கல்வித் தொலைக்காட்சியை பார்க்கும் மாணவர்கள் சதவீதம் - ஆய்வு முடிவுகள் வெளியீடு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, July 22, 2021

கல்வித் தொலைக்காட்சியை பார்க்கும் மாணவர்கள் சதவீதம் - ஆய்வு முடிவுகள் வெளியீடு




"இணையவழி வகுப்புகளில் 49 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே பங்குபெறுகின்றனர், கல்வித் தொலைக்காட்சியை 41 சதவிகிதத்தினரே பார்க்கின்றனர் எனத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


இதுபற்றி மாநிலந்தழுவிய அளவில் நடத்திய ஆய்வின் முடிவுகளைச் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் வெளியிட்டனர்.



"கடந்த ஜூலை 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தன்னார்வலர்கள் மூலம் 35 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டது. 



மொத்தம் 202 தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு முதல்கட்டமாக ஜூலை 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாள்கள் பயிற்சியளிக்கப்பட்டது. பின்பு கல்வியாளர்களால் 60-க்கும் மேற்பட்ட கேள்விகள் உருவாக்கப்பட்டு கள முன்பரிசோதனை செய்யப்பட்டது.



 

ஒரு மாவட்டத்திற்கு 2 முதல் 3 ஒன்றியங்கள், அப்பகுதியில் உள்ள கிராமம் மற்றும் நகரப்பகுதிகளைத் தேர்வு செய்து ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு கிராமத்திற்கு 10 முதல் 20 மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. தன்னார்வலர்களாக அறிவியல் இயக்க ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், இளம் ஆய்வாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வானது 121 கிராமங்களிலும் 41 நகரங்களிலும் நடத்தப்பட்டது. 



ஜூலை 10, 11 தேதிகளில் 162 பகுதிகளில் 202 தன்னார்வலர்கள் 2,137 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஒரு மாணவரை ஆய்வு செய்ய 25 நிமிடங்கள் என்ற அடிப்படையில் 800 மணி நேரம் ஆய்வுப் பணி நடைபெற்றுள்ளது. 





ஆய்வு சுருக்கம்

"ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மொத்த எண்ணிக்கை 2,137. அதில் ஆண் குழந்தைகள் 1,177, பெண் குழந்தைகள் 957, பிற 3. 



31 சதவிகிதம் மாணவர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 32 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவினர். 30 சதவிகிதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர். பொதுப் பிரிவினர் 2 சதவிகிதம். சாதி தேவையில்லை என்று கூறியவர்கள் 2 சதவிகிதம். 



ஆய்வில் பங்கேற்ற மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை 20 சதவிகிதம். ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 69 சதவிகிதம். எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே 89 சதவிகிதம். ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்கள் 11 சதவிகிதம். 



2019-20 கல்வியாண்டு தொடங்கி 2021-22 வரையுள்ள காலத்தில் அரசுப் பள்ளிகளில் 5 சதவிகிதம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 7 சதவிகிதம் குறைந்துள்ளது. 



மேல் வகுப்புக்கு செல்லாமல் கல்வியை நிறுத்திக்கொண்ட மாணவர்கள் 11 சதவிகிதம். பள்ளிகள் திறந்த பிறகு இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது.



 

2.96 சதவிகிதம் மாணவர்கள் தற்காலிக குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். அதில், 60 சதவிகிதம் மாணவர்கள் ரூபாய் 100 க்கும் கீழே சம்பளம் வாங்குபவர்கள். 8 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்யும் மாணவர்கள் / குழந்தை தொழிலாளர்கள் 10 சதவிகிதம். அதிகபட்சமாக சேவைத் துறை பணிகளில்தான் 54 சதவிகிதம் மாணவர்கள் ஈடுபட்டு உள்ளனர். 



வீட்டில் வேலைக்கு செல்லாமல் உள்ள குழந்தைகளில் தாய், தந்தையர் மற்றும் பாதுகாவலருக்கு உதவி புரியும் குழந்தைகள் 28 சதவிகிதம். வீட்டில் இருக்கும் போது பெரும்பகுதி நேரத்தை விளையாட்டில் கழிக்கும் குழந்தைகள் 72 சதவிகிதம்.



மேலும், தொலைக்காட்சி பார்ப்பதில் 39 சதவிகிதம் மாணவர்கள் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். விடியோ விளையாட்டுகளில் ஈடுபட்டு வருபவர்கள் 18 சதவிகிதம். 



பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படாமல் இருப்பதால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இருப்பதாக உணர்வோர் 38 சதவிகிதம். படிப்பறிவு உள்ள பெற்றோர்களில் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்போர் 47 சதவிகிதம். 



தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் பள்ளி செல்லாவிட்டால் தங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதும் பெற்றோர்கள் 45 சதவிகிதம். 



ஆன்லைன் வகுப்புகளில் பங்கு பெற்ற மாணவர்கள் விகிதம் 49 சதவிகிதம். ஆன்லைன் வகுப்புகளுக்கு 60 சதவிகிதம் மாணவர்கள் செல்போன் மூலம் மட்டுமே பங்கேற்க முடிகிறது. 



கல்வி தொலைக்காட்சியை மட்டுமே பார்ப்போர் 41 சதவிகிதம். கல்வி தொலைக்காட்சியில் நடத்தும் பாடங்கள் புரிகிறது என்று கூறியவர்கள் 44 சதவிகிதம். 



இணைய வழியில் கற்க முயற்சி செய்தும் தொடர் இணைப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவோர் 54 சதவிகிதம். 65 சதவிகிதம் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை கடந்த ஓராண்டில் சந்தித்து உள்ளனர்.



 

75 சதவிகிதம் மாணவர்கள் பாடப் பொருள் சார்ந்தும் விலையில்லா பொருட்களுக்காகவும் தங்கள் ஆசிரியர்களை சந்தித்ததாக 52 சதவிகிதம் மாணவர்கள் கூறியுள்ளனர். 



10 சதவிகிதம் மாணவர்கள் விலையில்லா பொருட்களை வாங்க இயலவில்லை. காரணம் வெளியூர் சென்றதும் தகவல் கிடைக்கப் பெறாமையும் ஆகும். அரசு வழங்கியுள்ள பாடப் புத்தகங்களை 69 சதவிகிதம் மாணவர்கள் படித்துப் பார்த்து உள்ளனர். 



இன்றைய பெற்றோர்கள் 11 சதவிகிதம் மட்டுமே எழுத்தறிவு அற்றவர்கள். 64 சதவிகிதம் பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள். 



பெருவாரியான பெற்றோர்களுக்கு வாரத்தின் எல்லா நாள்களிலும் வேலை கிடைக்கிறது. வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்யும் ஆண்கள் 18 சதவிகிதம். பெண்கள் 8 சதவிகிதம். 



பெருவாரியான ஆண்கள் மற்றும் பெண்கள் மாதம் ஒன்றுக்கு 5,000 ரூபாயுக்கு கீழே வருவாய் ஈட்டுகின்றனர்.‌ வருவாய் பற்றிய தகவல் தர விரும்பாதோர் 56 சதவிகிதம். 



பெருந்தொற்றால் பள்ளி செல்ல இயலாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று 82 சதவிகிதம் மாணவர்கள் கூறுகின்றனர். 



பள்ளி திறந்ததும் செல்லத் தயாராக உள்ள மாணவர்கள் 95 சதவிகிதம். பள்ளி செல்ல விரும்பாத மாணவர்கள் 5 சதவிகிதம். பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளி செல்ல தடைகள் இருப்பதாக தெரிவிக்கும் மாணவர்கள் 12 சதவிகிதம். அதில் கரோனா அச்சம் பெரும் பங்கு வகிக்கிறது. அடுத்து வீட்டின் பொருளாதார நிலை. 



பள்ளியே மகிழ்ச்சி தரும் இடமாக இருக்கிறது என்று 77 சதவிகிதம் மாணவர்கள் கூறியுள்ளனர். 



நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் போது, குறைந்த பாடங்களே இருக்க வேண்டும் என 41 சதவிகிதம் மாணவர்கள். விளையாட்டுகள் அதிகம் இடம் பெற வேண்டும் என 28 சதவிகிதம் மாணவர்கள். கொஞ்சம் நாட்கள் பாடம் இல்லாத வகுப்புகள் என 14 சதவிகிதம் மாணவர்கள். கரோனா பாதிப்புக்கு தக்க பாதுகாப்பு வசதிகள் வேண்டும் என்று 26 சதவிகிதம் மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 



மேலும், இணைப்பு வகுப்பு பயிற்சிகள் வேண்டும் என 12 சதவிகிதம் மாணவர்கள். மகிழ்ச்சியான போதனை முறைமைகள் வேண்டும் என்று 26 சதவிகிதம் மாணவர்கள். இந்த எல்லாம் சேர்ந்து இருக்க வேண்டும் என 39 சதவிகிதம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 



கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்கள் 5 சதவிகிதம். கரோனா தொற்று பாதிப்பில் இறப்பு ஏற்பட்ட குடும்பங்கள் 1.1 சதவிகிதம். 



கரோனா பெருந்தொற்று பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய நேரடி கள ஆய்வு முடிவுகள் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கும் கோரிக்கைகள் :-



 

1.கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி மேல் வகுப்பிற்கு செல்லாமல் 10 சதவிகிதம் மாணவர்கள் விடுபட்டுள்ளனர். தற்போதைய நிலையில் இதனை பள்ளி இடை விலகல் என்றே கருத இடமுள்ளது. 

2. அதேபோல், 14 வயதுக்கு கீழே குழந்தை தொழிலாளியாக மாறிவிட்ட மாணவர்கள் எண்ணிக்கை 13 சதவிகிதம். 

3. பள்ளிகள் திறக்கப்படும் போது பள்ளி செல்ல தடையேதும் உள்ளதா என்ற கேள்விக்கும் ஆம் இருக்கிறது என்று 12 சதவிகிதம் மாணவர்கள் பதிலளித்துள்ளனர். 



குழந்தை தொழிலாளியாக இருக்கும் மாணவர்கள், தற்காலிக இடைநிறுத்தம் ஆன மாணவர்கள், மீண்டும் பள்ளி செல்வதில் பிரச்சினை இருக்கிறது என்று கூறும் மாணவர்கள் ஆகிய அனைவரையும், பள்ளிகள் திறக்கப்படும் போது, பள்ளி சேர்ந்து விட்டார்களா ? என்பதை உத்திரவாதம் தக்க உத்திகளை அரசு வகுக்க வேண்டும். 



கரோனா பெருந்தொற்றுக் காரணமாக ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலை அல்லது ஒரு பள்ளியில் இருந்து இன்னோரு பள்ளிக்கு மாறிச் செல்ல வேண்டும் என்பது கூட அறியாமல் பள்ளி இடை விலகல் உள்ளனர். 14 வயதுக்கு கீழே உள்ளவர்களேனும் வயதுக்கு ஏற்ற வகுப்பில் இணைக்கப்பட்ட வேண்டும்.



4. எங்கள் கள ஆய்வு முடிவுகளின் படி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5 சதவிகிதம் அதிகரித்து உள்ளது. அதேசமயம், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 7 சதவிகிதம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ள மாணவர்கள், மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு திரும்பாத வண்ணம், பள்ளிக் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் மாணவர் விகிதம், தரமான கல்விக்கான கற்றல் கற்பித்தல் முறைகள் ஆகியவற்றில் பள்ளிச் செயல்பாடுகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், தற்போது நம்பிக்கையோடு பள்ளியில் சேர்ந்துள்ள குழந்தைகள் மற்றும் புதிதாக அரசுப் பள்ளிகளுக்கு வருவோருக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். எனவே, அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.



 

5. ஆன்லைன் வகுப்புகளில் 49 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே பங்கு பெறுகிறார்கள். அதுவும் கூட எப்போதாவது பங்கேற்பவர்களையும் உள்ளடக்கியதே. கல்வி தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் 41 சதவிகிதம். அதிலும் 44 சதவிகிதம் மாணவர்களுக்கு அது புரியவில்லை. எனவே, இணைய வழிக் கல்வி, கல்வி தொலைக்காட்சி கல்வி ஆகியவை எல்லா மாணவர்களுக்கும் சென்று சேரும் வகையில் இதனை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். 



6.பள்ளியில், முட்டையோடு தொடர்ச்சியாக சத்துணவு சாப்பிட்டு வந்த குழந்தைகளின் பெற்றோரில் 38 விழுக்காட்டினர், சத்துணவு சாப்பிடாமையால் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைந்து இருக்கலாம் என்ற கருத்தை ஒத்துக் கொள்கின்றனர். 



கற்றல் கற்பித்தல் நடைபெறாவிட்டாலும், முட்டையோடு கூடிய சமைத்த சத்துணவு குழந்தைகளுக்கு சென்று சேர்வதை அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும். இதனை ஆங்காங்கே இருக்கும் அங்கன்வாடி மையங்கள் மூலம் கூட அரசு நடைமுறைப்படுத்த திட்டமிடலாம். 



7. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் காலகட்டத்தில், தொடக்க நிலையில் குறைந்த அளவிலான பாடங்கள், விளையாட்டு வழி செயல்பாடுகள், திட்டமிட்ட பாடங்கள் இல்லாத வகுப்புகள், பாதுகாப்பான வகுப்பறைகள், இணைப்பு வகுப்புகள் இப்படி பல ஆலோசனைகளை மாணவர்கள் கூறியுள்ளனர். இதனை பள்ளிக் கல்வித் துறை கல்வியாளர்கள் கல்வி செயல்பாட்டாளர்களை அழைத்துப் பேசி ஒரு புதிய வடிவத்தை முடிவு செய்யலாம்.



 

8. கரோனா தொற்று காரணமாக 1.1 சதவிகிதம் மாணவர்கள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். அரசு கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் குடும்பங்களுக்கு கொடுக்கும் நிவாராணத்தோடு, இந்தக் குழந்தைகள் படிப்பை முடிக்கும் வரை ஒரு சிறப்பு கல்வித் உதவித் தொகை மூலம் படித்து முன்னேற்றம் அடைய அரசு உதவி செய்ய வேண்டும். 



9. கரோனா பெருந்தொற்று முதல் அலை தொடங்கி தற்போது வரை பாதிக்கப்படாத கிராமங்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கு செயல்படும் பள்ளிகள் இருக்கின்றன. எனவே, பள்ளித் திறப்பை மாநிலம் முழுவதும் ஒரேமாதிரியான அளவீட்டை கைக்கொள்ளாமல், மாவட்டம், வட்டாரம் என பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் பகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற ஆலோசனையை அரசுக்கு முன் வைக்கிறோம். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலும் இதில் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம். 



10. பள்ளி ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிப்பது பள்ளித் திறப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உறுதுணையாக அமையும் என்பதையும் அரசுக்கு வேண்டுகோளாக முன் வைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். 



இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் எஸ். தினகரன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, கல்வி ஆய்வுக்குழுவின் முனைவர் என்.மணி, முனைவர் என். மாதவன், மாநிலச் செயலாளர்கள் எம்.எஸ். ஸ்டீபன்நாதன், எஸ்.டி. பாலகிருஷ்ணன், எம். தியாகராஜன், மாநில துணைத் தலைவர் முனைவர் சுகுமாரன் ஆகியோர் பங்குபெற்றனர்"


Post Top Ad