1. ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தரராமசாமி கூறுவன யாவை?
ஜீவாவின் பேச்சுக்கலை அவர் பெற்ற வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தோடு அவர் பேசுகையில் வெளிப்படும் உத்திகளும் பேச்சை அமைக்கும் அழகும் வெகு நூதனமாகவும் நளினமாகவும் இருக்கும்.
பேச்சுக்கலையை விளக்கும் பாடப்புத்தகங்கள், எத்தனையோ விதிகள் கூறும். ஜீவா அவற்றை ஒருபோதும் பின்பற்றியதில்லை. அவருடைய பாணி இரவல்பாணி அன்று; கற்று அறிந்ததும் அன்று.
செய்திகளைக் குறித்து மக்களைக் குழப்பாமல் ஒரு சில கருத்துகளை விரிவாகச் சொல்லிப் புரிய வைத்துவிட்டால் போதும் என்பதே ஜீவாவின் எண்ணம். மக்களின் தரத்தையும் அனுபவ அறிவையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் நன்றாக அறிந்து பேசியவர் என்று சுந்தரராமசாமி தம் கருத்துகளை நயம்படக் கூறியுள்ளார்.
2. “உயர்தமிழை உயிரென்று போற்றுமின்கள்” - இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
இடம்: பாரதிதாசனார் இயற்றிய 'புரட்சிக்கவி' என்னும் சிற்றிலக்கியத்தில், அரசன் மகளின் காதலனும் கவிஞனுமான உதாரன், மரண தண்டனைத் தீர்ப்பைப் பெற்றான். அதனை நிறைவேற்றுவதற்குமுன் தலைப்பாகை அதிகாரி சில “பேச்சுப் பேசிடுக" என அனுமதி வழங்கியவுடன் உதாரன் பேசியதே இது.
பொருள்: உலகில் உயர்தமிழை, நம் உயிர் போன்று போற்றுவீர்களாக.
விளக்கம்: "தமிழ் அறிந்ததால் வேந்தன் என்னை அழைத்தான். தமிழ்க்கவி என்றே அவளும் என்னைக் காதலித்தாள். அமிழ்து என்று சொல்லப்படும் தமிழ், என் ஆவி அழிவதற்குக் காரணமாக இருந்தது என்று சமுதாயம் நினைத்து விடுமோ! ஐயகோ! தாய்மொழிக்குப் பழிவந்தால் எவ்வாறு பொறுப்பது. மக்களே உங்களை வேண்டிக் கேட்கிறேன். மாசில்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்" என்று தன் இறுதிப் பேச்சைப் பேசுகிறான்.
3. பெருங்காடு, உழுதுழுது - பிரித்துப் புணர்ச்சிவிதி எழுதுக.
அ) பெருங்காடு பெருமை + காடு
'ஈறுபோதல்' என்னும் விதிப்படி - 'பெரு + காடு' என ஆனது.
'இனம் மிகல்' என்னும் விதிப்படி 'பெருங்காடு'எனப் புணர்ந்தது.
ஆ) உழுதுழுது உழுது + உழுது
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்" என்னும் விதிப்படி - 'உழுத் + உழுது' என்றானது. “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி 'உழுதுழுது' எனப் புணர்ந்தது.
4. அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாகத் தமிழ்நதி கூறுகிறார் ?
- போரில் குண்டு மழை பொழிந்தது; நிலங்கள் அழிக்கப்பட்டன; மனிதர்கள் சிதறி ஒடினர்; அழிக்கப்பட்ட தாய்மண்ணில் பூ ஒன்று மலர்கிறது. அந்தப் பூவானது யாருமில்லாத நேரத்தில் அலைந்து திரிந்த யானையின் எச்சத்திலிருந்து முளைத்திருக்கலாம்.
- பெரும்பாலானோர் அழிக்கப்பட்ட நிலையிலும் எஞ்சியிருந்த மனிதர்களின் காலணியில் ஒட்டிக் கொண்ட விதையில் இருந்து முளைத்ததாக இருக்கலாம். இவ்வாறு அதிசய மலரின் பூச்செடியாக முளைத்ததாகத் தமிழ்நதி கூறுகிறார்.
ஈ) நெடு வினா
1. சுந்தர ராமசாமியின் 'காற்றில் கலந்த பேரோசை' என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக.
முன்னுரை :
ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொரிமுத்து, ஆற்றில் கிளையைப் போட்டாற்போல வாழ்ந்திருக்க வேண்டியவர்தான். ஆனால் அவரோ, இயற்கையின் விதிகளை மறுத்து ஜீவா என்னும் தலைவராக எதிர்நீச்சல் போடத் துணிந்தார். சொரிமுத்துவுக்கும் தலைவர் ஜீவாவுக்கும் உள்ள இடைவெளி கொஞ்ச தூரம் அல்ல. அவ்விடைவெளி பெரிது. அது குறித்து நாம் இக்கட்டுரையில் காண்போம்.
பேரோசையின் பேச்சு நடை :
பேச்சுக்கலை, அவர் பெற்ற வரம். அத்தோடு அவர் பேசுகையில் வெளிப்படும் உத்திகளும், பேச்சை அமைக்கும் அழகும் வெகுநூதனமாகவும் நளினமாகவும் இருக்கும். ஜீவாவின் பேச்சுப்பாணி இரவல்பாணி அன்று. கற்று அறிந்ததும் அல்ல. நாட்டு மக்களின் தரத்தையும், அனுபவ அறிவையும், பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் நன்றாகத் தெரிந்து கொண்ட ஒரு மனிதன். விஷயத்தைக் கலைநோக்கோடு அணுகிக் கற்பனையும் கலந்து நாளடைவில் வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுப்பாணி அது.
பேச்சில் வர்ண ஜாலங்கள்:
ஒருசில கருத்துகளை விரிவாகச் சொல்லிப் புரிய வைத்துவிட்டால் போதும் என்பதே ஜீவாவின் எண்ணம். வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல் இரண்டு கைப்பிடி விசயம் எடுத்துக்கொள்வார். மேடை மீதேறி அதற்கு நெருப்பு வைத்ததும் அதில் இருந்து வர்ண ஜாலங்கள் தோன்றும்.
மாணவன் என்னும் எண்ணம் :
பேச்சுக்கலை ஜீவாவின் காலடியில் விழுந்து கிடந்தது. 'நான் ஒரு பள்ளி மாணவன். படித்துக்கொண்டு இருக்கிறேன். படித்துக் கொண்டே இருப்பேன்' என்ற எண்ணம் அவர் மனத்தில் பசுமையாக இருந்தது. அவர் கரைத்துக் குடித்துவிட்ட விசயத்தைப் பற்றி ஒரு கற்றுக்குட்டி அவரிடம் பேசினாலும், அதையும் காது கொடுத்துக் கேட்பார். 'தனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்' என்ற எளிய உண்மையை அவர் மதித்தார்.
'வாழ்வு என் கையில்' எனும் நம்பிக்கை:
'என் வாழ்வு என் கைகளில்' என்று நம்பியவர் அவர். அவருடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கிறபோது, அவருடைய நம்பிக்கை பலித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடவுளின் முன்னேற்பாடுகளை, முடிந்த மட்டும் அவர் தகர்த்து எறிந்துவிட்டார்.
தொண்டர்களின் உள்ளங்களில்:
ஜீவா என்ற தொண்டன் தமது இறுதி மூச்சு நிற்பது வரையிலும் கர்ஜித்துக் கொண்டுதான் இருந்திருப்பான் என்பதில் அவரின் தொண்டர்களுக்கு எத்தனை நம்பிக்கை. எனவேதான், 'மூச்சு நின்றுவிட்டது' என்று சொன்னபோது 'பேச்சு நின்ற போதா?' எனத் திருப்பிக் கேட்கிறார்கள் என்கிறார் சுந்தர ராமசாமி. அவர், “ஜீவா தமது அரிய சேவையால் சர்வ சாதாரண உள்ளங்களில்கூட எழுப்பி இருக்கும் பேரோசைச் சித்திரம்தான் எத்தனை ஜீவகளையுடன் காட்சி தருகிறது” என்கிறார்.
முடிவுரை:
'உழுது விதைத்தால் நல்ல அறுவடை காண வேண்டும்' என்பதில் ஜீவாவுக்கு நிர்ப்பந்தங்கள் உண்டு. இந்தத் தேசத்தில் பேச்சு அதற்குரிய பயனைத் தரவேண்டும் என்றால், அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதும் ஜீவாவுக்குத் தெரியும். அத்தகு ஜீவாவின் பேச்சோசை காற்றில் கலந்த பேரோசையாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
2. பாரதிதாசன் ஒரு 'புரட்சிக்கவி' என்பதை உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.
முன்னுரை:
சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் புரட்சிகரமான கருத்துகளை வெளிப்படுத்தும் பாடல்களை இயற்றியவர் பாரதிதாசன். இவருடைய படைப்புகளுள் ஒன்றாகிய 'புரட்சிக்கவி' என்பதில், உதாரன் என்னும் கதைமாந்தன் வழியாக இவர் வெளிப்படுத்தும் புரட்சிப் பாங்கினை இக்கட்டுரையில் காண்போம்.
உருவாக்கியவர்கள் உழைப்பாளிகள்!
கொலைக்களத்தில் உதாரன், பெரியோரையும் பெற்றோரையும், இளைஞர்களையும் விளித்துப் பேசத் தொடங்குகிறான். இந்த நாடு, நீரோடை நிலம் கிழிக்க நெடுமரங்கள் நிறைந்த காடாகிப் பெருவிலங்குகளும் பாறைகளும் பருக்கைக் கற்களும் குன்றுகளும் குகைகளும் பாம்புக் கூட்டமும் நிறைந்த இடமாக இருந்தது. இத்தகைய பாழ்ப்பட்ட நிலத்தைப் போராடி உழைத்துப் புதுமையாகப் படைத்து, நகர்களை உண்டாக்கியது யாருடைய கரங்கள்? உழைப்பாளர் கரங்களே என்று உதாரன் பேசுவது, “இந்நகரின் ஆட்சி அதிகாரம் இதனை உருவாக்கிய உழைப்பாளிகளின் கரங்களுக்கே போய்ச்சேர வேண்டும். அரசனுக்கு அதிகாரம் செலுத்தத் துளியும் உரிமையில்லை” என்ற புரட்சிகரமான கருத்தைக் கேட்போரின் மனத்தில் பதிக்குமாறு பாரதிதாசன் இப்பாத்திரத்தைப் படைத்துள்ளார்.
உணவுப் பொருளை உண்டாக்கிய கைகள்:
மேலும் உதாரன் பேசுகின்றபோது, சிறிய கிராமங்களையும் அவற்றின் வயல் வரப்புகளையும் ஆறுதேக்கிய நீரை நல்வாய்க்காலில் வகைப்படுத்தி, உழுது உழைத்தது எவரின் தோள்கள்? உழவரின் தோள்கள். பூமியில் கல்லும் மலையும் பிளந்து. கனிம வளங்களை வெட்டி வெளியில் கொண்டு வந்ததும், கருவிகள் செய்ததும் யார் கரங்கள்? உழைப்பாளர் கரங்கள்.
நிலத்தடியில் பொன்துகளையும் கடலுக்கடியில் நன்முத்தையும் மூச்சடக்கி எடுத்துவந்து பொருளாதாரத்தை உயர்த்தியவர்கள் உழைப்பாளர்கள்! என உதாரன் பேசுகிறான்.
எனவே, “அவர்களே ஆள்வதற்கு முழுமையான
தகுதியை உடையவர்கள்”
என்னும் கருத்தைப் பாரதிதாசனார் உதாரன் உரையின்மூலம் வெளிப்படுத்துகிறார்.
அமுதத் தமிழைப் பழிக்காதீர்:
வாழ்வின் இறுதியில் நிற்கின்ற போதும் உதாரன் தமிழுக்காகப் பரிந்து பேசுகிறான். தமிழ் அறிந்ததால் வேந்தன் எனைத் தன் மகளுக்குக் கவிதை கற்பிக்க அழைத்தான். என் தமிழ்க் கவிதையால் அமுதவல்லியும் என்னைக் காதலித்தாள். 'உங்களை வேண்டிக் கேட்கிறேன்; குற்றம் இல்லாத தமிழை உயர் தமிழாகக் கருதி, உயிரெனப் போற்றுங்கள்' என்று வேண்டுகிறான். தமிழை இழித்துப் பேசுவோருக்கு இக்கருத்து இடியெனத் தாக்கியிருக்கும்.
மக்களாட்சியும் பொதுவுடைமையும்:
அரசன் மகள், தன் வாழ்நாளில் குடிமக்களுக்கு மக்களாட்சி உரிமையை வழங்கிப் பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைக்க எண்ணி இருந்தாள். விண்ணில் வாழும் விண்மீன் மண்ணில் எரிந்து வீழ்வதுபோல் தனிமனிதன் ஆளும் கொடிய ஆட்சியும் ஒருநாள் விழும். அதற்கு நாடு உருவாக என் குருதி எல்லாம் இந்த அன்பு நாட்டில் சிந்தட்டும்' என்று, உதாரன் பேசுகிறான். இப்பேச்சின் மூலம் அரசாட்சியை வீழ்த்தி மக்களாட்சியைக் கொண்டுவர வேண்டும் எனும் பாவேந்தரின் விருப்பமும், பிறகு பொதுவுடைமைச் சமுதாயம் படைக்க வேண்டும் என்ற அவரின் தாகமும் உலகிற்குப் புரட்சிக் கனலாக வெளிப்படுகிறது.
உதாரன் உரையால் மாற்றம்:
வாளின் கீழ், உதாரன் தலை குனிந்து நின்றதும் அமுதவல்லியின் கண்களின் கண்ணீர் வெள்ளம் பெருகியது. உதாரன் உரையைக் கேட்ட மக்கள் கொடுவாளைப் பறித்தார்கள். வேந்தன் ஓடிப் போனான். 'செல்வமும் உரிமையும் எல்லாம் நாட்டில் வாழ்வோருக்கே' என்று சட்டம் இயற்றப்பட்டது. இம்மாற்றத்திற்கு உதாரனின் உணர்ச்சியும் புரட்சியும் நிறைந்த உரையே காரணமாகும்.
முடிவுரை:
இவ்வாறு புரட்சிக்கவி காவியத்தில் பாவேந்தர் பாரதிதாசன், தன்னையே உதாரன் என்னும் மாந்தனாக உருவாக்கிப் புரட்சிமிகு கருத்துகளைப் பூமியில் விதைக்கின்றார்.
3. தமிழ்மொழிக்கு அயல்நாட்டவர்கள் ஆற்றிய அரும்பணிகளைத் தொகுத்துரைக்க.
அயல் நாடுகளுடனான தமிழரின் தொடர்புபோலத் தமிழ் நாட்டுடனான அயல் நாட்டவர் தொடர்பும் தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் வளம் சேர்த்துள்ளது. இராபர்ட் டி நொபிலி தமிழில் பல நூல்களை எழுதினார். ஐரோப்பியரால் அச்சகங்கள் உருவாயின; உரைநடை வளர்ச்சி பெற்றது. நவீன உரைநடைவரை அடித்தளமிட்டவர்கள் தமிழ் இலக்கணம், தமிழ்ச் சுவடிகள், தமிழ் எண்கணிதம், அறிவியல் சாத்திரங்களைச் சேகரித்துப் பாதுகாத்தனர்.
இத்தாலி நாட்டவரான வீரமாமுனிவர் தமிழ் மரபில் தேம்பாவணி காப்பியத்தையும் கலம்பகம் அம்மானை சிற்றிலக்கியங்களையும் தமிழில் எழுதியதோடு, தமிழ் எழுத்துகளில் சில சீர்திருத்தங்களையும் செய்து எளிமையாக மொழியைக் கற்க உதவினார். தமிழ்மொழியில் அகராதிமுறையை அறிமுகப்படுத்தினர் அயல்நாட்டவர். இராபர்ட் டி நொபிலி தொடங்கி வைத்த அகராதிக்கலை வீரமாமுனிவர், பெப்ரிசியசு, இராட்லர், வின்சுலோ முதலியோர் வளர்த்தெடுத்தனர்.
ஜெர்மானியரான பார்த்தலோமியா சீகன்பால்கு பனைஒலைச் சுவடிகளிலிருந்து தமிழ்நூல்களை மீட்டு அச்சு நூல்களாக்கினர். நீதிவெண்பா, கொன்றைவேந்தன், உலகநீதி நூல்களை ஜெர்மனியில் மொழிபெயர்த்து, தமிழின் செழுமையை மேற்கு உலகிற்கு எடுத்துக்காட்டினார்.
ஆங்கிலேயரான பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் திருக்குறள் அறத்துப்பாலை மொழிபெயர்த்து விளக்கம் எழுதினார். திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட்டார். எல்லீஸ் வெளியிட்ட 'திராவிடமொழிக் குடும்பம்' குறித்து ஆய்வு செய்து அயர்லாந்து நாட்டவரான இராபர்ட் கால்டுவெல் "வடமொழிக் கலப்பு இன்றித் தமிழ் தனித்து இயங்க வல்லது” என்னும் கருத்தை உலகிற்கு உணர்த்தினார்.
'அரிஸ்டாட்டில்கூடச் சொல்லாத அறிவுரைகள் வள்ளுவரால் கூறப்பட்டிருப்பதாக' வியந்த ஜி. யு. போப் திருக்குறள், நாலடியார், திருவாசகம் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் இலக்கிய வளத்தை உலகு அறியச் செய்தார். ஜெர்மானியரான இரேனியஸ் தமிழின் முதல் அறிவியல் நூலைப் 'பூமி சாஸ்திரம்' என எழுதினார். பூகோளம், சரித்திரம், இயற்கை, வான சாஸ்திரம், சூரிய மண்டலம், காலநூல், தர்க்கம் முதலான பாடநூல்களைத் தமிழில் எழுதி அளித்தார். தமிழில் கலைச்சொற்களை முதன்முதலில் இவரே உருவாக்கினார் எனலாம்.
தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநராகத் திகழ்ந்த செக் நாட்டவரான கமில் சுவெலபில், தமிழ்க்கடவுள் முருகப் பெருமானிடம் கொண்ட ஈடுபாட்டால் தான் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூலுக்கு 'தி ஸ்மைல் ஆஃப் முருகன்' எனப் பெயரிட்டார். திராவிட மொழி யியல், சங்க இலக்கியம், தமிழ் யாப்பு ஆகியன குறித்து ஆங்கிலத்திலும் தென்னிந்தியா பற்றிச் செக் மொழியிலும் எழுதியுள்ளார்.
இவ்வாறாக, அயல்நாட்டவர் தமிழ்மொழிக்கு அரும்பணிகள் பலவற்றை ஆற்றியுள்ளனர்.
II. மொழியை ஆள்வோம்
அ) சான்றோர் சித்திரம்
(சங்கரதாசு சுவாமிகள்)
நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல்வராகவும் விளங்கினார். பெரும்புலவர்கள், சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ் சாரப் பாராட்டியுள்ளனர். இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர், தம்முடைய 16ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார். இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24. வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் 'சந்தக் குழிப்புகளின்' சொற்சிலம்புகளைக் கண்டு, அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.
சங்கரதாசு சுவாமிகள், 'சமரச சன்மார்க்க சபை' என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா, நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ஈட்டினார். நாடக மேடை, தரம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை” என்னும் நாடக அமைப்பை உருவாக்கி, ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி. கே. எஸ். சகோதரர்கள். நாடகத்தின்மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் தம் சுவை மிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்' என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.
1. தமிழ்ச் சொல்லாக்குக சன்மார்க்கம், வித்துவ பால சபை.
சன்மார்க்கம் - ஆன்மிகநெறி
வித்துவ பால சபை - இளங்கலைஞர் மன்றம்
2. நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள் - அடிக்கோடிட்ட வினையாலணையும் பெயரை வினைமுற்றாக்கித் தொடரை எழுதுக.
நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய் சங்கரதாசு சுவாமிகள், திகழ்ந்தார்.
3. ஈட்டினார் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
ஈட்டு + இன் + ஆர்
ஈட்டு - பகுதி,
இன் - இறந்தகால இடைநிலை,
ஆர் - படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.
4. தன்னன்ன தானேன தன்னானே இந்தச் சந்தத்தில் பொருள் பொதிந்த இரண்டு அடிகள் கொண்ட பாடல் எழுதுக.
எ-கா : இந்திய நாட்டினில் வாழ்வதையே
இன்பமாய்க் கொண்டிடல் வேண்டுமப்பா......
வளமாய் வாழ்ந்திடப் பொருள் வேண்டும்
அதை ஈட்டிட நேர்மை மனம்வேண்டும்.
5. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் சிறப்புப் பெயருக்கான காரணத்தை அளிக்க.
நாடகத்தின்மூலமும், தம் சுவை மிகுந்த பாடல், உரையாடல் வழியேயும் மக்களுக்கு அறவொழுக் கத்தையும், தமிழின் பெருமையையும் உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என உளமகிழ்ந்து போற்றினர்.
ஆ) தமிழாக்கம் தருக.
Balu: Hi Velu, Good evening
Velu : Hi Balu. Good evening.
Balu: Yesterday you were watching the Republic day function the whole day.
Velu : Yes. I was touched by one award ceremony.
Balu : Which award?
Velu : Param vir Chakra award, highest award for army personnel.
Balu:Why were you touched?
Velu: Most of the awards were received by the wives of soldiers posthumously
Balu: Why? What do you mean by posthumous?
Velu: It means 'after death. Many soldiers had laid down their lives protecting the border of our Motherland. They have sacrificed their lives to save our Country. So that we can be free and safe.
விடைகுறிப்பு:
பாலு: நண்பா வேலு! மாலை வணக்கம்.
வேலு : நண்பா பாலு! மாலை வணக்கம்.
பாலு : நேற்று நீங்கள் குடியரசு நாள் விழா முழுவதையும் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள்.
வேலு: ஆமாம். ஒரு விருது வழங்கும் விழா என் மனத்தைத் தொட்டது.
பாலு: எந்த விருது?
வேலு : 'பரம்வீர் சக்ரா' விருது. இஃது இராணுவ வீரர்களுக்கான உயர்ந்த விருது.
பாலு : ஏன் மனத்தைத் தொட்டது?
வேலு : பெரும்பாலும் இராணுவ வீரர்களின் மனைவியரே அந்த விருதுகளை, வீரரின் இறப்பிற்குப் பிந்தைய விருதுகளாகப் பெற்றனர்.
பாலு: என்ன! இறப்பிற்குப் பிந்தைய விருதுகளா! அப்படியென்றால்?
வேலு: இறப்பிற்குப் பிந்தைய விருதுகள் என்றால், வீரர்களின் மறைவுக்குப்பின் வழங்கப்படுவது என்பது பொருள். நம் தாய்நாட்டின் எல்லையைக் காப்பதற்காக ஏராளமான இராணுவ வீரர்கள் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துள்ளனர். அவர்கள் நம் நாட்டைக் காப்பதற்காகத் தங்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் நாம் சுந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ முடிகிறது.
இ) மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
சான்று: எதிர் நீச்சல் -
வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் வந்தாலும், அவற்றைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு, வெற்றி பெற வேண்டும்.
1.சொந்தக்காலில் நிற்றல்:
குறைவான சம்பளம் பெறும் குடும்பத் தலைவர், சொந்தக்காலில் நிற்க இயலாமல் அவதிப்படுகின்றார்.
2. தாளம் போடுதல்:
அதிகாரியின் முட்டாள்தனமான பேச்சுகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் உதவியாளர்கள் தாளம் போடுகின்றனர்.
3. மதில்மேல் பூனை:
அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியம் வருமா வராதா என்பது, மதில்மேல் பூனை நிலையில் உள்ளது.
4. நிறைகுடம்:
புதிதாக வந்துள்ள எங்கள் பள்ளியின் முதல்வர் ஒரு நிறைகுடம்.
5. கைதூக்கிவிடுதல்:
கிராமத்திலிருந்து வந்த இளைஞர்களைக் கைதூக்கிவிடும் பணியில், ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
6. கண்ணாயிருத்தல்:
இரமேஷ் தன் படிப்பிலேயே கண்ணாயிருந்ததால், முதல் வகுப்பில் தேறி விட்டான்.
7. அவசரக்குடுக்கை:
கோபி, எந்தக் காரியத்தையும் யோசிக்காமல் செய்து, வம்பில் மாட்டிக் கொள்ளும் ஓர் அவசரக்குடுக்கை.
8. முதலைக் கண்ணீர்:
பெற்றோரை முதியோர் விடுதியில் விடும் மகன்கள், இறந்தபின் பெற்றோர்களை எண்ணி, முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.
9.கானல்நீர்:
தமிழகத்தில் வேளாண்மை வளர்ச்சி, கானல்நீராகி விடுமோ?
ஈ) இலக்கியநயம் பாராட்டுக.
சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?
பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்
பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?
இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
எல்லாம் சுதந்திரம் இருந்தால்தான்
நிதம்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
நிச்சயம் சுதந்திரம் அதுவேண்டும்.
-நாமக்கல் கவிஞர்
ஆசிரியர் குறிப்பு:
'நாமக்கல் கவிஞர்' ஒரு சிறந்த கவிஞர்; ஒவியம் வரைபவர்; கதை எழுதுபவர். தேசப்பற்றும் தமிழ்மொழிப் பற்றும் உடையவர். சுதந்திரப் போராட்ட களத்தில் பங்கு பெற்றவர். தேசியத்தையும் தமிழையும் தமிழ் இனத்தையும் போற்றி வாழ்ந்தவர். சுதந்திர இந்தியாவில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்தவர்.
மையக்கருத்து:
நாமக்கல் கவிஞர் பாடிய இக்கவிதை, "சுதந்திரம் இல்லை என்றால், வாழ்வில் நாம் எந்தச் சுகத்தையும் பெறவோ, அனுபவிக்கவோ முடியாது. எதையும் சாதித்து இன்பம் துய்க்கச் சுதந்திரமே இன்றியமையாதது" என்பதை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது.
எதுகை:
அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து அளவு ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகையாகும்.
அடிஎதுகை:
சுதந்திரம், பதம்தரும்
இதம்தரும், நிதம்தரும்
மோனை:
அடிகளிலோ சீர்களிலோ முதலெழுத்து ஒன்றிவருவது மோனை.
சீர்மோனை:
பதம்தரும், பணம்தரும், பார்த்தால்
இதம்தரும், இசையுடன், இருந்தால்
நிதம்தரும், நிமிர்ந்துநின் நிச்சயம்
இயைபு:
அடிதோறும் இறுதிச்சீரோ, சொல்லோ, எழுத்தோ ஒன்றிவருவது இயைபுத்தொடை ஆகும்.
வேறுண்டோ? கீழன்றோ?
சுவை:
சுதந்திரம் பற்றிப் பெருமிதமாய்ப் பாடியுள்ளதால் இதில், 'பெருமிதச் சுவை' பயின்று வந்துள்ளது.
சந்தம்:
எளிய சொற்களில், அரிய கருத்தைச் சந்த நயம் அமைய 'எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த'மாகக் கவிஞர் பாடியுள்ளது நயம் பயக்கிறது.
அணி:
இச்செய்யுளில் சுதந்திரத்தின் சிறப்புகள் இயல்பாகக் கூறப்பட்டுள்ளன. எனவே, 'இயல்பு நவிற்சி அணி' அமைந்துள்ளது.
வரைபடம் கொண்டு விவரிக்க
நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். வழி தெரியாத ஒருவர், உங்களிடம் வந்து நகலகத்திற்கு வழி கேட்கிறார். கீழ்க்காணும் வரைபடத்தைக் கொண்டு, அப்புதியவருக்கு வழிகாட்டுங்கள்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்குத் திசையில் நேராகச் செல்லுங்கள் இடப்புறம் தேவாலயம் வரும். அதனைக் கடந்து வலப்புறம் திரும்பினால் மேலைத்தேர்த்தெரு உள்ளது. அதில் தெற்குத் திசையில் நேராகச் சென்றால், காந்தி சதுக்கத்திற்கும் மசூதிக்கும் நடுவில் அறம் வளர்த்த மாடத்தெரு உள்ளது. அதில் கிழக்குத் திசையில் நேராகச் செல்லுங்கள். வலப்புறம் சிறுவர் பூங்காவைக் கடந்து, கூட்டுறவு வங்கியைக் கடந்தால், கீழை தேர்த்தெரு குறுக்கிடும். அச்சாலையை நேராகக் கடந்து சென்றால் நூலகத்தை நீங்கள் அடையலாம்.
III. மொழியோடு விளையாடு
அ) எண்ணங்களை எழுத்தாக்குக.
0 Comments:
Post a Comment