9th Tamil - Book Back Answers - Unit 7 - Guide

  

 


    9th Tamil - Book Back Answers - Unit 7 - Download

    Tamil Nadu Board 9th Standard Tamil - Unit 7: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 7 – from the Tamil Nadu State Board 9th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 7 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 9 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 7

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1. இந்திய தேசிய இராணுவம் ……….. இன் தலைமையில் ………. உருவாக்கினர்.

                இ) மோகன்சிங், ஜப்பானியர்.

    2. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

                இ) அள்ளல் – சேறு

    3. இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக் குறிப்புத் தருக.

                ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை

    4. நச்சிலைவேல் கோக் கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே

                இ) சேர நாடு, சோழ நாடு

    5. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

                அ) மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்.

    6. கூற்று: இந்திய தேசிய இராணுவப் படைத்தலைவராக இருந்த தில்லான், ‘இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் என்றார்.
    காரணம்: இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.

                அ) கூற்று சரி, காரணம் சரி.

    ஆ) குறு வினா

    1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?
    விடைகுறிப்பு:

    • கேப்டன் தாசன்
    • ஜானகி
    • அப்துல் காதர்
    • இராஜாமணி
    • சிதம்பரம்
    • கேப்டன் லட்சுமி
    • லோகநாதன்
    • இராமு

    2. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
    விடைகுறிப்பு:

            நான் இராணுவப் பணியை தாய்நாட்டுக்காக உழைக்க தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக் கருதுகிறேன்.

    3.மதுரைக் காஞ்சி – பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுக.
    விடைகுறிப்பு:

                காஞ்சி என்றால் நிலையாமை என்று பொருள். “மதுரை” நகரைக் குறிக்கும்.
    மதுரை நகரின் சிறப்புகளைப் பாடுவதாலும், நிலையாமையைப் பற்றியக் கருத்துகளைக் கூறுவதாலும், இப்பெயர் பெற்றது.

    4. உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும் சந்தையில் காணும் பொருள்களையும் ஒப்பிட்டு எழுதுக.
    விடைகுறிப்பு:
     
    உற்பத்தியாகும் பொருள்:
            மனிதர்கள் நாடோடியாக, வேட்டையாடி கிடைத்த உணவை உண்டனர். பின்னாளில் நால்வகை நிலங்களில் உற்பத்தி பெருகியது. காய்கறி, கீரை, தானியம் ஆகியவற்றை உற்பத்தி செய்தனர்.

    சந்தையில் காணும் பொருள்:
            உழவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்கவும், மாற்றுப்பொருளை வாங்கவும் முச்சந்தி, நாற்சந்தி என மக்கள் கூடும் இடங்களில் கடை விரித்துப் பொது வணிகமாக்கினர்.

    5. கருக்கொண்ட பச்சைப்பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?
    விடைகுறிப்பு:

            கருக்கொண்ட பச்சைப்பாம்பு நெற்பயிர்கள் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது.

    6. அள்ளல் பழனத்து அரக்காம்பால் வாயவிழ இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?
    விடைகுறிப்பு:

    அள்ளல் – சேறு
    பழனம் – வயல்

    7. ‘டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?
    விடைகுறிப்பு:

            நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க, ஜெர்மனியில் இருந்து சிங்கப்பூர் வந்தார். 1943-ஆம் ஆண்டு சூலை மாதம் 9ஆம் நாள் பொறுப்பை ஏற்கும்போது டெல்லி நோக்கிச் செல்லுங்கள்’ (டெல்லி சலோ) எனப் போர் முழக்கம் செய்தார்.

    இ) சிறு வினா

    1. குறிப்பு வரைக: டோக்கியோ கேடட்ஸ்.
    விடைகுறிப்பு:

                இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.

                இரண்டாம் உலகப் போர்ச்சூழலில் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பர்மாவில் இருந்து காட்டு வழியாகப் பயணம் செய்து சயாம் மரண ரயில் பாதையைக் கடந்து, படகு வழியாகத் தப்பி, கப்பல் ஒன்றில் ஏறி, சீறும் அைைலகளில் சிக்கித் தவித்து 45 பேரும் ஜப்பானின் கியூசு தீவை அடைந்து பயிற்சி பெற்றனர்.

                பனிபடர்ந்த மைதானத்தில் காலை 5 மணிக்கு குளிர் ஜீரோ (சுழியம்) டிகிரிக்கும் கீழ் இருக்கும் நிலையில் சிறப்புப் பயிற்சிகள் பெற்றனர். இவர்களே டோக்கியோ கேடட்ஸ் என்று அழைக்கப்பட்டனர்.

    2. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.
    விடைகுறிப்பு:
     
                இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு பகுதி கார்கில். ஸ்ரீநகரையும் லே நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பகுதி. பனிபடர்ந்த இமயமலைப் பகுதி எப்பொழுதும் குளிர் சுழியத்திற்கு (-) கீழ்தான் இருக்கும்.

                1999ஆம் ஆண்டு குளிர்காலத்தில் -20° குளிர்நிலவிய நிலையில் இந்திய இராணுவம் படைகளை மலை உச்சியில் இருந்து கீழே இறக்கியது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் கார்கிலில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவினர். 
     
                மாடு மேய்ப்போர் பாகிஸ்தான் இராணுவத்தினரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்திய ராணுவ கேப்டன் சவுரப் காலியாவிடம் தெரிவித்தனர். இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப்படை அசுரவேக தாக்குதலைத் தொடுத்தது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்கு சரக்கு கப்பல்கள் செல்ல முடியாதபடி நடுக்கடலில் தடுத்து இந்திய கடற்படை.

                போர் விமானங்களும் குண்டுகளை வீசின. மிக் 27, மிக் 21, எம்.ஐ. 17 ஆகிய 3 விமானங்களை இந்தியா இழந்தது. பாகிஸ்தான் ராணுவ வீரர்களில் 4000 பேரும் இந்திய தரப்பில் 527 பேரும் பலியானார்கள். போர் முடிவில் கார்கில் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. 
     
                போர் முடிவுக்கு வந்த ஜூலை 26 கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களால் தான் நாம் நிம்மதியாக உறங்க முடிகிறது. பேரிடர் காலங்களில் நிலைமையைச் சமாளிக்க முடிகிறது.

    3. “மாகால் எடுத்த முந்நீர் போல” – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
    விடைகுறிப்பு:
     
    இடம்:
    மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

    பொருள் :
    மதுரையின் வளங்களையும், விழாக்களையும் பற்றிக் குறிப்பிடும் போது புலவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

    விளக்கம்:
    ஆறு போன்ற தெருக்களில் பல்வேறு பொருள்களை வாங்க வந்த பல்வேறு மொழி பேசும் மக்களின் ஒலியோடு விழாக்கள் பற்றிய அறிவிப்புகள் ஒலிக்கின்றன. “முரசறைவோரின் முழக்கம், பெருங்காற்று புகுந்த கடலொலி போல்” ஒலிக்கிறது. இதனையே “மாகால் எடுத்த முந்நீர் போல” என்றார் மாங்குடி மருதனார்.

    4. தற்குறிப்பேற்ற அணியைச் சான்றுடன் விளக்குக.
    விடைகுறிப்பு:

    அணி விளக்கம்:
    இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி. (தன் + குறிப்பு + ஏற்றம் + அணி)

    எ.கா:
    அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
    வெள்ளம் தீப் பட்ட(து) எனவெரீஇப்புன்ளினம்தம்
    கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
    நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

    அணிப் பொருத்தம்:
                சேறுபட்ட, நீர்வளம் மிகுந்த வயல் பகுதிகளில், பொய்கைகளில் செவ்வாம்பல் மலர் விரிவது இயல்பான நிகழ்வு. இதைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்து விட்டதாக எண்ணியதாக கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக் கூறியதால் தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

    5. சேர, சோழ, பாண்டி நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.
    விடைகுறிப்பு:

    சேரநாடு:
                சேறுபட்ட நீர்வளம் மிகுந்த வயல்பகுதிகளில் அரக்கு நிறம்கொண்ட செவ்வாம்பல் மலர்கள் மெல்ல தம் வாயவிழ்ந்து விரிந்தன. அவற்றைக் கண்ட நீர்ப்பறவைகள் வெள்ளத்தில் தீப்பிடித்தது என எண்ணி தம் தமது கைகளான சிறகுகளைப் படபடவென அடித்து, தம் குஞ்சுகளைத் தீயினின்று காப்பாற்றும் பொருட்டு அணைத்துக்கொண்டன. இப்பறவைகளின் இத்தகு ஆரவாரம் தவிர, மக்கள் துயரமிகுதியால் செய்யும் ஆரவாரத்தைச் சேரநாட்டில் காண இயலாது.

    சோழநாடு:
                சோழநாடு ஏர்க்களச்சிறப்பையும், போர்க்களச் சிறப்பையும் கொண்டிருந்தது. வயலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போரின் மீது ஏறி நி;ன்று கொண்டு அருகில் இருக்கும் உழவர்களைப் பார்த்து “நாவலோ” என்று கூவி அழைப்பர் நாவலோ “இந்நாள் வாழ்க சிறக்க” என்று பொருள்) இவ்வாறு வயல் வளம் மிகுந்ததாகக் காணப்பட்டது சோழநாடாகும்.

    பாண்டியநாடு:
                வெண்கொற்றக்குடையை உடைய தென்னவனாகிய பாண்டியனுடைய ஒளி பொருந்திய நாட்டின்கண் எங்கு நோக்கினும் முத்துக்குவியலே காணப்பட்டது. வெண்சங்குகள் மணலில் ஈனுகின்ற இளஞ்சினையும், குவிந்துகிடக்கின்ற புன்னை மரத்தின் அரும்புகளும், பாக்கு மரங்களின் பாளைகளில் இருந்து சிந்திய மணிகளும் முத்துக்குவியல்களைப்போலவே காட்சியளித்தன என்று முத்தொள்ளாயிரம் மூன்று நாடுகளின் வளங்களையும் எடுத்துக் கூறுகிறது.

    6. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?
    விடைகுறிப்பு:

                வளம் நிறைந்த ஏமாங்கத நாட்டில் உள்ள ஊர்களில் நாள்தோறும் ஆயிரம் வகையான உணவுகள் இருக்கும்.
    பசி என்று வருவோருக்கும், நாடி வருவோருக்கும் அறச்சாலைகள் ஆயிரம் இருக்க்கின்றன.

                மகளிர் தம்மை ஒப்பனை செய்ய மணிமாடங்கள் ஆயிரம் இருக்கின்றன.
    செய்தொழிலில் சோம்பல் இல்லாத கம்மியர் ஆயிரமாயிரமாய் இருக்கின்றனர்.
    ஏமாங்கத நாட்டிலே இல்லாதவை இல்லை என்னும் வகையில் ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் குறைவின்றி நிகழ்கின்றன.

    7.  பண்பாகு பெயர், தொழிலாகுபெயர் – விளக்குக.
    விடைகுறிப்பு:
     
    பண்பாகு பெயர்:
    ‘மஞ்சள் பூசினாள்’
    ‘மஞ்சள்’ என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகி வந்துள்ளது.

    தொழிலாகு பெயர்:
    ‘வற்றல் தின்றான்’
    ‘வற்றல்’ என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகிவந்துள்ளது.

    ஈ) நெடு வினா

    1. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரை வழி நிறுவுக.
    விடைகுறிப்பு:


    முன்னுரை:
                இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் எனில் மிகையாகாது.

                நேதாஜி அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது.

    தூண்கள்:
                1943ம் ஆண்டு, நேதாஜி “டெல்லி சலோ” என்ற முழக்கத்தை முன் வைத்தார். இவரின் முழக்கம் அனைவரின் மனதிலும் பசுமரத்தாணி போல பதிந்தது. இந்திய தேசிய இராணுவப்படை, பிரித்தானிய அரசை எதிர்த்த போது தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி, இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த பெருமைக்குரிய தமிழர் ‘பசும்பொன் முத்துராமலிங்கதேவர்’ ஆவார்.

                பசும்பொன் அவர்களின் தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு வியந்த தில்லான் என்பவர், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் தமிழர்கள் தான்” என்றார். அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்திய தேசிய இராணுவத்தைத் தாங்கும் தூண்களாகத் தமிழர்கள் திகழ்ந்தனர்.

    இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்:
                இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார். இப்படையில் தமிழ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். 
     
                இதில் தலைசிறந்த பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ் பெண்களே ஆவர். நேதாஜி அமைத்த தற்காலிக அரசிலும் கேப்டன் லட்சுமி இன்றியமையாப் பொறுப்பு வகித்து பணியாற்றி இந்திய தேசிய இராணுவத்தின் தூணாக இருந்தார் எனில் மிகையாகாது.

    இரண்டாம் உலகப்போரில் தமிழர்:
                இரண்டாம் உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார்.
    “தமிழர்களின் இரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது” என்றார் சர்ச்சில், அதற்கு பதில் அளித்த நேதாஜி, “இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும் என்றார்.

    மரணம் பெரிதன்று:
                1943-45 ஆம் ஆண்டுகளில் பதினெட்டு தமிழ் இளைஞர்கள் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர். தூக்கில் உயிரை விடும்பொழுது கூட தமிழ் இளைஞர்கள், “வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீத்த முழுநிலவினைப்போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” என்று கூறி இன்முகத்துடன் உயிர் நீத்தனர்.

    நேதாஜியின் பாராட்டு:
                இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும் செய்த தியாகங்களையும் கண்டு வியந்த நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும்” என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும் வண்ணம் நம் தமிழரின் இராணுவப்பணி அமைந்திருந்தது.

    முடிவுரை:
                தாயக நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் தமிழர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தம் இன்னுயிரைத் தியாகம் செய்த முகம் தெரியாத வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அஞ்சாத வீரத்தையும், நாட்டுப்பற்றையும், என்றென்றும் போற்றுவதோடு, இராணுவ வீரர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற சுதந்திரத்தைப் பேணுவதும், பயங்கரவாத சக்திகளைத் தடுப்பதும் நம் கடமைகளாகும்.

    2. ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.
    விடைகுறிப்பு:


    முன்னுரை:
                சீவகசிந்தாமணியில் “நாமகள் இலம்பகத்தில்” நாட்டு வளம் என்னும் பகுதியில் ஏமாங்கத நாட்டின் வளம், திருத்தக்கதேவரால் நயம்பட உரைக்கப்பட்டுள்ளது. ஏமாங்கதநாட்டு வளம் போலவே எம் ஊரின் வளங்களும் உள்ளன எனில் மிகையாகாது.

    வளம் மிக்க நெருங்கிய தோப்புகள்:
                ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த வளமான நிகழ்வு போலவே எம் ஊரிலும் அடர்ந்த தோப்புகளில் நிகழ்ந்தது.

                தென்னை மரத்திலிருந்து முற்றிய தேங்காய் விழுகின்றது. அத்தேங்காய் நிலத்தை வந்தடையும்முன் விழும்வேகத்தில் அருகிருந்த பாக்கு மரத்தின் உச்சியின் உள்ள தேனடையைக் கிழித்து, தேனடையோடு பலாமரத்தில் உள்ள பலாப்பழத்தினை பிளந்து, தேங்காய், தேனடை, பலாச்சுளைகளோடு, வாழைப்பழங்களையும் உதிரச்செய்கிறது. இவ்வாறு ஏமாங்கத நாட்டை போலவே எம் ஊரும் முக்கனி வளமும், தென்னை மரங்களும், பாக்கு மரங்களும் நிறைந்தனவாய்க் காணப்படுகின்றது.

    மண்வீசும் வயல்வளம்:
                ஏமாங்கத நாட்டைப்போலவே, நீர்நிலைகள் சூழ்ந்த வயல் பகுதிகள் உள்ளன. அந்நீர்நிலைகளில் அழகான கொம்புகளையுடைய ஆண் எருமைகளும், வலிமையான நேரிய கொம்புகளை உடைய எருதுகளும் பேரொலி எழுப்பி நீந்துகின்றன. 
     
                அவ்வொலியால் அந்நீர்நிலையில் உள்ள பொறிகளையுடைய வரால் மீன் இனங்கள் கலைந்து ஓடுகின்றன. இவ்வாறு எருமைகளும், எருதுகளும், நீரைக் கலக்குவதாலும், சேறுமணமும், நீந்தும் மீன் மணமும் கலந்த வயல்பகுதிகளில் வெள்ளமென உழவர்கள் உழுதிருந்தனர்.

    இறைஞ்சி வணங்கும் நெற்பயிர்கள்:
                கருக்கொண்ட பச்சைப்பாம்பைப்போல நெற்பயிர்கள் திரட்சியான தோற்றம் கொண்டுள்ளன. செல்வம் பெற்று பக்குவம் இல்லாது செருக்குடன் இருக்கும் மேல் அல்லார் போல, கதிர்விட்டு நிமிர்ந்துநிற்கின்றன நெற்பயிர்கள்.
    அப்பயிர்களில் உள்ள நெற்கதிர்கள் முற்றியவுடன், தெளிந்த நூல் பல கற்றோரின் பணிவைப்போல பணிந்து, இறைஞ்சி தலைசாய்ந்து நிற்கும் கவின் மிகு காட்சியையும் எம் ஊரில் காணலாம்.

    ஆயிரம் விழாக்கள்:
                வளம்மிக்க எம் ஊரில் ஆயிரம் வகையான உணவு உண்டு. பசியுடன் நாடி வருவோருக்கு உணவு வழங்கும் அறச்சாலைகள் ஆயிரம் உண்டு. மகளிர் ஒப்பனை செய்துகொள்ளும் மணிமாடங்கள் ஆயிரம் உண்டு. சோம்பல் இன்றி தொழில் புரியும் கம்மியர்களும் ஆயிரக்கணக்கானோர் உண்டு. அதனால் திருமணங்களும், விழாக்களும் ஆயிரமாயிரமாய் நடைபெறுகின்றன.

    முடிவுரை:
                இவ்வாறு ஏமாங்கத நாட்டின் வளம் போலவே, வளமும்;, சிறப்பும் கொண்டனவாய் எம் ஊரும் உள்ளது என்பதில் பெருமிதமும் மகிழ்வும் கொள்கிறேன்.

    3. எங்கள் ஊர் சந்தை என்னும் தலைப்பில் நாளிதழ் செய்தி ஒன்றை எழுதுக.
    விடைகுறிப்பு:


    நாளிதழ் செய்தி
    மானூர் சந்தையின் புகழ்:
    ஜூன் 16 – நம் மக்களின் வணிக முறைகளில் ஒன்று சந்தை, தினசரி சந்தை, வாரச் சந்தை என இரண்டு உண்டு. எங்கள் ஊரில் வாரச் சந்தைதான் வாரத்தில் ஒரு நாள் (சனிக்கிழமை) மட்டும் கூடும். 
     
                எங்கள் ஊர் சந்தையில் எம் கிராமத்திலும், பக்கத்து கிராமங்களிலும் விளையும் காய்கறி, கீரை, தானிய வகைகள் விற்பனைக்கு வரும். பக்கத்து மலைப்பகுதியில் இருந்து மிளகு, மல்லி, சீரகம் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

                காய்கறிகள், தானியவகைகள், மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் ஈயம், மண், இரும்பு பாத்திரங்கள் தோட்ட வேலை செய்வதற்கு உரிய களைக்கொத்தி, மண்வெட்டி, மேலும் துணி மணி வகைகள் என அனைத்தும் எம் ஊர் சந்தையில் வாங்கலாம்.

                நூற்றுக்கணக்கான கிராம மக்களுக்கு நேர்மையான விலையில் அனைத்தும் கிடைக்கும். என் தாத்தா சிறு வயதில் சந்தைக்குச் செல்லும் பொழுது திருவிழாவிற்குப் போவது போல் மகிழ்ச்சியாய்ச் செல்வாராம். ஏனெனில் அக்காலத்தில் கழைக்கூத்து, பொம்மலாட்டம் கூட சந்தைவெளியில் உண்டாம்.

                எங்கள் ஊர்சந்தையிலே ஆடு, மாடு வாங்குவதை நினைச்சாலே வேடிக்கையா இருக்கும். துண்டைப் போட்டு கைகளை மறைச்சு விலைபேசுவது ஒரு பக்கம், பல், வால், கொம்பைப் பார்த்து விலை பேசுவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்தியைக் கையாள்வர் சந்தை விற்கும் வாங்கும் வணிகத்தளம் மட்டுமல்ல, உறவுகளுக்கு உயிரூட்டும் இடமாகவும் இருக்கும்.
    வாங்க! வாங்க! என கல்யாண வீடு போல வரவேற்று நலம் விசாரித்த பின்புதான் வியாபாரம் தொடங்கும்.

                எம் ஊர் சந்தையில் வியாபாரிக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு என்பது வெறுமனே பொருளை விற்று வாங்கும் உறவாக மட்டும் இருப்பதல்ல. சந்தையில் பழகியவர்கள் சம்பந்தியான கதைகளும் உண்டு.
    சந்தையின் சாதாரண விசாரிப்புகளிலும் நேசம் உண்டு. நேர்மை உண்டு.
    நீங்களும் ஒருமுறை எங்கள் சந்தைக்கு வந்துதான் பாருங்களேன்.


    II. மொழியை ஆள்வோம்

    அ) படித்து சுவைக்க.

    ஆ) மொழி பெயர்க்க.

    Conversation between two friends meeting by chance at a mall.
    Aruna : Hi! Vanmathi! It’sgreat to see you after a long time.
    Vanmathi : It’s great seeing you. How long has it been? It must be more than 6 months. I’m doing good. How about you?
    Aruna : Fine. I have come with my parents. They are inside the grocery shop. What about you?
    Vanmathi : I came with my father. He has gone to buy tickets for a 3D movie.
    Aruna : Which movie?
    Vanmathi : Welcome to the jungle.
    Aruna : Great! I am going to ask my parents to take me to that movie.

    விடைகுறிப்பு:

    இரண்டு தோழிகள் வணிகவளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது நடந்த உரையாடல்.


    அருணா: வான்மதி, என்ன ஒரு ஆச்சர்யம் நீண்ட நாட்களுக்குப்பின் உன்னைப் பார்க்கிறேன், மகிழ்ச்சி .
    வான்மதி : எனக்கும் மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் தான்! உன்னைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய்.
    அருணா : நான் என் பெற்றோருடன் வந்தேன். அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் உள்ள பிரிவில் உள்ளார்கள். நீ..?
    வான்மதி : நான் என் தந்தையுடன் வந்தேன் இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண (3D) திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்க சென்றிருக்கிறார்.
    அருணா : என்ன படம்?
    வான்மதி : காட்டுக்குள் வரவேற்பு
    அருணா : ஓ… நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்க போகின்றேன்.

    இ) பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.

    1. புத்தகம் படிக்கலாம் (நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)
    விடைகுறிப்பு:

    அ) நல்ல புத்தகங்கள் படிக்கலாம்.
    ஆ) நல்ல புத்தகத்தில் ஆழ்ந்த கருத்துகளைப் படிக்கலாம்.
    இ) நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்.
    ஈ) நல்ல புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து படிக்கலாம்.
    உ) நல்ல புத்தகங்களை நாளும் மகிழ்ந்து, உணர்ந்து படிக்கலாம்.

    2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)
    விடைகுறிப்பு:

    அ) மாலையில் அனைவருடன் சேர்ந்து விளையாடுவது நன்று.
    ஆ) மாலையில் திடலில் ஓடியாடி விளையாடுவது நன்று.

    ஈ) பிழை நீக்குக .

    பெருந்தலைவர் காமராசர் பள்ளிப்படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

    விடைகுறிப்பு:

    பெருந்தலைவர் காமராசர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச்செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது, எப்போது அறையைவிட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்கு செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்து வைத்துக் கொள்வார்.

    உ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆகுபெயர்களை  அட்டவணைப்படுத்துக.

    டிசம்பரைத் தலையில் சூடிக் கொண்டாள்:
    டிசம்பர் என்னும் காலப்பெயர் பூவுக்கு ஆகி வந்ததால் (காலவாகு பெயர்)

    பாலை இறக்கினாள்:

    பால் கொதித்த பாத்திரத்தை இறக்கினாள். கருவி பாலுக்கு ஆகி வந்தது. (கருவியாகு பெயர்)

    தலைக்கு இருநூறு:
    ஒவ்வொருவருக்கும் என்பதைத் தலை என்னும் சினைப் பெயரால் உணர்த்துகிறது (சினையாகு பெயர்)

    சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும்:
    5 கிலோ அரிசியைக் குறிக்க.... எடுத்து அளந்து தருவது (நிறுத்து) (எடுத்தலளவை ஆகுபெயர்)

    தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்கவேண்டும்:
    முகந்து அளக்கும் எண்ணெய் (முகத்தலளவையாகு பெயர்)

    துணி உலர்த்த நான்கு மீட்டர்:

    நீட்டி அளக்கும் துணி உலர்த்தும் கொடியைக் குறிக்கும் (நீட்டலளவையாகு பெயர்)

    சிவசங்கரியை படித்து முடிக்க வேண்டும்:

    சிவசங்கரி நூலைக் குறிக்கும்.....(கருத்தாவாகு பெயர்)

    ஊ) பயண அனுபவங்களை விவரிக்க.

    ‘எனது பயணம்’ என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.
    விடைகுறிப்பு:
     
            இந்த ஆண்டு நான் பயணம் மேற்கொண்ட இடம் வயநாடு ஆகும். கேரளாவின் வற்றாத அழகு கொட்டிக்கிடக்கும் பகுதி இது. எங்கு திரும்பினும் பச்சைப் பசேல் தான். கடல் மட்டத்தில் இருந்து 700 முதல் 2100 மீட்டர் உயரத்தில் அமைந்த பகுதி இது. இயற்கை அன்னை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க பகுதி.
    வயநாடு மாவட்டத்தில் கல்பெற்றா, மானந்தவாடி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவை.

            இவ்விடங்களில் விலங்குகளின் சரணாலயங்கள் உண்டு. துள்ளித் திரியும் மான் கூட்டம், கூட்டம் கூட்டமாய் செல்லும் யானைகள், எங்கோ கேட்கும் பறவைகள் கரையும் ஓசை என மனதுக்கு இன்பம் தரும் இடம் ஆகும்.

            கல்பெற்றாவில் இருந்து சிறிது தூரம் சென்றால் செம்ப்ரா மலை முகடு உள்ளது. இது வயநாட்டின் உயரமான மலை உச்சியாகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடமாகும். கல்பெற்றாவில் இருந்து 15 கல் தொலைவில் கரலாட் ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி செய்து கொண்டு ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து நாங்கள் குழந்தைகளாகி மகிழ்ந்தோம். வயநாட்டின் அழகுக்கு அழகு சேர்க்கும் அருவிகள் பல உண்டு. அவற்றுள் சிப்பாரா அருவி மிகப் புகழ் பெற்றது.

            100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராகக் கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள் கண்களையும், கருத்தையும் கொள்ளை கொள்கின்றன. அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழ்ந்து புத்துணர்வு பெற்றோம். இங்கு அபூர்வ மூலிகைகள், தங்குவதற்கு மரவீடுகள், இரவில் மிரளச் செய்யும் விலங்குகள் கூட்டம் என நம்மை இன்னொரு உலகுக்கு அழைத்துச் செல்லும். நீங்களும் ஒரு முறை சென்று வரலாமே.

            “இயற்கை ஆட்சி செய்யும் இவ்விடம் அனைவருக்கும் பிடிக்கும்”.

    எ) நயம் பாராட்டுக.

    வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்
    வளைந்துசெல் கால்களால் ஆறே!
    அயலுள ஓடைத் தாமரை கொட்டி
    ஆம்பலின் இதழ்களை விரித்தாய்
    கயலிடைச் செங்கண்கருவரால் வாளை
    கரைவளர் தென்னையில் பாயப்
    பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும்
    பெருங்குளம் நிறைந்து விட்டாயே! 
            – வாணிதாசன்
    விடைகுறிப்பு:

    முன்னுரை:
        தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளன. அவை கற்போரின் மனத்தைப் பெரிதும் கவர வல்லன. அந்த வகையில் வாணிதாசன் பாடல் ஒன்றிற்கு அமைந்துள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.

    திரண்ட கருத்து:
        வளைந்து செல்லும் கால்வாய்கள் மூலம் ஆறே வயல்வெளியில் புகுந்தாய் மணிபோன்ற கதிர்களை விளையச் செய்தாய். அருகில் உள்ள ஓடைகள் குளங்களை நிறைத்தாய். தாமரை கொட்டி, ஆம்பல் மலர்களின் இதழ்களை விரியச்செய்தாய். 
        சிவந்த கண்களையுடைய கருமையுடைய வரால், வாளை மீன்கள் கரையில் ஓங்கி வளர்ந்த தென்னையில் பாய்ந்து விளையாடுகின்ற நீர் நிறைந்த பெருங்குளங்கள் நிலமெங்கும் நிறையச் செய்து, நிலத்தில் ஒரு வானம் இருப்பதுபோல தோன்றச் செய்கிறாய்.

    மையக்கருத்து:
        ஆறு, கால்வாய்கள் நீர்நிலைகளை நிரப்பி, நிலத்தைச் செழிக்க செய்வதோடு நிலத்தில் நிறைந்திருக்கும் நீரிலே வானம் தெரிவதால் பெயரிடைப்பட்ட வானெனத் தோன்றும் என்று இயற்கை வளங்களை மையமாக வைத்துப் பாடியுள்ளார் வாணிதாசன்.

    எதுகைநயம்:
        செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
    சான்று:
    வயலிடை
    அயலுள்

    மோனைநயம்:
        செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
    சான்று:
    வயலிடை – வளைந்து

    இயைபுநயம்:
        செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும்.
    சான்று:
    விளைத்தாய் – விரித்தாய்

    அணிநயம்:
        செய்யுளின் அழகுக்குச் சேர்ப்பது அணியே ஆகும். அணி இல்லாத பாடல் அழகில்லா மங்கை போலும். பெயரிடைப்பட்ட வானெனத் தோன்றும் என்னும் அடியில் உவமை அணி அமைந்து இச்செய்யுளின் அழகுக்கு அழகு சேர்த்துள்ளது.

    சுவை நயம்:

        இப்பாடலைப் படிக்கப் படிக்க, மனத்தில் மகிழ்வு உண்டாவதால் “உவகைச் சுவை” அமைந்துள்ளது.

    முடிவுரை:

        வாணிதாசன் இயற்கைப் புனைவுகளைப் பாடுவதில் வல்லவர். அவரது கவித்திறனுக்கு இப்பாடல் சான்றாக அமைவதோடு, அனைத்து நயங்களையும் பெற்று ஒளிர்கிறது.
     

    III. மொழியோடு விளையாடு

    அ) புதிர் அவிழ்க்க.

    விடைகுறிப்பு:
    அம்புலி 
     

    ஆ) பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க.

    (இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை]
    மானாமதுரை ஒரு அழகான _________ நீண்டவயல்களும் _________ களும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் _________ பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் _________ வீசிட சோலைப் _________ களின் _________ கேட்போரைப் _________ அடையச் செய்கிறது.

    விடைகுறிப்பு:
     
    மானாமதுரை ஒரு அழகான பேரூர். நீண்டவயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் பேரொளி வீசிட சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போரைப் பேரின்பம் அடையச் செய்கிறது.


    இ) வட்டதிற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக. 

    விடைகுறிப்பு:
    கால்
    காலை
    கான்
    புத்தகம்
    புல்
    புத்தி
    அகல்
    அவல்
    கல்
    அதிகம்
    கறி
    தறி
    புதன்
    வலை
    அறிவன்
    கலை
    கத்தி
    கவலை
    காவல்
    அலை
    தில்லை
     

    ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

    மலை யெனவும் (குறிஞ்சி)
    முல்லைவனம் எனவும்
    மருத நிலமாம் வயல் எனவும்
    நெய்தலாம் கடலும்
    பாலையாம் வெயிலும் என உன்
    நிலத்தைப் பிரித்தாய்
    முல்லைச்சரங்கள் தொடுக்கும்
    கரங்கள் ஆடல் கலைகளையும் நடத்தும்
    முல்லையும் கொட்டியும் ஆம்பலும்
    இசை முழங்கி பாடும்
    நீர் நிறை கரைகளில்
    வளர் மரங்களில்
    பைங்கிளியும் மணிப்புறாவும் மனம்
    மயக்கும் தம் இசையால்
    சிறுபானை தொடங்கி உயர்
    கோபுரம் வரை மின்னும் கலைவண்ணம்
    இப்பாடல் உணர்த்தும் தமிழ்
    கலாச்சாரத்தை மக்கள்
    மறவாமல் இருந்தால் போதும்.
     

    IV. செயல் திட்டம்

    ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களின் வரவு செலவு பட்டியலை உருவாக்குக.
    விடைகுறிப்பு:

    ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப்பொருட்கள் இவ்வார வரவு = ₹2000/-

    பொருள்கள்
    கிலோ
    அரிசி
    5 கிலோ
    200.00
    து.பருப்பு
    ½ கிலோ
    45.00
    உ.பருப்பு
    ½ கிலோ
    50.00
    சர்க்கரை
    ½ கிலோ
    25.00
    டீத்தூள்
    100 கிராம்
    55.00
    மிளகு
    50 கிராம்
    40.00
    சீரகம்
    50 கிராம்
    25.00
    வெந்தயம்
    50 கிராம்
    20.00
    பால்
    4 லிட்டர்
    160.00
    எண்ணெய்
    ½ லிட்டர்
    60.00
    ரவை
    ½ கிலோ
    25.00
    சலவைத்தூள்
    ¼ கிலோ
    40.00
    காய்கறி வகைகள் தேங்காய்
     
    200.00
    பழங்கள்
     
    300.00
    மீதத் தொகை = வரவு – செலவு = ₹ 2000.00 – ₹ 1245.00  = ₹ 755.00
     

    அ) அகராதியில் காண்க.

    ஈகை, குறும்பு, கோன், புகல், மொய்ம்பு
    விடைகுறிப்பு:
    சொல் – பொருள்
    ஈகை – கொடை, பொன், கற்பகமரம், காடை, காற்று, மேகம், கொடுத்தல்.
    குறும்பு – குறுநில மன்னர், பாலை நில ஊர், பகைவர், குறும்புத்தனம்.
    கோன் – அரசன், தலைவன் இடையர்பட்டப் பெயர்.
    புகல் – புகுகை, தஞ்சம், செல், விருப்பம், வெற்றி, புகழ், போக்கு.
    மொய்ம்பு – தோள், வலிமை.
     

    V. நிற்க அதற்குத் தக...

    அ) சமுகத்திற்கு எனது பணிகள்

    சமூகத்திற்கு எனது பணிகள் 
    அ) குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
    ஆ) தண்ணீர் வீணாவதை எங்கு கண்டாலும் தடுப்பேன்.
    இ) என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வேன்.
    _____________________________________________________
    _____________________________________________________
    _____________________________________________________

    விடைகுறிப்பு:
    சமூகத்திற்கு எனது பணிகள்
    அ) குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
    ஆ) தண்ணீர் வீணாவதை எங்கு கண்டாலும் தடுப்பேன்.
    இ) என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வேன்.
    ஈ) மழைநீர் சேகரிப்பின் இன்றியமையாமையை வலியுறுத்துவேன்.
    உ) பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவேன்.
    ஊ) இயற்கையைப் பேணிப் பாதுகாக்க மரங்களை நடுவேன்.
    எ) சாலை விதிகளைப் பின்பற்றுவேன். பிறரையும் பின்பற்ற செய்வேன்.
    ஏ) நம் கலைகளையும் பண்பாட்டையும் பேணிக்காக்க என்னால் இயன்றதைச் செய்வேன்.

    ஆ) கலைச்சொல் அறிவோம்

    இந்திய தேசிய இராணுவம் - Indian National Army.
    பண்டமாற்றுமுறை - Commodity Exchange.
    காய்கறி வடிசாறு – Vegetable Soup.
    செவ்வியல் இலக்கியம் - Classical Literature.
    கரும்புச் சாறு - Sugarcane Juice.
     

     VI. அறிவை விரிவு செய்

    ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு. மேத்தா
    தமிழ்ப் பழமொழிகள் - கி.வா. ஜகந்நாதன்
    இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) -  ச.தமிழ்ச்செல்வன்.
     
     
     
     
    விடைக் குறிப்பு தயாரித்தவர்:
     'Nallasiriyar' S. SETTU MATHARSHA,
    GRADUATE TEACHER IN TAMIL, 
    EKM A. G MATHARASA ISLAMIA HIGH SCHOOL, 
    ERODE 
     
     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive