தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு நிமோனியாவுக்கான நியூமோகாக்கல் தடுப்பூசி வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிசிஜி-காசநோய், ஹெபிடைடிஸ் பி - கல்லீரல் மற்றும் புற்றுநோய், ஓபிவி – இளம் பிள்ளை வாதம், பெண்டா-கக்குவான் இருமல், ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று ஆகிய தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன.
அதேபோல், ரோட்டா-வயிற்று போக்கு, எம்.ஆா். – தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் நியூமோகாக்கல் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படாமல் இருந்தது.
அனைத்து குழந்தைகளுக்கும் நியமோகாக்கல் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்பதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் இணைக்கப்படாமல் இருந்தது. இதனால், தனியாா் மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டிய நிலை இருந்தது. அவ்வாறு தனியாா் மருத்துவமனைகளில், ஒரு தவணைக்கு ரூ. 4,000 வரை செலுத்த வேண்டியிருந்தது. இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையில் புதிதாக நியூமோகாக்கல் தடுப்பூசி இணைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில், ஆண்டுதோறும் 9.35 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனா். இதற்கான, திட்டத்தை அண்மையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா். அதன்படி, பிறந்தவுடன் குழந்தைகளுக்கு ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பது மாதங்களில் மூன்று தவணையாக தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.