11th Tamil - Book Back Answers - Unit 3 - Guides

    

 


    Plus One / 11th Tamil - Book Back Answers - Unit 3 - Download

    Tamil Nadu Board 11th Standard Tamil - Unit 3: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 3 – from the Tamil Nadu State Board 11th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 3 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 3

    I. திறன் அறிவோம்  

    அ) பலவுள் தெரிக.

    1. கூற்று : 'கோடு' என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
    விளக்கம் : 'கோடு' என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.
    அ) கூற்று சரி, விளக்கம் தவறு
    ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி
    இ) கூற்று தவறு, விளக்கம் சரி
    ஈ) கூற்றும் தவறு, விளக்கமும் தவறு
    விடைகுறிப்பு: 
    ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி

    2. 'காவடிச் சிந்துக்குத் தந்தை' என்று அழைக்கப்படுபவர் யார்?
    அ) பாரதிதாசன்
    ஆ) அண்ணாமலையார்
    இ) முருகன்
    ஈ) பாரதியார்
    விடைகுறிப்பு: 
    ஆ) அண்ணாமலையார்

    3. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
    1. வெள்ளிவீதியார் அ. புறநானூறு
    2. அண்ணாமலையார்- ஆ. சி. சு. செல்லப்பா
    3. வாடிவாசல் - இ. குறுந்தொகை
    4. இளம்பெருவழுதி - ஈ. காவடிச்சிந்து
    i) அ ஆ இ ஈ
    ii) ஆ ஈ அ இ
    iii) இ ஈ ஆ அ
    iv) இ ஈ அ ஆ
    விடைகுறிப்பு: 
    iii. இ ஈ ஆ அ

    4. “முழவோசை”-இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
    அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
    ஆ) தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
    இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே, தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்
    ஈ) தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
    விடைகுறிப்பு: 
    அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

    5. பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
    அ) பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்
    ஆ) பகுதி, இடைநிலை, சாரியை
    இ) பகுதி, சந்தி, விகாரம்
    ஈ) பகுதி, விகுதி
    விடைகுறிப்பு: 
    ஈ) பகுதி, விகுதி


    ஆ) குறு வினா

    1. 'கோட்டை' என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
    விடைகுறிப்பு:  
    திராவிட மொழிகள்
    எடுத்தாளப்பட்ட விதம்
    தமிழ்
    கோட்டை, கோடு
    மலையாளம்
    கோட்ட, கோடு
    கன்னடம்
    கோட்டே, கோண்டே
    தெலுங்கு
    கோட்ட
    துளு
    கோட்டே
    தோடா
    க்வாட்
     
    2. காவடிச்சிந்து என்பது யாது?
    விடைகுறிப்பு: 
    • தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே காவடிச்சிந்து எனலாம்.
    • முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல், பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர்.
    • அவர்களின் வழிநடைப் பாடல் வகைகளிலிருந்து காவடிச்சிந்து என்னும் பாவடிவம் தோன்றியது.

    3. கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் குறிப்பு வரைக.
    விடைகுறிப்பு: 
    • கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் என்னும் ஊர்ப்பெயர்கள், பழந்தமிழரின் அரசியல், பொருளியல், பண்பாட்டு உருவாக்கத்தின் விளைவால் உருவானவை. இப்பெயர்கள் சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்கு ஆணிவேர். இப்பெயர்களில் ஒன்றைக்கூட வடமொழி இலக்கியங்கள் பதிவு செய்யவில்லை.
    • சங்ககாலத் தமிழ் மன்னர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு, வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் பொருந்திப் போகின்றன. மிக முக்கியமான பொதுத்தன்மைகளைக் காட்டும் இவை, கடந்தகால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்களாகும்.

    4. குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
    விடைகுறிப்பு: 
    • குறுந்தொகை, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. அகத்திணை சார்ந்தது.
    • நல்ல குறுந்தொகை எனச் சிறப்பித்து உரைக்கப்படுகிறது.
    • நான்கடிச் சிற்றெல்லையும் எட்டு அடிப் பேரெல்லையும் கொண்ட 401 பாடல்களை உடையது.
    • உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டது.
    • முதலில் தொகுக்கப்பட்ட தொகைநூலாகக் கருதப்படுகிறது.
    • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.
     

    இ) சிறு வினா

    1. திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்களுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பிற்கு எடுத்துக்காட்டுத் தருக.
    விடைகுறிப்பு: 
     
    • திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்கள், அக்குடிகளின் மலைசார்ந்த வாழ்வியல், சமூக, சமயக் கூறுபாடுகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன.
    • இந்தியாவில் தற்போது வாழும் பலவேறு திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்கள், அப்பழங்குடியினரின் மலை சார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.
    • ஜார்கண்ட் 'மால் பஹாடியா; கேரளத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள மல அரயன்', நெடுங்காடு மலைவாழ் 'மல குறவன்', எர்நாட் பகுதி 'மல மூத்தன்', வடகேரள 'மல பணிக்கர்', பாலக்காடு 'மலயன்', இடுக்கி 'மலவேடா', தட்சிண கன்னட 'மலேரு', நீலகிரி 'கோட்டா', ஆந்திரப் பிரதேச 'கொண்டா தோரா', ஒடிஸா 'கோண்டு', 'கொய்ட்டெர்' என்னும் ஆதி திராவிடப் பழங்குடி இனப்பெயர்களைக் கொண்டு மலைக்கும் உள்ள தொடர்பைத் தெளியலாம்.

    2. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக.
    விடைகுறிப்பு: 
     
    • காவடி எடுப்பது என்பது, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்துப் பாடி ஆடுவது வழக்கமாகி உள்ளது.
    • முருக வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், வழிநடைப் பாடலாகப் பாடும் பாடல்வகை காவடிச்சிந்து. தமிழ்நாட்டில் பண்டைக்காலம்முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே காவடிச் சிந்து எனலாம்.
    • முருகப் பெருமானை வழிபடப் பால் முதலான பொருட்களைக் கொண்டு செல்வோர், காவடி எடுத்துக்கொண்டு ஆடல் பாடல்களுடன் செல்வர். அவர்களின் வழிநடையின்போது பாடிய பாடல்களிலிருந்து காவடிச் சிந்து என்ற பாவடிவம் தோன்றியது.

    3. கழுகுமலைத் தலத்தின் சிறப்புகளைக் காவடிச்சிந்து கொண்டு விளக்குக.
    விடைகுறிப்பு: 
     
    • கழுகுமலைத் தலைவன் முருகன். கழுகுமலைத் தலத்தில் அமைந்த கோவில் கோபுரத்தின் தங்கக் கலசம் தேவர் உலகைவிடவும் உயர்ந்து ஒளி வீசுகிறது. அந்த ஒளியானது பலவேறு உலகங்களிலும் உள்ளவர்களின் கண்களைக் கூசச் செய்கிறது.
    • கடலில் வாழும் மீன், சுறா போன்ற உருவ அமைப்புகள் கொண்ட கொடிகள் கோவில் எங்கும் பறக்கின்றன. காவடி எடுத்துவரும் அடியவர்கள் பாடும் திருப்புகழின் முழக்கமானது அமராவதிப் பட்டினத்திலுள்ள தேவர்களின் செவிகளைச் சென்றடைகின்றன.
    • கழுகுமலை நகரின் கோட்டை மிக உயரமானது. அதில் மேகங்கள் படிகின்றன. அவற்றில் உருவாகும் மின்னல் ஒளி இருளைக் கிழித்து எறிகிறது.
    • நெஞ்சம் நெகிழ்ந்து உருக முருகன் பெருமையைப் பாடிக்கொண்டு தங்கள் காவடிகளைச் சுமந்த பக்தர்கள் முருகன் அருள் பெற்று இன்பம் அடைகின்றனர்.

    4. பகுபத உறுப்பிலக்கணம் தருக.
    விடைகுறிப்பு: 
     
    அ) வருகின்றாள் 
    வா (வரு) + கின்று + ஆள்
    வா -பகுதி, 'வரு' என ஆனது விகாரம்
    கின்று நிகழ்கால இடைநிலை
    ஆள் - படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதி.

    ஆ) வாழ்வான் 
    வாழ் + வ் + ஆன்
    வாழ் - பகுதி
    வ் - எதிர்கால இடைநிலை
    ஆன் - படர்க்கைப் ஆண்பால் வினைமுற்று விகுதி.

    இ) காண்பிப்பார் 
    காண்பி + ப் + ப் + ஆர்
    காண்பி பகுதி
    ப் - சந்தி
    ப் எதிர்கால இடைநிலை
    ஆர் படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

    ஈ) பிரிந்த
    பிரி + த் (ந்) + த் + அ
    பிரி - பகுதி
    த் - சந்தி, 'ந்' ஆனது விகாரம்
    த் - இறந்தகால இடைநிலை
    அ - பெயரெச்ச விகுதி.


    5. சங்ககாலத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வு வெள்ளிவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது; அதுபோல இக்காலச் சமூக நிகழ்வுகள் எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தன்மையை ஒப்பிட்டு விளக்குக.

    விடைகுறிப்பு: 
     
    சங்ககாலச் சமூக நிகழ்வு:
            ஊர் மக்களின் அவை, இதற்கு முன்பு பலமுறை தலைவன் அனுப்பிய பரிசுப் பொருட்களைத் திருப்பி அனுப்பி மறுத்தனர். இன்றோ தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாக போதுமென்று சொல்லத்தக்க அளவு பரிசுப் பொருட்களைத் தலைவன் அனுப்பி அவை முன் வைத்துள்ளான்.

            ஊர் அவையில் இருந்த தலைவியின் உறவினரும் அவற்றைக் கண்டு, நன்று நன்று என்று கூறி மகிழ்ந்தனர். போதிய பரிசுத்தொகை கிடைத்தவுடன் தலைவன் தலைவியரைச் சேர்த்து வைப்போர் அங்கு இருந்தனர்.

            சங்க காலத்தில் திருமண வாழ்வு என்பது இவ்வாறாகப் பெண் வீட்டாருக்கு ஆண் மகன் பரிசுப் பொருட்களைத் தந்து மணமுடித்துள்ளான் என்பது, வெள்ளிவீதியார் பாடலில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    இக்காலச் சமூக நிகழ்வு:
            இன்றைய சூழலில் சமூகத்தில் பெண் வீட்டாரிடம் வற்புறுத்தி வரதட்சிணை வாங்கும் முறைமை வெகுவாகக் குறைந்துவிட்டது. திருமணச் செலவைச் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் பகிர்ந்து கொள்கின்ற நிலை வளர்ந்து வருகிறது. அத்துடன் திருமணம் முடிந்ததும் மணமக்களைத் தனிக்குடித்தனம் வைக்கும் முறையும் அரங்கேறி வருகின்றது.

            திருமணமான சில மாதங்களில் மனமுறிவு ஏற்பட்டு நீதிமன்றத்தில் மணமுறிவு வழக்கு தொடுத்து நிற்கும் அவல நிலையும் உருவாகி உள்ளது. இந்தச் சூழல் மாறிக் கூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

    ஈ) நெடு வினா

    1. “இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் இருப்பிடப் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன” கூற்றினை மெய்ப்பிக்க.
    விடைகுறிப்பு: 
     
    முன்னுரை:
            திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள். திராவிடர்களை 'மலைநில மனிதர்கள்' என்று, கபில் சுவலபில் அழைக்கிறார். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழன் இருப்பிடப் பெயர்களும் இயற்கையோடு இயைந்து இருந்தன என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

    உயரமான இடங்களில் குடியிருப்பு:

            மலைவாழ் பழங்குடியினர் குடியிருப்புகள், அவர்களது மலை சார்ந்த வாழ்வியலின் சமூக, சமயக் கூறுபாடுகள் குறித்த புரிதலை நமக்குத் தருகின்றன. அவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளைவிட உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறுகளிலும், ஓடைகளிலும் இருந்து நீரெடுத்துப் பருகி இருக்கிறார்கள்.

    குறும்பர்களும் ஜதாப்புகளும்:
            தாழ்வாரத்தைக் குறிக்கும் 'மெட்டு' என்ற குறும்பர் மொழிச் சொல், அதன் உயரமான, மேடான அமைப்பை விளக்குகின்றது. ஆந்திராவிலும் ஒடிஸாவிலும் உள்ள 'ஜதாப்பு' எனப்படும் திராவிடப் பழங்குடியினரின் குடியிருப்புகள், பெரும்பாலும் மலையுச்சிகளில் அமைந்துள்ளன. பழங்குடி இனத் தலைவரின் வீடு, மற்ற வீடுகளைவிட உயரமான இடத்தில் அமைந்துள்ளது.

    தோடர் வாழ்வு:
            பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதி நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர், அவற்றைச் சுற்றி உயர்ந்த மதிற்சுவர்களை அமைத்து உள்ளனர். உயரமான மேடை, திண்ணை, சுற்றுச்சுவர்கள், மேலோடை நீர் ஆகியவை திராவிடப் பழங்குடியினரின் வாழ்விட வடிவமைப்பிலும், வாழ்வியலிலும் உயரமான இடங்கள் செலுத்தும் தாக்கத்தைக் காட்டுகின்றன.

    தமிழில் மலையும் குன்றும்:
            தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான மலை, குன்று என்னும் இரண்டு சொற்களும் வெளிப்படுத்தும் உயர வேறுபாட்டை, வடமேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் மலைசார்ந்த இடப்பெயர்களும் உறுதி செய்கின்றன. 'மலை' என்ற சொல் தமிழ்நாட்டில் முன்னொட்டாகவும், பின்னொட்டாகவும் இடம்பெறுகின்றது.

    கோட்டை:
            'கோட்டை' என்ற சொல், தமிழ்மொழியில் காவல் மிகுந்த காப்பரண்களைக் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பைக் குறிக்கிறது. 'கோட்டை' என்ற சொல்லாக்கத்தின் வேர்களைத் திராவிடப் பழங்குடி மொழிகளிலும்கூட இனங்காண முடிகிறது. 'கோட்டை' என்று முடியும் இடப்பெயர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் உள்ளன.

    மலையும் கோட்டையும்:
            செயற்கையான காப்பரண்களைக் கட்டி எழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியில் 'கோட்டை' எனும் சொல் தோன்றியது என்பதைவிட, தொன்மையான மலைசார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதுதான் உண்மையாகத் தோன்றுகிறது. 'கோடு' என்ற தமிழ்ச் சொல்லுக்கு மலையுச்சி, சிகரம், மலை என்ற பொருளோடு வல்லரண், கோட்டை என்ற பொருளும் உண்டு. செயற்கையான மதில் சுவர்களால் அமைந்த கோட்டைகளை விடவும் மலையரண், காட்டரண் போன்ற அரண்கள், தொன்மையானவை.

    முடிவுரை:
            இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர் தமிழர்கள் என்பதனை, அவர்களின் வாழ்வு இருப்பிடப் பெயர்களே உலகிற்குப் பறைசாற்றுகின்றன.

    2. காவடிச்சிந்து ஒரு வழிநடைப் பாடல் - இக்கூற்றை அண்ணாமலையாரின் பாடல்வழி மதிப்பீடு செய்க.
    விடைகுறிப்பு: 
     
    முன்னுரை :
            கழுகுமலைத் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள வீரமிகு வேலும் அழகு மயிலும் கொண்டுள்ள முருகக் கடவுளைச் சென்னிக்குளம் அண்ணாமலையார், காவடிச்சிந்துப் பாடலில் போற்றிப் பாடியுள்ளார். அப்பாடலின்கண் பாதசாரிகளின் வழிநடைப் பாடலிற்கான தன்மைகள் அமைந்த விதத்தைக் காண்போம்.

    பாதசாரிகளின் திருப்புகழ் முழக்கம் :
            கால்நடையாகவே நடந்து வந்த பக்தர்கள், அருணகிரியார் படைத்து அளித்த திருப்புகழைக் கூட்டமாக ஒங்கி முழக்கமிட்டுக் கொண்டே வருகின்றனர். அந்தப் பேரொலி அமராவதிப் பட்டினத்தில் உள்ள தேவர்களின் செவிகளில் சென்று அடைக்கும்; அண்டத்தையும் பேரொலி உடைக்கும் என்று, அண்ணாமலையார் பாடுகின்றார்.

    பாதசாரிகளின் உள்ளம் :
            தங்கத்தினும் மேலான காவடியைத் தூக்கிக் கொண்டு கனலில் உருகிய மெழுகென அன்பு உள்ளத்தோடு முருகனை நோக்கிவரும் பக்தர்கள் அருளைப் பெறுவார்கள். இன்பம் அடைவார்கள் என, அண்ணாமலையார் நிறைவாகப் பாடி முடிக்கிறார்.

    முடிவுரை:

            அத்தகைய தன்மைகளால் பாதசாரிகளின் வழிநடைப் பாடலாகக் காவடிச்சிந்து அமைந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

    3. வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக.
    விடைகுறிப்பு: 
     
    முன்னுரை:
            தமிழ் மண்ணுக்கே உரித்தான ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு, சி. சு. செல்லப்பா எழுதிய குறும்புதினம் 'வாடிவாசல்'. சுருக்கப்பட்ட அக்குறும்புதினத்தின் வடிவம் எனக்கு உணர்த்திய செய்திகளை, இக்கட்டுரையில் எழுத முயற்சி செய்கிறேன்.

    உருவம் கண்டு எள்ளாதே:
            'காரிக்கொம்புக்காளை' வாடிவாசல் பக்கம் வருவதைக் கண்ட பையன் “வாடிபுரம் காளை! கருப்புப் பிசாசு” என்று கத்தினான். காரிக்கொம்புக்காளையின் உருவத்தைக் கண்டதும், மக்கள் மனம் கொண்ட முன்தீர்மானங்களைத் தெளிவாக வாடிவாசல் எடுத்துரைக்கிறது.
    “கிழக்கத்தியான் காரியைப் பிடிக்கப் போறான்!"
    “பய செத்தான்!
    "செல்லாயி வாடியிலே அவனுக்கு முடிவு போட்டிருக்கு”
            மக்கள் சிலர் பரிதாபத்துடன் கூறுகின்றனர். ஆனால், நிகழ்வின் முடிவு மக்கள் கருத்துகளுக்கு எதிராக அமைந்திருக்கிறது. உருவத்தை மட்டும் வைத்து, எழுப்பும் கருத்துகள் தவறானவையாகவும் அமையக்கூடும். எனவே, 'உருவைக் கண்டு தீர்மானம் செய்யும் உணர்வை நாம் மாற்ற வேண்டும்' என்ற சிந்தனையை வாடிவாசல் குறும்புதினம் ஏற்படுத்தியது.

    விளையாட்டை விளையாட்டாகப் பார்:
            காரிக்கொம்பு என்ற காளைக்கு நடப்பது போட்டி என்றே தெரியாது. அதற்குத் தெரிந்தது தன்னை எதிர்ப்பவரைத் தாக்குவது என்பது. அதற்குரிய பயிற்சியைப் பெற்றிருக்கிறது அது. அதைப் பார்த்தவர்கள்,
    “ராஜாளி மாதிரி வந்து நிக்குது பாரு!"
    “நின்னு குத்திக் காளைன்னா இதுதான்”
    என்று கூறுவதிலிருந்து, காரிக்கொம்புக்காளை பயிற்சி பெற்ற காளை என்பது வெளிப்படுகிறது. ஆனால், பிச்சி காளையை நோக்கும்போதே, “அப்பன் ஆசைக்கு மட்டுமன்றி உசிருக்கே உலை வைத்த காரி" என்று நினைத்தான். அதன் கொம்பில் இன்னும் அவன் அப்பன் இரத்தம் வழிந்து கொண்டிருப்பது போன்ற பிரமையோடு நோக்குகிறான்.

            யார் பழிதீர்த்துக் கொள்ளப் போகிறார்களோ? என்ற ஆர்வமூட்டல் இப்போட்டியில் இருந்தாலும், போட்டியில் பிச்சி தன் வலிமையைக் காட்டி, காளையை முறைப்படி அடக்கி வெல்கிறான் என்ற முடிவு, 'விளையாட்டை, விளையாட்டாகக் கொள்ள வேண்டும்' என்ற உள்ளுணர்வை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துகிறது. 'விளையாட்டை இருநாட்டு அணியினரும் நாட்டிற்கு இடையேயான போராக எண்ணக்கூடாது' என்னும் கருத்து என் உள்ளத்தில் எழுந்தது.

    இலக்கை வெல்லலாம்:
            காரிக்கொம்பின் பெருமையை ஊரே பேசுகிறது. அதனை அடக்க எதிர் நிற்பவர் நிலையையும் பேசுகிறது. என்றாலும், பிச்சி தன் முயற்சியைத் திட்டமிட்டுத் தொடங்குகிறான்.
            உடனே “மருதா" என்று தன் தோழனை உஷார்ப்படுத்துகிறான்.
            பின்னர் ஆயத்தமான பிச்சி, தன் லங்கோடு அவிழ்ந்து விடாமல் இருக்க இறுக்கிக் கட்டுகிறான்.
            வயிற்றை எக்கிக் கொடுத்து முழு மூச்சை உள்இழுக்கிறான்.
            இரு கைகளையும் தேய்த்து, பிடி வழுக்காமல் இருக்கச் சுரசுரப்பாக்கிக் கொள்கிறான்.

            இச்செயல்கள் அவன் அடைய விரும்பிய வெற்றிக்கு, உரிய முயற்சிகளாக அமைந்தன. பிச்சி தான்மேற்கொண்ட முயற்சிகளோடு அறிவையும் ஒருங்கிணைத்து வெற்றியை நிலைநாட்டுகிறான் என்பதை, வாடிவாசல் குறும்புதினம் நயமாகக் காட்டுகிறது.

            பிச்சியையே பார்த்துக்கொண்டு வந்த காரிக்கொம்பின் பார்வையை மாற்ற, மருதன் காரிக்கொம்பின் வாலைத்தொட்டு 'டுர்ரீ' என ஓங்கிக் கத்துகிறான். பிச்சியை விட்டுவிட்டுக் காரிக்கொம்பின் பார்வை மருதனைப் பார்க்கத் திரும்பிய ஒரு சிறுகோண அளவு திருப்பத்தில், அதன் திமிலில் இடது கையைப் போட்டு, நெஞ்சோடு நெருக்கிப் பிடிக்கிறான் பிச்சி. அந்தப் பிடியிலிருந்து காளையால் மீள முடியவில்லை என்பதை எடுத்துரைக்கிறது வாடிவாசல். இக்காட்சி, நம் இலக்கை அடைவதற்கு ஏற்ற பயிற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுவதோடு, பயிற்சி மேற்கொண்டாலும் வெற்றிபெற, அறிவையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஆழமான கருத்தை நமக்குள் விதைக்கின்றது.

    முடிவுரை:
            உருவைக் கண்டு எவரையும் எதையும் மதிப்பிடக் கூடாது. விளையாட்டை விளையாட்டு என்கிற பண்பாட்டுச் சிந்தனைகளோடு நோக்கவேண்டும். 'வாடிவாசல்' குறும்புதினத்தை வாசிக்கின்றவர்களுக்கு முயற்சியோடு அறிவை இணைத்தால்மட்டுமே வெற்றி பெற இயலும் என்னும் உயர்சிந்தனையை உணர்த்தி உயர்வு பெற வழிவகுக்கிறது.
     
     

    II. மொழியை ஆள்வோம்

    அ) வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

    1. குமரனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் குமரனது வீடு.
    விடைகுறிப்பு: 
    குமரனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வாருங்கள். என் வீட்டிற்குப் பக்கத்து வீடுதான் குமரனது வீடு.

    2. அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவேப் பெண்களும் அரசு பணியை பெறவேண்டும்.

    விடைகுறிப்பு: 

    அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப் பணியைப் பெற வேண்டும்.

    3. கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவர்.

    விடைகுறிப்பு: 
    கல்வி கேள்விகளில் சிறந்தவர், நன்மை தீமைகளைப் புரிந்து பேசுவர்.

    4. தமிழர், ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.
    விடைகுறிப்பு: 
    தமிழர், ஆற்றுத் தண்ணீரைத் தேக்கிச் சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.

    5. சான்றோர், மிகுந்தப் பொறுப்புடன் சிறப்பான சேவைப் புரிந்து கொள்கையை நிலைநாட்ட செய்தனர்.

    விடைகுறிப்பு: 
    சான்றோர், மிகுந்த பொறுப்புடன் சிறப்பான சேவை புரிந்து, கொள்கையை நிலைநாட்டச் செய்தனர்.
     

    ஆ) தமிழாக்கம் தருக.

    1. Education is the most powerful weapon, which you can use to change the world.
    கல்வி என்பது மிகுந்த ஆற்றல் மிக்க ஆயுதம்; உலகை மாற்றுவதற்கு அதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

    2. Looking at beauty in the world is the first step of purifying the mind. 

    நம் மனத்தைத் தூய்மைப்படுத்துவதற்கான முதற்படி, உலகின் அழகை இரசிப்பதாகும்.

    3. Culture does not make people; People make culture.
    பண்பாடு மக்களை உருவாக்குவதில்லை; மக்களே பண்பாட்டை உருவாக்குகிறார்கள்.

    4. People without the knowledge of their past history and culture is like a tree without roots. 
    தங்கள் வரலாற்றையும் நாகரிகத்தையும் அறியாத மக்கள், வேரற்ற மரத்தைப் போன்றவர்கள்.

    5. A nation's culture resides in the hearts and in the soul of its people.
     

    கீழ்க்காணும் செய்தியைப் படித்து அறிவிப்புப் பதாகை ஒன்றை உருவாக்குக.

    ஜனவரி 13 மதுரை தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் பண்பாடு தேடலின் குறித்தும், குறித்தான தேவை குறித்தும் சிறகுகள் சமூக அமைப்பின் சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
    மதுரையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சமூகநல அமைப்பான சிறகுகள் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் தெப்பக்குளம் அருகில், பாரதி கலைக்கூட அரங்கில் ஜனவரி 13ஆம் நாள் நடைபெற உள்ளது. இதில் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புக் குறித்தும், தொலைத்த பண்பாட்டை மீட்டெடுப்பது  குறித்தும் 'பண்பாடுகளால் வாழும் தமிழர்' என்னும் தலைப்பில் சமூக ஆர்வலரும் கவிஞருமான அன்பரசி பேசவிருக்கிறார். இதன் இறுதிப்பகுதியாகக் கலந்துரையாடலும் நடைபெறுகிறது. விருப்பம் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று, சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இனியன் தெரிவித்துள்ளார்.
    மதுரை சிறகுகள் சமூகநல அமைப்பு நடத்தும் தமிழ்ப் பண்பாட்டுக் கருத்தரங்கு

    நாள் 13.01.2021
    இடம் : பாரதி கலைக்கூட அரங்கு, 
    மதுரை
    தலைப்பு : 'பண்பாடுகளால் வாழும் தமிழர்'
    கருத்தாளர் : கவிஞர் அன்பரசி அவர்கள் (சமூக ஆர்வலர்)

    அன்புடையீர்,

    தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பு மற்றும் தொலைத்த பண்பாட்டை மீட்டெடுப்பது குறித்தான ஒருநாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு பள்ளி / கல்லூரி மாணவர்களையும் சமூக ஆர்வலர்களையும் மனம் உவந்து அழைக்கிறோம்.

    அன்புடன்,
    இனியன்
    ஒருங்கிணைப்பாளர்,
    மதுரை சிறகுகள் சமூகநல அமைப்பு.
     

    III. மொழியோடு விளையாடு

    அ) கட்டுரை எழுதுக.

    "பண்பாட்டைப் பாதுகாப்போம்!
    பகுத்தறிவு போற்றுவோம்" - என்னும் பொருள்பட ஒருபக்க அளவில் கட்டுரை எழுதுக.


    முன்னுரை:
            தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதியில் தோற்றுவித்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரப்பிய பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும், பகுத்தறிவு சார்ந்தனவாக அமைந்துவிட்டமையை இயற்கை என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு தமிழகப் பண்பாட்டுக் கூறுகளோடு இயல்பாக ஒருங்கிணைந்த பகுத்தறிவுப் பயணத்தின் சிறப்பைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

    சங்ககாலத்தில் இயற்கை உயர்வு:
            'கடவுள்' என்னும் கருது பொருளை தமிழன் படைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மரங்களையும் செடிகளையும் பூக்களையும் நெல்மணிகளையும் உயர்ந்ததாகப் போற்றும் பண்பாட்டைத் தமிழர் மேற்கொண்டிருந்தனர்.

            தமிழரின் திருமண நிகழ்வுகளில் கொடிகளுடன் தொடுத்த பூக்கள் அமைந்த மாலைகள் இருந்தன. அவற்றை மூத்தோர் எடுத்துக் கொடுக்கத் தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் சூடிக் கொண்டனர்.

            மணல் மேடைதான் மணமேடை. ஒளிவிளக்குகள் இருந்தன. வாழ்த்தொலியுடன் குலவையும் இணைந்து ஒலித்தது. முல்லை மலர் கலந்த நெல்மணிகளைத் தூவி, மணமக்களை உறவினர் வாழ்த்தினர். அங்கே வேதம் ஓதப்பட்டதாகவோ, மங்கல நாண் அணிவிக்கப்பட்டதாகவோ சங்கப் பாடல்களில் சுட்டப்படவில்லை. தமிழன் இயற்கையைப் போற்றினான்; வணங்குவதற்காக அன்று. இயற்கையோடு இயைந்து வாழ்வதற்காகவே. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நில அமைப்புகளை அழித்து வாழ்விடங்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. அவற்றிடையே வாழ்விடங்களை அமைத்து வாழும் இயற்கையைப் போற்றும் பண்பாட்டை உடையவர்களாகத் தமிழர் வாழ்ந்தனர்.

    பகுத்தறிவு போற்றிய பல குழுக்கள்:
            உலகப் பற்றைக் கொள்ளாதே' என வலியுறுத்திய புத்தமதம், 'கடவுள்' கொள்கையை உருவாக்கவில்லை. கடவுளை உருவாக்கினாலும் கொல்லாமையை உயிர்த் துடிப்பாகச் சமணமதம் போற்றியது. பொதுவுடைமைத் தத்துவத்தை உருவாக்கிய பகுத்தறிவாளர்களிடமும் கடவுள் கருத்து இல்லை. கடவுள் என்னும் போர்வையில் ஏற்பட்ட சமூகத் தீமைகளை எதிர்க்க வந்த பெரியார், பகுத்தறிவைக் கடவுளை எதிர்க்க ஆயுதமாக்கினார். ஆனால், தமிழர் பண்பாட்டிலேயே இப்பல்வேறு குழுக்களின் பகுத்தறிவுவாதமும் கலந்திருக்கிறது என்பதே உண்மை.

    பண்பாடும் பகுத்தறிவும்:
            கணியன் பூங்குன்றன் பாடிய “தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்னும் அடியில், பௌத்தத்தின் பகுத்தறிவு பட்டொளி வீசுகிறது அல்லவா?
    “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று வள்ளலார் பாடிய பாடல் வரியில் சமணத்தின் பகுத்தறிவுத் தெளிவு புலப்படுகிறது அல்லவா!
    "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் - இந்த
    செகத்தினை அழித்திடுவோம்"
    என்னும் பாரதியின் பாடலில் பொதுவுடைமைப் பகுத்தறிவு தெளிவாகத் தெரியவில்லையா? 'தமிழர் திருநாளில் தமிழர் சூரியனை வழிபடுகின்றனர். அத்துடன் தங்களின் உழைப்பிற்கு உதவிய விலங்கினங்களுக்கும் நன்றி கூறும்வகையில் ஒரு நாளை ஒதுக்கிப் பொங்கலிட்டுச் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
    “இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி
    இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே”
    என்று பாடுகின்ற பாரதிதாசனாரின் பாடல் அடிகளில், பெரியாரின் பகுத்தறிவு விழிப்புணர்வு கலந்துள்ளது அல்லவா?

    முடிவுரை:
            இவற்றை நோக்கக் காலம் காலமாகத் தமிழர் பண்பாடு பகுத்தறிவோடு வளர்ந்து வாழ்ந்ததால் தான் உலகே நேசித்தது. அந்தப் பண்பாட்டை யாவும் இலக்கியங்கள் உலகிற்காகப் பாடியுள்ளன. பண்பாட்டுக் கருத்துகளுக்குச் சமயச் சாயம் பூசாமல் “பிறர்க்கென வாழும் மனிதர்கள் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது" என்றும் போற்றியுள்ளது. இவ்வகையில், பகுத்தறிவோடு கூடிய பண்பாட்டை உலகிற்கு வாழ்ந்து உணர்த்தியவர்கள் தமிழர்களே என்பது மிகையன்று! எதிர்வரும் காலத்தில் நாமும் பண்பாடுகளைப் பகுத்தறிவோடு பூவுலகெங்கும் அறிந்திட, வாழ்ந்து காட்டுவோம்.

    உடன்பட்டும் மறுத்தும் பேசுக

    1. ஆங்கிலேயர் வருகை -உடன்படல்
            ஆங்கிலேயர் வருகையால், இந்தியா முழுவதும் இரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. தொலைத்தொடர்பு வசதி, அவர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டின் மிகப்பெரிய அலுவலகக் கட்டடங்கள், அவர்கள் கட்டுமானத்தால் ஆனவையேயாகும். மேலும், நமது தொழில்துறையை மேம்படுத்தியதும் அவர்களே. அவர்களின் காலம், வளர்ச்சிப் படிநிலையின் விடியல் எனலாம்.

    ஆங்கிலேயர் வருகை (மறுத்தல்)
            ஆங்கிலேயர், இந்தியாவில் இரயில் பாதைகளைத் துறைமுகங்களோடு இணைத்து, அதன் வழியாக நமது அரிய செல்வங்களையும் உற்பத்திப் பொருள்களையும் பிரிட்டனுக்குக் கொண்டு சென்றனர். அவர்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்காகவே, தொலைத்தொடர்பு வசதிகளையும் பெரிய கட்டடங்களையும் இந்தியர்களுக்காகச் செய்து கொடுக்கவில்லை. அவர்களின் ஆட்சிமுறைத் தேவைகளுக்காகவே செய்துகொண்டனர். எனவே, ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்த காலம், நம்மை நாமே தொலைத்திருந்த இருள்காலம்.

    2. தொழில்நுட்பத்தால் விளைந்தது வளர்ச்சியே / வீழ்ச்சியே
     
    தொழில்நுட்பத்தால் விளைந்தது வளர்ச்சியே!
            தொழில்நுட்பம் வளர்ந்ததால், மின்விசைக் கருவிகள் கிடைத்தன. ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தேவையான நீரைப் பெற முடிந்தது. எண்ணற்ற தொழில்கள் பெருகித் தொழிற்சாலைகள் வளர்ந்தன. போக்குவரத்து வசதிகள் பெருகியுள்ளன. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். நிலத்தை உழவும், களை எடுக்கவும், அறுவடை செய்யவும் புதிய புதிய கருவிகள் கிடைத்துள்ளன.

    தொழில் நுட்பத்தால் விளைந்தது வீழ்ச்சியே !
            தொழில்நுட்பம் பெருகியதால் சிற்றூர்கள் அழிந்தன. பேரூர்கள் பெருகின. தொழிற்பேட்டைகள் வளர்ந்தன. எரிபொருளுக்காகக் காடுகளை அழித்தனர். ஆழத் துளையிட்டு நீரை எடுத்ததால், பூமித்தாய் ஈரப்பசையை இழந்துவிட்டாள். இந்த மண்ணுலகம் மனிதனுக்குமட்டும் சொந்தமானதன்று.
     
            மனித இனம் தோன்றுவதற்குமுன்பே தோன்றிய எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றின் கதி என்ன? அவை இல்லாமல் மனிதன்மட்டும் தனித்து வாழ முடியுமா? காற்றுமாசு, நீர்மாசு, நிலமாக எனச் சுற்றுச்சூழல் மாசுபடத் தொழில்நுட்பப் பெருக்கம்தானே காரணம்? அதனால் உலக உயிரின வீழ்ச்சிக்கு அடிப்படையே தொழில்நுட்ப வளர்ச்சிதான் என்பதை நிறுவ, எத்தனையோ சான்றுகளைத் தரலாம்.

    3. தற்போதைய உணவுமுறை நல்வாழ்வை வளர்க்கிறது / குறைக்கிறது
     
    தற்போதைய உணவுமுறை நல்வாழ்வை வளர்க்கிறது.
            உயிர் வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாதது. இன்றைய நிலையில் விரைவாகச் செயல்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. எனவே, உணவுக்காகச் செலவிடும் நேரத்தைச் சுருக்கமாகச் செலவிட எண்ணுகின்றனர். சிற்றுண்டி உணவு வகைகளைத் தயாரிக்க ஆகும் கால தாமதத்தைத் தவிர்க்கக் கடைகளில் வாங்கிக் கொள்வது எளிதாக உள்ளது. எனவே, விரைவு உணவகங்கள் பெருகியுள்ளன. பயணம் செய்யும்போது உண்பதற்கெனப் பல உணவு வகைகள் கிடைக்கின்றன. எனவே, தற்போதைய உணவுமுறை, நம் வாழ்வை குறைப்பதாக இல்லை; வளர்ப்பதாகவே உள்ளது.

    தற்போதைய உணவுமுறை நல்வாழ்வைக் குறைக்கிறது.
            உயிர் வாழ்க்கைக்கு மட்டுமன்று; நோயற்ற வாழ்வுக்கும் உணவு இன்றியமையாததாகிறது. நம் வீட்டில் சமைக்கும் உணவில் சத்துப் பொருள்கள் சரிவிகிதத்தில் இடம்பெறுகின்றன. விரைவு உணவகங்களில் விற்கப்படும் உணவு வகைகளில் மணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்ற வேதிப்பொருள்கள், முதுமைக்காலத்தில் நோய் செய்யும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் கையாளுவதற்கு வசதியாக இருந்தாலும், அவற்றில் கலந்துள்ள வேதிப்பொருள்கள் உடலுக்கு ஊறுவிளைவிக்கும். எனவே, தற்போதைய உணவுமுறை, நல்வாழ்வை வளர்ப்பதாக இல்லை; குறைப்பதாகவே உள்ளது.

    4. தமிழர்கள் பண்பாட்டைத் தக்கவைத்திருக்கிறார்கள் / தள்ளி வைத்திருக்கிறார்கள்

    தமிழர்கள் பண்பாட்டைத் தக்கவைத்திருக்கிறார்கள்:
            தமிழர்களின் பண்பாடு தொன்மையானது; பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து கொண்டிருப்பது; உடை, உணவு, பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை ஆகியவற்றில் வெளிப்படுவது. இன்றளவும் தமிழர் தம் பண்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். முன்னோர் கடைப்பிடித்த நெறிமுறைகளை இன்றளவும் இடைவிடாமல் தொடர்ந்துகொண்டுதான் வருகிறார்கள். வேலை, தொழில் எனப் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியநிலை ஏற்பட்டாலும், மொழியையும் பண்பாட்டையும் மறவாமல் கடைப்பிடித்துக்கொண்டுதானே வருகிறார்கள். இந்தவகையில் தமிழர்கள் தங்கள் பண்பாட்டைத் தக்கவைத்திருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

    தமிழர்கள் பண்பாட்டைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்:
            பண்பாட்டுப் பழமையும் பாரம்பரியப் பெருமையும் கொண்ட தமிழ்மக்கள், இன்று அவற்றைக் கடைப்பிடிக்கின்றனரா? கேள்விக்குறியாகவே உள்ளது. முதலில் தங்களைப் பெற்றவர்களை 'அம்மா' என்றும், 'அப்பா' என்றும் அழைக்கிறார்களா? தாய்மொழியைக் கற்கின்றனரா? பிழை இன்றிப் பேசவும் எழுதவும் செய்கின்றனரா? இல்லையே! தமிழைக் கெடுத்து ஆங்கிலக் கலவையோடுதானே பேசுகின்றனர்! எழுதுகின்றனர்! அதுமட்டுமா? உணவுமுறை, உடை மற்றும் பழக்க வழக்கங்களைக்கூட மாற்றிக்கொண்டுள்ளதைக் காண்கிறோம் அல்லவா? விழாக்களை, நம் முன்னோர் கொண்டாடியபடி கொண்டாடுகிறோமா? பெரும்பான்மைத் தமிழர், பெயரளவில் தமிழராக வாழ்கின்றனர். அந்தவகையில் தமிழர்கள் தங்கள் பண்பாட்டைத் தள்ளி வைத்திருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். 
     

    IV. நிற்க அதற்குத் தக.

    அ) படிப்போம்; பயன்படுத்துவோம்!   

    Ethnic Group                   - இனக்குழு
    Prefix                               - முன்னொட்டு
    Earth Environment          - புவிச்சூழல்
    Suffix                               - பின்னொட்டு
    Etyohological Dictionary - வேர்ச்சொல் அகராதி
    Cultural Elements           - பண்பாட்டுக்கூறுகள்

    V இலக்கணத் தேர்ச்சிகொள்

    1. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
    விடைகுறிப்பு:
    • பகுபத உறுப்புகள் ஆறு.
    • அவை : பகுதி, விகுதி. இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

    2. காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
    விடைகுறிப்பு:

    • வினைப் பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு (இடைநிலை) காலம் காட்டும். எனவே, காலம் காட்டும் இடைநிலை எனப்படும்.
    • செய்தான் - செய் + த் + ஆன் (த் - இடைநிலை இறந்தகாலம் காட்டியது) 
    • செய்கிறான் - செய் + கிறு + ஆன்(கிறு - இடைநிலை நிகழ்காலம் காட்டியது ) 
    • செய்வான் - செய் + வ் + ஆன் (வ் இடைநிலை எதிர்காலம் காட்டியது)
    • த், ட், ற், இன் - இறந்தகால இடைநிலைகள் 
    • கிறு, கின்று, ஆநின்று நிகழ்கால இடைநிலைகள் 
    • ப், வ் - எதிர்கால இடைநிலைகள்.

    3. பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்வெவ்விடங்களில் அமையும்?
    விடைகுறிப்பு:

    • பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் சந்தி வருவது பெருவழக்காகும்.
    • பகுதியோடு இடைநிலையும், இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாகச் சார்ந்து இயைய வரும் உறுப்பு சாரியை ஆகும்.
    • பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் சாரியை வரும்.
     
    4. விகுதிகள் எவற்றை உணர்த்தும்?
    விடைகுறிப்பு: 

    • விகுதியானது திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும். அன்றியும், வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் என்னும் பல்வேறு இலக்கணப் பொருண்மைகளை உணர்த்தவும் பயன்படுகிறது. 
     
    5. பகுபத உறுப்பிலக்கணம் தருக. 
    விடைகுறிப்பு: 
     
    6.பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்க.
    அ) அன் - வந்தனன்
    ஆ) இன் முறிந்தது
    இ) கு காண்குவன்
    ஈ) அ - சென்றன

    விடைகுறிப்பு: 
    ஆ) இன் - முறிந்தது
     
    7. பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.

     


     பேசினான், பேசுகிறான், பேசுவான், பேசான். 

    எழுதினான், எழுதுகிறான், எழுதுவான், எழுதான். 
    வணங்கினான், வணங்குகிறான், வணங்குவான், வணங்கான். 

    8. வேர்ச்சொல், எதிர்மறை இடைநிலை, விகுதி ஆகியவற்றைச் சேர்த்துச் சொற்களை உருவாக்குக.

     


    பாரான், பாராள், பாரார்.

    காணான், காணாள், காணார்.
    உரையான், உரையாள், உரையார்.

     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     





    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive