கொரோனாவின் 2-வது அலை ஓய்ந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றன. குறிப்பாக சுற்றுலா தலங்கள், ஆன்மிக நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாக பங்கேற்கும் சூழல் தொடங்கி இருக்கிறது. இது குறித்து கவலை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவ சங்கம், இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எந்தவொரு தொற்றுக்கும் 3-வது அலை தவிர்க்க முடியாததாகவும், உடனடியாக ஏற்படுவதாகவும் இருந்திருப்பதற்கு வரலாற்றுப்பூர்வ மற்றும் சர்வதேச ஆதாரங்கள் உள்ளன.
அப்படியிருந்தபோதும், மூன்றாவது அலையைத் தணிக்க எல்லோரும் உழைக்க வேண்டியிருக்கும் இந்த முக்கியமான நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில், அரசுகளும், பொதுமக்களும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் வெகுஜன கூட்டங்களில் பங்கேற்பதை பார்ப்பது வேதனையாக உள்ளது' என்று குறிப்பிட்டு உள்ளது.
தடுப்பூசி போடாமல் மக்களை இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிப்பது 3-வது அலையை உறுதி செய்வதாகும் என எச்சரித்துள்ள மருத்துவ சங்கம், சுற்றுலா மகிழ்ச்சி, புனித யாத்திரை பயணம், மத உற்சாகம், அனைத்தும் தேவை என்றாலும், இன்னும் சில மாதங்கள் காத்திருக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.