தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3,443 பணியிடங்கள் – உயர்கல்வித்துறை உத்தரவு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 22, 2021

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 3,443 பணியிடங்கள் – உயர்கல்வித்துறை உத்தரவு!




தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் மீண்டும் 3,443 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள் அறிவிப்பு:



தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். 2020-21 ஆம் ஆண்டு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்துடன் 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பிறகு இவர்களின் ஊதியம் ரூ.20 ஆயிரமாக கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது. ஆனால் அந்த கவுரவ விரிவுரையாளர்கள் தங்களை நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களில் மீண்டும் தொகுப்பூதியம் அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் சுழற்சி 1ல் 3,443 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என உயர்கல்வித்துறைக்கு கல்லூரி கல்வி இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார்.



அந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள 150 அரசு கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களின் விவரங்களை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக அனுப்புமாறு கல்லூரி கல்வி இயக்குனருக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்ய தேவைப்படும் நிதி ஒதுக்கீடு குறித்த விவரத்தை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கல்லூரி கல்வி இயக்குநர், அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விவரங்களை உடனே அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு, 3,443 கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பதற்காக அரசாணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad