.

ஆனால், இன்றைக்கு அதுவா நிலை? காவல்துறைக்கு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு, 8-ம் வகுப்பு தொடங்கி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, உடல் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு எல்லாம் நடத்தி எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே காவலர் பணி வழங்கப்படுகிறது.

அதேபோன்று, அன்றைக்குப் பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் விண்ணப்பித்தால் போதும். அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலையே வேறு. துப்புரவுப் பணியாளர், சட்டப்பேரவை உதவியாளர் பணிக்கு விளம்பரம் வெளியிட்டால் கூட அதில் எத்தனை பி.எச்.டி., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., இன்ஜினீயர் பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர் தெரியுமா? எழுத்துத் தேர்வு இல்லாமல் அரசு வேலைக்கு ஆள் எடுக்க முடியாத நிலை. இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம்? மக்கள்தொகை பெருக்கம்தான்.

சிவபெருமான் கையில் ஒரு பழம் இருந்து ஒரு மகன் இருந்திருந்தால் பழத்தை உடனே கொடுத்திருப்பார். ஒரு பழத்தை இரண்டு மகன்கள் கேட்கும்போது, அதை யாரிடம் கொடுப்பது என்பதை முடிவு செய்ய அங்கு ஒரு போட்டி தேவைப்படுகிறது. அதில் வெற்றி பெறுபவர்களுக்குப் பழம் வழங்கப்படுகிறது. இதுதான் இன்றைய நீட் தேர்வுக்கான அடிப்படை. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 83 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அந்த இடங்களைப் பிடிக்க ஆசைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 15 லட்சம். அப்போது ஒரு போட்டித் தேர்வு தேவைப்படுகிறது.

காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப, இன்றைய தேவைகளின் அடிப்படையிலேயே புதிய நடைமுறைகள் உருவாக்கப்படுகின்றன. அதை ஏற்க மறுப்பது யாருக்கு நஷ்டம்? நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கும் கருத்து, தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது, அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே. நாளுக்கு நாள் போட்டி அதிகரிக்கும்போது மாற்றங்கள் வருவது இயற்கை. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தயார்படுத்திக் கொண்டு நமக்குரிய பங்கைப் பெறுவதே சாதுர்யமான நடவடிக்கையாக இருக்கும்.

நீட் தேர்வுக்கான கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களுடன் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களைப் போட்டி போடச் செய்வதா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர். புதிய கல்விக் கொள்கையில் சீரான பாடத்திட்டம் வரவிருப்பதால் இந்த வாதம் பொருந்தாமல் போய்விடுகிறது.

ஒரு வாதத்துக்கு ஏற்றுக்கொண்டாலும் சிபிஎஸ்இக்கும் மாநிலக் கல்வி முறைக்கும் கற்பித்தல் முறையில்தான் மாறுபாடு இருக்குமே தவிர, பாடத்தில் எந்த வேறுபாடும் இல்லை. 'அல்ஜீப்ரா, மேட்ரிசஸ், டிரிக்னாமெட்ரிக்ஸ், எலெக்ட்ரோஸ்டேட்டிக், மேகனடிசம், எவல்யூஷன், ஈகோ சிஸ்டம், மியூட்டேஷன்' போன்ற பாடங்கள் இருவருக்கும் ஒன்றுதான். பாடங்களை நாம் திறம்படக் கற்கவில்லை என்றால் கற்றவர்களைக் குறை சொல்வது நியாயமற்றது. நாமும் தரமான கல்விக்கு மாற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பதுதான் வளர்ச்சிக்கு வித்திடும்.

தமிழகத்தில் இருந்து 2018-ம் ஆண்டு நீட் தேர்வை எழுதியவர்களில் 39.56 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது 2019-ல் 48.5 சதவீதமாக உயர்ந்தது. 2020-ல் 57.44 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பல மாநிலங்கள் நம்மைப் போன்ற நிலையில்தான் உள்ளன. சண்டிகர் (75.64), டெல்லி (75.49), ஹரியாணா (72.90), பஞ்சாப் (65.35), ராஜஸ்தான் (68.68) போன்ற ஒருசில மாநிலங்கள் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளன. இந்த மாநிலங்கள் எல்லாம் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களை அதிகம் பெற்று மாணவர்களைப் போட்டிக்குத் தயார்படுத்தும் மாநிலங்கள். போட்டி என்று வரும்போது அதை எதிர்கொள்ள நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி எடுப்பதும் போட்டியின் ஒரு அங்கம் தான்.

தமிழக மாணவர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆண்டுக்கு ஆண்டு நம் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அரசியல்ரீதியாக நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகளை விதைத்து, மாணவர்களை திசைதிருப்பி முடக்கிவிடாமல், நம் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க போட்டி அதிகமாவது இயற்கை.

இன்றைக்கு 15 லட்சம் பேர் போட்டிபோடுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் 20 லட்சம், 30 லட்சம் பேர் போட்டி என்று அதிகரிக்கத்தான் செய்யும். அதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதுதான் அறிவார்ந்த செயல். புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்த, பயிற்சி அளிக்க என்ன செய்யலாம், யாருடைய உதவியை நாடலாம் என்பதை அனைத்துத் தரப்பினரும் சிந்தித்துச் செயல்பட்டால் நிச்சயம் நீட் தேர்ச்சி சதவீதத்திலும் நாட்டிலேயே முதலிடத்தைத் தமிழகத்தால் பெற முடியும்




Post Top Ad