11th Tamil - Book Back Answers - Unit 4 - Guides

    

 


    Plus One / 11th Tamil - Book Back Answers - Unit 4 - Download

    Tamil Nadu Board 11th Standard Tamil - Unit 4: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 4 – from the Tamil Nadu State Board 11th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 4 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 4

    I. நம்மை அளப்போம்

    அ) பலவுள் தெரிக.

    1. ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் _________என்பதாகும்.
    அ) நூல்
    ஆ) ஓலை
    இ) எழுத்தாணி
    ஈ) தாள்
    விடை: 

    அ) நூல்/ ஆ) ஓலை

    2. சரியான விடையைத் தேர்க.
    அ) கல்வி அழகே அழகு - 1. புறநானூறு
    ஆ) இளமையில் கல் - 2. திருமந்திரம்
    இ) துணையாய் வருவது தூயநற் கல்வி - 3. ஆத்திசூடி
    ஈ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் - 4. திருக்குறள்
    5. நாலடியார்
    i) அ - 2, ஆ - 3, இ ) - 4, ஈ) - 1
    ii) அ - 3, ஆ - 4, இ ) - 1, ஈ ) - 2
    iii) அ) 5, ஆ) 3, இ) 2, ஈ) - 1
    iv) அ) - 4,ஆ) - 1,இ) - 2,ஈ) - 5
    விடை: 

    iii) அ - 5, ஆ - 3, இ  - 2, ஈ - 1

    3. பிள்ளைக்கூடம் கவிதை இடம்பெற்ற நூல்
    அ) வடக்கு வீதி
    ஆ) கொடி விளக்கு
    இ) தகப்பன் கொடி
    ஈ) சுட்டுவிரல்
    விடை: 

    ஆ) கொடி விளக்கு

    4. “விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
    வினாவாய் நீயே நிற்கின்றாய்" - என்று உரைப்பவர்
    அ) அழகிய பெரியவன்
    ஆ) பிரமிள்
    இ) அப்துல் ரகுமான்
    ஈ) இரா. மீனாட்சி
    விடை: 

    இ) அப்துல் ரகுமான்

    ஆ) குறு வினா

    1. சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?
    விடைகுறிப்பு:

    • "சங்க காலத் தமிழகம் பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால், தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் சமயம், வணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொது மொழியாகவும் விளங்கி வந்தது" என்று, இராசமாணிக்கனார் சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றிக் கூறியுள்ளார்.

    2. உ. வே. சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.
    விடைகுறிப்பு:
    • உ. வே. சா. பயின்ற கல்விமுறை தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை என்ற வகைமைக்குள் அமைகிறது.
    • திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப் புலவராக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களிடம் தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாதர் இம்முறையில் பயின்றார்.

    3. இங்கே ஐம்பதாண்டு வேம்பு
    கோடையில் கொட்டும் பூக்களை
    எண்ணச் சொல்கிறார்கள் எண்ணச் சொல்கிறவர்கள் யார்? எண்ணுபவர்கள் யார்?
    விடைகுறிப்பு: 
    • தாய்மொழி வாயிலாகக் கற்பிப்பிக்கும் ஆசிரியர்களே 'எண்ணச் சொல்கிறவர்கள்".
    • தாய்மொழி வழிக் கல்வி கற்கும் மாணவ மாணவியர்களே 'எண்ணுபவர்கள்'.

    4. 'கருங்கல்' - புணர்ச்சி விதி கூறுக.
    விடைகுறிப்பு:
    • கருங்கல் - கருமை + கல்
    • 'ஈறுபோதல்' கரு + கல்
    • 'இனமிகல்' கருங் + கல் 'கருங்கல்' எனப் புணர்ந்தது.

    5. “கற்றேன் என்பாய் கற்றாயா?" என்று அப்துல் ரகுமான் யாரிடம் எதற்குக் கேட்கிறார்?
    விடைகுறிப்பு:
    • காகிதத்தில் அச்சடித்த எழுத்துகளைப் படிப்பது கல்வியாகாது என்பதனைக் குறிப்பதற்கும்,
    • கற்றல் என்பதன் உண்மைப் பொருளைத் தேடி அறிதல் வேண்டும் என்பதை உணர்த்துவதற்கும்,
    • நடக்காததை நடந்ததாகக் கருதிக்கொண்டு மாயையில் வாழும் மக்களிடம் கேட்கிறார்.

    இ) சிறு வினா

    1. தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.
    விடைகுறிப்பு:
    • “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” புறநானூறு
    • “துணையாய் வருவது தூயநற் கல்வியே” - திருமந்திரம்
    • “கல்வி அழகே அழகு” - நாலடியார்
    • “இளமையில் கல்" - ஆத்திசூடி
    • கற்பிக்கும் இடங்களைப் 'பள்ளி' என்று 'பெரிய திருமொழி' கூறுகிறது.
    • கற்பிக்கும் இடங்களை 'ஒதும்பள்ளி' என்று 'திவாகர நிகண்டு' கூறுகிறது.
    • கற்பிக்கும் இடங்களைக் 'கல்லூரி' என்று 'சீவகசிந்தாமணி' கூறுகிறது.

    2. சமணப் பள்ளிகளும், பெண்கல்வியும் - குறிப்பு வரைக.
    விடைகுறிப்பு:
     
    சமணப் பள்ளிகள்:
    • கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் என்னும் நான்கு கொடைகளும் சமண சமயத்தின் தலையாய அறங்கள். திகம்பர சமணத் துறவிகள், மலைக்குகையில் தங்கினர்.
    • தங்களின் தங்கும். படுக்கை இடங்களிலேயே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்களுக்கு அவர்கள் போதித்தனர். அதனால் கல்வி கற்பித்த இடங்கள் பள்ளிக் கூடங்கள் எனப்பட்டன.
    பெண் கல்வி:
    • வந்தவாசி அருகில் உள்ள 'வேடல்' என்ற ஊரில் இருந்த சமணப் பள்ளியில், பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.
    • 'பட்டினிக்குரத்தி' என்னும் சமணப்பெண் ஆசிரியர், விளாப்பாக்கத்தில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவி உள்ளார். சமணப் பள்ளிகளில் பெண்களும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர் என்பதை இவை வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கு என்று தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப்பள்ளிகள் 'பெண் பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன.

    3. அப்துல் ரகுமானின் கவிதையிலிருந்து வினா - விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.
    விடைகுறிப்பு:
    கற்றேன் என்பாய் கற்றாயா?
    வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை.
    பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்?
    வெறும் பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.
    மேற்குறித்த அடிகள், அப்துல் ரகுமானின் கவிதையில் வெளிப்படும் வினாவிடை வடிவிலான அடிகள் ஆகும்.

    4. கல்வியால் நீ அடைந்த சிறப்புகளைப் பத்து வரிகளில் எடுத்துரைக்க.
    விடைகுறிப்பு:
    • நான் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். பள்ளியில் சேர்ந்தபோது எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்கள் கல்வியின் சிறப்பையும், கல்வி கற்பதனால் பெறும் பயன்களையும் கற்பித்தனர். "கல்வி அழியாதது; அறிவை வளர்க்கும். தாய்தந்தையர், சேர்த்த செல்வம் இறுதிவரை உதவாது. எவரேனும் கவர்ந்து கொள்ளவும் கூடும். ஆனால், கற்கும் கல்வி, எக்காலத்திலும் நற்பெயரைத் தரும். கொடுத்தாலும் குறையாது. பெருகவே செய்யும்” என்றெல்லாம் சொன்னார்.
    • நான் கற்றதால், என் சுற்றத்தவர் இன்று என்னிடம் மரியாதையுடன் பேசுகின்றனர். இன்னும் கல்லூரிப் படிப்பை முடித்து, நல்ல பணியில் சேர்ந்தால் சமுதாயம் என்னை மதிக்கும். நான் வாழும் சமுதாயத்திற்கு உதவும் வகையில் பணியாற்ற எண்ணுகிறேன். நான் கற்ற கல்விதான், என் சிந்தனைகளையும் உறவுகளையும் வளர்ப்பதோடு ஊக்கத்தைத் தூண்டுவதாகவும் நினைக்கிறேன்.
     
     

    ஈ) நெடு வினா

    1. பௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்விமுறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.
    விடைகுறிப்பு:
     
    முன்னுரை:
    தனிமனிதனைச் சமுதாயத்திற்கு ஏற்றவனாய் மாற்றும் வல்லமை கொண்டதாய்க் கல்வி இருத்தல் வேண்டும். முன்னோர்களால் பலநூறு ஆண்டுகளாகச் செழுமைப்படுத்தப்பட்ட அக்கல்வி, ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவினையும் அனுபவத்தினையும் வழங்க வேண்டும்.

    பண்டையக் கல்விநிலை:
    'எல்லோருக்கும் கல்வி' என்னும் உயரிய நோக்கம் பண்டைய காலத்தில் உருப்பெறவில்லை. அக்காலத்தில் எண்ணற்ற தனியார் பள்ளிகள் இருந்தாலும், அவை ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. அனைத்து மாணவரும் படித்துப் பயன் பெற வேண்டும் என்னும் நோக்கில் அரசு பல பள்ளிகளைத் தொடங்கி, குறைந்த கட்டணத்தில் பயில்வதற்கு இன்று வழிவகை செய்துள்ளது. இந்த நோக்கோடு பண்டைய அரசுகள் செயல்படவில்லை. அதனால், கற்க விரும்புவோர், “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது" ஆசிரிர்களிடம் கல்வி பயில வேண்டிய நிலை ஏற்பட்டது.

    சமண பௌத்த சமயக் கல்வித் தொண்டு:
    'பள்ளி' என்னும் சொல்லுக்கு 'படுக்கை' என்பது பொருள். சமணத் துறவியின் படுக்கைகளின்மீது அமர்ந்து மாணவர் கற்றதால் அது 'பள்ளிக்கூடம்' என வழங்கப்படலாயிற்று. 'பள்ளி' என்னும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடையாகும். தமிழகத்தில் வேரூன்றிய சமண சமயம் கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் எனப் பல அறங்களைச் செய்ய முன்வந்தது. சமண சமயத்தைச் சார்ந்த திகம்பரத் துறவிகள் மலைக் குகைகளைத் தங்கள் தங்குமிடமாய்க் கொண்டனர். கற்பதற்கு, முன்வந்த மாணவர்களுக்கு அங்குத் துறவியர் கல்வியையும் சமயக் கருத்துகளையும் போதித்தனர்.

    சமுதாயத்தின் இரு கண்கள்:
    வந்தவாசிக்கு அருகிலுள்ள ஊர் வேடல். அங்கிருந்த சமணப்பள்ளியில் சமணப் பெண் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார். பட்டினிக்குரத்தி என்பவர் சமணப் பெண் ஆசிரியர், விளாப்பாக்கத்தில் பள்ளி ஒன்று நிறுவியுள்ளார். பெண்களுக்கெனத் தனியாய்க் கல்வி கற்பிக்கப்படும் சமணப் பள்ளிகள் பெண் பள்ளிகள் என வழங்கப்பட்டன.

    மரபுவழிக் கல்வி முறைகள்:
    தமிழ்நாட்டுக் கல்வி வரலாறு
    மரபுவழிக் கல்வி முறைகளுள் ஒன்று, குருகுலக் கல்விமுறை. இது செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாய் வாழ்தல் என்னும் அடிப்படையில் அமைந்தது. இம்முறை, போதனா முறையைத் தாண்டி, வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதியானதாய் விளங்கியது.

    மற்றொரு மரபுவழிக் கல்விமுறை, திண்ணைப் பள்ளிகள் ஆகும். அக்காலத்தில் கிராமந்தோறும் திண்ணைப் பள்ளிகள் இருந்தன. இம்முறையைப் பின்பற்றி ஸ்காட்லாந்தில் ரெவரெண்ட் பெல் என்பார் 'மெட்ராஸ் காலேஜ்' என்னும் பெயரில் பள்ளிகள் அமைத்தார். இதனால் திண்ணைப் பள்ளியின் சிறப்பினை அறியமுடிகிறது,.

    இன்னொரு மரபுவழிக் கல்வி, உயர்நிலைக் கல்விமுறையாகும். இம்முறைப்படி உயர்நிலைக் கல்வியைப் புலவர்களிடம் தனிப்பட்ட முறையில் கற்றுத் தேர்ச்சி பெறலாம்.

    முடிவுரை:
    ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னரே தமிழகம் பலவகைக் கல்வி முறைகளால் கல்வியின் பல நிலைகளில் சிறப்புற்று விளங்கி வந்துள்ளது


    2. 'ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நண்பன் என்பவன் பிரிக்க முடியாத அங்கமாவான்' என்பதை ஜெயகாந்தனின் 'ஒரே நண்பன்' சிறுகதைவழி விளக்குக.
    விடைகுறிப்பு: 

            நல்ல நண்பர்கள் அமையும்போதுதான் வாழ்க்கை நலமாக அமையும் என்பது நடைமுறை. வள்ளுவர் நட்பைத் தேர்ந்து கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார். பழகுபவரிடையே நல்லவரைத் தேர்ந்தெடுப்பது என்பது அரிய செயலாகும். 'இடுக்கண் களைவதாம் நட்பு' என்னும் அரிய வழக்குக்குச் சான்றாக உள்ளது ஜெயகாந்தனின் 'ஒரே நண்பன்' கதையாகும்.

            மாமாவின் ஆதரவுடன் சந்திரன் கல்லூரியில் சேர்ந்தான். அதே கல்லூரியில் மதுரை அருகே உள்ள சிற்றூரிலிருந்து வந்த வேணுவும் சேர்ந்திருந்தான். இருவரும் விடுதியில் ஒரே அரையில் உடன் உறைபவர்களாக இருந்தனர். சந்திரனின் மாமா திடீரென்று இறந்தார். சந்திரனுக்குப் படிப்பைத் தொடரமுடியாத நிலை உருவாயிற்று. இந்தச் செய்தியை அறிந்த வேணு, சந்திரனின் படிப்புக்குத் தான் உதவுவதாகக் கூறினான். இவ்வளவு நாள் மாமாவுக்குச் சுமையாக இருந்த தான் மற்றவருக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை என்றான். வேணு தனக்கு அவன் சுமை இல்லை என்றும் தன்னால் உதவமுடிந்தால் தனக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்றும் கூறினான். சந்திரன் தன் நண்பனாக வேணுவை ஏற்றான்.

            சமமான ஒத்த தரத்தவராக வேணு சந்திரனைக் கருதியதால், கடிகாரம் வாங்கத் தந்தை அனுப்பிய 400 ரூபாயைக் கொண்டு இரண்டு கைக்கடிகாரங்களை வாங்கி நண்பனுக்கு ஒன்றைக் கொடுத்தான். உதவச் சக்தியுள்ள தான் தன் நண்பனுக்கு உதவி செய்வது சுமையாகாது எனக் கருதிய வேணு, சந்திரனை வற்புறுத்திக் கொடுக்க, சந்திரனும் கண்டிப்பை மீற முடியாமல் பெற்று அணிந்து மகிழ்ந்தான்.
    படிப்பு முடிந்தது. வேணு தன் தந்தை மதுரையில் புதிதாகத் தொடங்கிய தொழிற்சாலைப் பொறுப்பை ஏற்கச் சென்றான். உலகம் எப்படி இருக்கிறது எனச் சொல்லத் தெரிந்த சந்திரனுக்கு உலகில் எப்படி வாழ்வது எனப் புரியாமல் திகைத்தான். 'உதவி கேட்பது நட்பின் உரிமை. அதைக் கேவலமாக நினைப்பதோ, வெட்கப்படுவதோ நட்பு முழுமை அடைய உதவாது' என விளக்கிய வேணு, தன் தந்தையின் நண்பர் ஒருவர் தொடங்கிய பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிய வழிசெய்து “இது உனக்குப் பொருத்தமான தொழிலாக இருக்கும்" என்று தெரிவித்தான். சந்திரன் தான் எழுத்தாளனாகவும் பத்திரிகை ஆசிரியனாகவும் மாறப் போவதை எண்ணி மகிழ்ந்து பணியில் சேர்ந்தான்.

            இருவரும் மாதத்தில் ஓரிரு முறை கடிதத் தொடர்பால் நட்பைக் கைவிடாமல் பேணிக் காத்தனர். தொழில் தொடர்பாக சென்னை வரும்போதெல்லாம் வேணு சந்திரனைச் சந்தித்து உரையாடி, ஊர் சுற்றிப் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர். வேணு ஊர் திரும்பும்போது நண்பன் மறுத்தாலும் செலவுக்கு நூறு இருநூறு கொடுத்துச் செல்வான். எவ்விதப் பொறுப்பும் சிரமமும் இல்லாமல் நண்பன் என்கிற முறையில் வேணு தரும் வசதிகளை அனுபவித்து வருவதாக எண்ணினான்.

            பத்திரிகை உரிமையாளருக்கும் சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், எழுத்தாளர்களைப் பற்றியும் எழுத்தைப் பற்றியும் புரிதல் இல்லாதவரிடம் பணியாற்ற விரும்பாமல், ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினான். வேணுவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதினான் சந்திரன். பதில் இல்லாததால் கையிலிருந்த பதினைந்து ரூபாயுடன் நண்பன் வேணுவைக் காண மதுரைக்குப் புறப்பட்டான்.

            மதுரை ஜங்ஷனிலிருந்து வேணுவின் அலுவலகத்திற்குச் சென்று வரவேற்பு அறையில் காத்திருந்தான். பியூன் அழைத்ததால் சென்று வேணுவைச் சந்தித்து நட்பு முறையில் "என் கடிதங்களுக்குப் பதில் போடவில்லையே!” என்ற நண்பனைத் திகைக்க வைக்க நினைத்து வந்த சந்திரனுக்கு வேணு "எனக்கு நேரமில்லை” என்றதும், முகம் பார்க்காமல் சொன்ன பதிலும் சந்திரனால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனித குணங்கள் மாற்றமுறுவதாக எண்ணிய சந்திரன், தான் வேலையை விட்ட காரணத்தைக் கூறினான். “அது உன் சொந்த விஷயம்” என அலட்சியமாகப் பதில் கூறி வேணு ஒதுங்கினான். நண்பன் சந்திரன் இருநூறு போய் கேட்டபோது, தன்னிடம் இல்லை எனக் கூறி காரில் ஏறிவிட்டு இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை நீட்டினான். அதை வேண்டாமெனக் கூறிப் புறப்பட்ட சந்திரன், நண்பன் தந்த கடிகாரத்தை விற்றுச் சென்னை திரும்பினான்.

            தற்செயலாக ஒரு விருந்தில் சந்தித்த மாஜி முதலாளி சந்திரனிடம் வங்காளத்தில் இருப்பதுபோல் உழைக்கும் பத்திகையாளர்களை ஒன்றிணைத்து செயல்படலாம். அதுவரை தம் பத்திரிகையிலேயே மறுத்து எழுதலாம் என்றார். “சொந்த சிந்தனையுள்ள உன்னைப்போல் இங்கு யாரும் இல்லை” எனப் பாராட்டினார். லட்சியங்கள் பேசுவது சுலபம் என உணர்ந்தான். வாழ்க்கைச் சக்கரம் உருண்டது.

            ஒருநாள் தன் அறைக்குத் திரும்பிய சந்திரன், காத்திருந்த வேணுவைக் கண்டு திகைத்தான்; வேணு தோழமையுடன் தோள்மேல் போட்ட கையை விலக்கிவிட்டு அறைக்குள் நுழைந்தான். “என்மேல் கோபமா? நீ எழுதிய 'நட்பு'க் கதை என்னை நினைத்து எழுதியதுபோல் உள்ளது. ஒருவனைத் தப்பாகப் புரிந்து கொள்வதில்கூட எழுத்தாளனுக்கு ஒரு நன்மை இருக்கு" என்று பாராட்டினான் வேணு.

            'சந்திரனின் தவறான எண்ணத்தை எப்படி மாற்றுவது' எனச் சிந்தித்த வேணு, “எனக்குத் தொழில் முறையில் பல நண்பர்கள் உண்டு. அவர்களின் தேவைக்கு என்னைப் பயன்படுத்திக் கொண்டவர்கள், எனக்குச் சந்தர்ப்பத்தில் உதவ முன்வருவதில்லை. அவர்கள் நட்பு எல்லாம் நட்பு ஆகாது. உன் நட்பை என் தோழமையாக எண்ணினேன். உயிருக்கு உயிரான நட்பின் பொறுப்பை யோசித்தேன். என் நட்பு உன்னை அசட்டு மனிதனாக ஆக்கிவிடக் கூடாது. நம் நட்பு முறிந்து விடக்கூடாது. நீயும் சராசரி மனிதனாகிவிடக் கூடாது என எண்ணி அவ்வாறு நடந்து கொண்டேன்" என்றான்.

            சிறிதுநேர மௌனத்திற்குப்பின், சந்திரன் சிந்தித்துத் தெளிவு பெற்றான். போராடிச் சாதிக்க வேண்டும். “ஓர் இடத்தில் நிலையாக நிற்கப் பிரயத்தனப்படணும். நட்பு ஒரு சுமை இல்லைன்னு நீ சொல்லுவாயே?" என வேணு சிரித்தான்.

            சந்திரன் மனம் லேசாகி வேணுவைப் பார்த்துச் சிரித்தான், “எல்லா நண்பர்களிடத்திலும் செய்த தவறை உன்னிடம் செய்ய விரும்பவில்லை. உனக்குப் பிடித்தமான 'கோட்ஸுட்டைப் பெற்றுக்கொள்" எனக் கொடுத்தான். "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்" எனக் கூறி பர்ஸைத் திறந்தான் வேணு. "சந்துரு! நட்புக்கு இவை ஆதாரம் இல்லை. இவை அல்பமானவை” என்று கூறி வேணு நீட்டிய கைகளைச் சந்திரன் பற்றிக்கொண்டான். கீழே சிதறிக் கிடந்த விலை உயர்ந்த ஸுட்டும் பணமும் அவர்களின் காலடியில் கிடந்தது.

            அன்புக்கு அடைக்கும் தாழ் கிடையாது. உண்மை நட்புக்குப் பொன் பொருள் தேவை இல்லை. உற்றுழி உதவும் பாங்கு ஒன்றே நட்பை உறுதிப்படுத்தும். உணர்ச்சியும் பழகுதலும் பயன் கருதாது அன்பு செலுத்துவதுமே உண்மை நட்பு என்பதை ஜெயகாந்தன் வேணு சந்திரன் பாத்திரப் படைப்பின் வாயிலாக நிறுவியுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.



    II. மொழியை ஆள்வோம்

    அ) சான்றோர் சித்திரம்  

    ஜி.யு.போப்
            செந்தமிழ்ச் செம்மல் ‘டாக்டர் ஜி.யு. போப்', 1839ஆம் ஆண்டில், தென்னிந்தியாவுக்கு வந்தார். சென்னையை அடைந்த போப், 'சாந்தோம்' என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் தமிழுரை, கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது. தமிழ் மொழியைப் பயிலத்தொடங்கிய சிறிது காலத்திலேயே, ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள், திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.
            போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்களைப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ஐரோப்பியர், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார். ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார். பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார். எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் செய்த பெரியார் ஜி. யு. போப் ஆவார்.
    கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக.
     
    1.  இலக்கணக் குறிப்புத் தருக.
    அ) பிறந்தார் ஆ) அருளிய
    விடைகுறிப்பு:  
    • பிறந்தார் - படர்க்கைப் பலர்பால் இறந்தகால வினைமுற்று.
    • அருளிய - பெயரெச்சம்.
     
    2. திருக்குறளை ஐரோப்பியரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு. போப் - விடைக்கேற்ற வினாவை எழுதுக.
    விடைகுறிப்பு: 
    • எந்த எண்ணத்தில் திருக்குறளை ஆங்கிலத்தில் ஜி.யு. போப் மொழி பெயர்த்தார்?
     
    3. பதிப்பித்தார் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
    விடைகுறிப்பு: 
    • பதிப்பித்தார் - பதிப்பி + த் + த் + ஆர்
    • பதிப்பி - (பிறவினைப்) பகுதி,
    • த் - சந்தி,
    • த் - இறந்தகால இடைநிலை,
    • ஆர் படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.
     
    4. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
    பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையக் கல்வியேப் பயனளிக்குமென்றும் போப் கருதினார்.
    விடைகுறிப்பு: 
    • பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பயனளிக்குமென்றும் போப் கருதினார்.

    ஆ) செய்திக்குக் கீழுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை மொழிபெயர்ப்புப் பகுதியிலிருந்து கண்டறிந்து எழுதுக.

    The Chinese have no religious science. The practices of their religion (Buddhism) are derived from India. They believe that it is the Indians who brought idols to them and that the latter were their religious educators. In China and in India they believe in metempsychosis. The Chinese and Indians draw from the same religious principles different conclusions. In India medicine and philosophy are practiced. The Chinese practice medicine equally. Their chief treatment is cauterization. The Chinese practice astronomy but the Indians practice this science still more.
    Written by Abu Zayd Al Sirafi, traveler,
    10th century.
    Foreign notices of South India by K.A.Neelakanda Sastri. 
    விடைகுறிப்பு: 
            சீனாவுக்கென்று தனியாக மதங்கள் இல்லை. இந்தியாவின் மதத்தை (பௌத்தம்) அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். சிலைகளைத் தங்களுக்கு அறிமுகம் செய்தோர் இந்தியர்கள் என்று நம்பும் சீனர்கள், இந்தியர்களே தங்களின் மத ஆசிரியர்கள் என்றும் கருதுகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் மரணத்துக்குப் பின்னான மறுபிறப்பை நம்புகின்றனர். ஒரே மதக் கோட்பாடு இருந்தாலும், சீனர்களும் இந்தியர்களும் வெவ்வேறு தீர்மானங்களுக்கு வருகிறார்கள். இந்தியாவில் மருத்துவமும், தத்துவமும் நடைமுறையில் உள்ளன. அவர்களுக்குச் சமமாகச் சீனர்களும் மருத்துவத்தை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். 'தீய்த்தல்' அவர்களது பிரதான சிகிச்சை முறை. சீனர்கள் வானியல் சாஸ்திரப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இந்த அறிவியலை இந்தியர்கள் இன்னும் அதிகமாய்ப் பயன்படுத்துகின்றனர்.
    Religion       - மதம் (சமயம்)
    Medicine     - மருத்துவம்
    Philosophy - தத்துவம்
    Science       - அறிவியல்
    Idols            -  சிலைகள்

     

    இ) கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக.

            கல்வி என்றால் என்ன? அது நூல்களைப் படிப்பதா? அல்லது அது பலவகையானதைக் குறித்த அறிவா? எதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின்மூலம் மனத்தின் ஆற்றலும் அது வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுப் பயன்தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும். அக்கல்வி வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மனத்தை ஒருமுகப்படுத்துதல் பயிற்சி. கல்வியின் நோக்கம் செய்திகளைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று. கல்வியின் நோக்கம் மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான். மனவொருமைப்பாடே கல்வியின் அடிப்படை.
            எல்லோரும் தங்கள் அறிவு வளர்ச்சிக்கு அம்முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். மனத்தை ஒருமுகப்படுத்தும் அளவுக்கு அறிவும் வளரும். இயற்கையால் மூடப்பட்டிருக்கும் அறிவுச்சுடரைத் திறப்பதற்கு இதுவொன்றே சிறந்த வழியாகும். மனிதன் தன் சக்தியை நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு வீண் செய்து விடுகிறான். இதனால்தான், அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய மனத்தைப் பெற்றவன், ஒரு தவற்றையும் செய்ய மாட்டான்.
            மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. எத்துறையிலும் வெற்றி பெறுவது இதைப் பொறுத்துத்தான் அமைகிறது. இசை, ஓவியம், சிற்பம் முதலிய எல்லாக் கலைகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வது, மன ஒருமைப்பாடுதான். மேலும், உலகத்தின் புதிர்களை மூடி வைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமையை நாம் பெற வேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது, மன ஒருமைப்பாடுதான். அதுவே கல்விக்கு அடிப்படையாகும். (சுவாமி விவேகானந்தர் - கல்வி)

    சுருக்கிய படிவம்:

    கல்வி என்பது அறிவதில்லை. மனஉறுதியின் ஆற்றலும் அது வெளிப்படும் தன்மையும் பயன்தர அமையும் பயிற்சியே. மனத்தை ஒருமுகப்படுத்துதலே கல்வியின் நோக்கமும் அடிப்படையும். இதனை ஒருமுகப்படுத்தும் அளவுக்கு அறிவு வளரும். அறிவைப் பெறுவதற்கு இதுவே வழி. மனிதன் தன் சக்தியால் தவறு செய்கிறான். பண்புடையவன் தவறு செய்யான். எத்துறை வெற்றியும் கலைகளில் தேர்ச்சியும் இதனைப் பொறுத்ததே. புதிர்களைத் திறக்கும் மந்திரம் மனஒருமைப்பாடு.
     

    ஈ) இலக்கிய நயம் பாராட்டுக

    பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்;
    மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல
    மாதர் அறிவைக் கெடுத்தார்.
    கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக் காட்சி கெடுத்திட லாமோ?
    பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடும் காணீர்.
                                                                                     - பாரதியார்
    ஆசிரியர் குறிப்பு:
    இப்பாடலைப் பாடியவர் நற்றமிழ்க் கவிஞர் பாரதியாராவார். இப்பாடலில் சமுதாயத்தில் பெண்கள் கல்வி கற்றுச் சிறக்க வேண்டுவதை வலியுறுத்திப் பாடியுள்ளார்.
    மையக்கருத்து:
    "பெண்கள் அறிவை வளர்க்கக் கல்வி அளிக்கவேண்டும். அதனால் உலகமே வெளிச்சம் பெறும்” என்பதை மையக் கருத்தாக வைத்துப் பாடியுள்ளார்.
    எதுகை:
    அடிதோறும் முதல் எழுத்து அளவு ஒத்திருக்க முதல் சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது அடிஎதுகை.
    பெண்ணுக்கு, மண்ணுக்குள் கண்கள், பெண்கள் - அடிஎதுகை
    மோனை:
    அடிகளிலோ சீர்களிலேலா முதலெழுத்து ஒன்றிவருவது மோனை.
    சீர்மோனை:
    பெண்ணுக்கு, பேணி;
    ண்ணுக்குள்ளே, மாதர்
    ண்கள், காட்சி;
    பெண்கள், பேதைமை
    அணி:
    பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதனை நயம்பட இயல்பான சொற்களால் பாடுவதால், இதில் இயல்பு நவிற்சி அணி அமைந்துள்ளது. எனினும், “கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ?” என வினவுவதால் உவமைஅணியும் அமைந்துள்ளது.
    சந்தம்:
    இப்பாடலில் எதுகை மோனைகள் அமைய எளிய, இனிய சொற்களைக் கொண்டு சுவையுடன் பாடி மகிழத்தக்க வகையில் பாடியுள்ளமையால், சந்த நயம் வெளிப்படுகிறது.
    சுவை:
    இப்பாடலில், பெண்கள் கல்வி பெறத் தடையானவர்களைச் சாடுவதனால் கவிஞரின் அறச் சீற்றம் புலப்படுகிறது. எனவே, சீறிப்பாயும் 'வெகுளிச் சுவை' அமைந்துள்ளது.
     


    III. மொழியோடு விளையாடு

    அ) எண்ணங்களை எழுத்தாக்குக.

    ஆயிரம் பிழைப்புண்டு உலகில் 
    அனைத்திற்கும் கல்வி வேண்டும் நிஜத்தில்! 
    மேலும் மேலும் படித்து நீ உயர்ந்தால் 
    விரும்புகின்ற பணியிலே சேரலாம்! 
    கைநிறைய காசுபார்க்க ஆசைப்பட்டால் 
    அல்லும் பகலும் அயராது படி ! படி ! படி! 
     

    விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

    1. தனிமொழி - அறிவு; ___________ - வண்ணமயில்; பொதுமொழி - ____________.
    விடைகுறிப்பு: 
     தனிமொழி - அறிவு; தொடர்மொழி - வண்ணமயில்; பொதுமொழி - தாமரை
     
    2. கார்காலம் - ______________ ; குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை; _______________ - மார்கழி, தை
    விடைகுறிப்பு: 
     கார்காலம் மார்கழி, தை. ஆவணி, புரட்டாசி. குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை. முன்பனிக்காலம்- மார்கழி, தை
     
    3. எழுத்து, சொல், __________________ ,யாப்பு, _____________.
    விடைகுறிப்பு: 
     எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
     
    4. எழுத்து, ________, சீர், தளை, தொடை,
    விடைகுறிப்பு: 
     எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை.
     

    சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

    கா : கால்நடை:
    கால்நடைகளை மேய்ச்சல் நிலத்திற்கு ஒட்டிக்கொண்டு போனார்கள்.
    சிறிய தொலைவைக் கடக்கக் கால் நடையாகச் செல்வது உடலுக்கு நலம் பயக்கும்.
    1. பிண்ணாக்கு - நான் மாட்டிற்குப் பிண்ணாக்குத் தண்ணீர் கொடுத்தேன்.
    பிள்நாக்கு           - மருத்துவர்கள் அவனது பிள்நாக்கைச் சரிசெய்தனர்.
     
    2. எட்டுவரை - இரவு எட்டுவரை மட்டுமே அவன் படிக்கிறான்.
    எள்துவரை    - எள்துவரை வியாபாரி வருகிறார்.
     
    3. அறிவில்லாதவன் - அறிவில்லாதவன் கல்வியில் நாட்டம் கொள்வதில்லை.
    அறிவில் ஆதவன்     - சங்கரர், அறிவில் ஆதவனாகத் திகழ்ந்தார்.
     
    4. தங்கை - என் தங்கை இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு எழுதுகிறாள்.
    தம் கை    - தம்கையே தமக்கு உதவி.
     
    5. வைகை - வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார்.
    வை கை    - 'வை கை' என்றவுடன் மாணவர்கள் தலைமீது கை வைத்தனர்.
     
    6. நஞ்சிருக்கும் - அவரது ஆடை எப்போதும் நஞ்சிருக்கும்.
    நஞ்சு இருக்கும் - கயவர்களின் பேச்சில் நஞ்சு இருக்கும்.
     

    IV. நிற்க அதற்குத் தக.

    கல்வி நம்மைப் பண்படுத்த வேண்டும். நாம் பண்பட்டிருக்கிறோமா?

    கல்வியின் விளைவு
    என்ன செய்தீர்கள் / செய்வீர்கள்?
    பெரியவர்களுக்கு மதிப்பளித்தல்
    நாள்தோறும் என் பெற்றோரை வணங்கி விட்டுத்தான் பள்ளிக்கு வருகிறேன்.
    பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்தல்
    பூனை குறுக்கே போனால் கெட்டது நடக்கும் என்பதை மறுத்துப் பேசி வருகிறேன்
    பொறுமையைக் கடைப்பிடித்தல்
    என்னை அடித்த என் மாணவ நண்பர்களை நான் திருப்பி அடிக்கவில்லை.
    தன்னை அறிதல், தன்னம்பிக்கை வளர்த்தல்
    ஆங்கிலப் பாடத்தில் நான் குறைந்த மதிப்பெண்களைப் பெறுகிறேன். இருப்பினும் பொதுத்தேர்வில் 90% மதிப்பெண்களைப் பெறப் போராடுவேன்.
    சமத்துவம் பேணுதல்
    நான் ஜாதி, மதங்களைப் பொருட்படுத்துவது இல்லை. அனைவரும் சமமே.
    உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்
    எங்கள் தெருவில் திரியும் நாய்களுக்குத் தினமும் நாங்கள் உணவிடுவோம்

    அ) படிப்போம்; பயன்படுத்துவோம்!

    Education Committee - கல்விக்குழு
    Infrastructure              - உள்கட்டமைப்பு
    Classical Language    - செம்மொழி
    Ancestor                     - மூதாதையர்
    Value Education         - மதிப்புக்கல்வி
    Mental Ability            - மன ஆற்றல்
     
     

    V இலக்கணத் தேர்ச்சி கொள்

    1. கலைச்சொல்லாக்கம் பொருள் தருக.
    விடைகுறிப்பு:  
    கலைச்சொல்லாக்கம் என்பது பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் அடையாளம் காட்டியும், தேவையான இடத்தில் புதிதாகச் சொற்களை உருவாக்கியும் தருவதாகும்.
    எ-கா : Compounder மருந்தாளுநர்
    Website - இணையம் 
     
    2. கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?
    விடைகுறிப்பு:  
    ஆக்கம் பெறும் கலைச்சொல் தமிழ்ச் சொல்லாக இருத்தல் வேண்டும்.
    பொருள் பொருத்தம் உடையதாகவும், செயலைக் குறிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
    வடிவில் சிறியதாக, எளிமையானதாக இருத்தல் வேண்டும்.
    ஓசை நயமுடையதாக இருத்தல் வேண்டும்.
    தமிழிலக்கண மரபுக்கு உட்பட்டதாய் இருத்தல் வேண்டும்.
    நல்லவை அல்லாதவற்றைக் குறிக்கக்கூடாது.
     
    3. பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை எழுதுக.
    விடைகுறிப்பு:  
    School Education - பள்ளிக்கல்வி
    Director - இயக்குநர்
    Chief Minister - முதலமைச்சர்
    Text Book - பாடநூல்
    Horticulture தோட்டக்கலை
    Escalator - நகரும் மின்படி
    Personality - ஆளுமை, வேறுபட்ட பண்பு.
    Emotion - மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி.
    Plastic - நெகிழி
    Apartment - அடுக்குமாடிக் குடியிருப்பு
    Straw - நெகிழிக்குழல், உறிஞ்சுகுழல்.
    Mass Drill - கூட்டு உடற்பயிற்சி
    Average - நடுத்தரம், சராசரி அளவு.
     
    4. Ship என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக.
    விடைகுறிப்பு:  
    நாவாய், கலம்.

    VI திருக்குறள்

    குறு வினா

    1. மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?
    • நோயாளி, மருத்துவர், மருந்து, மருத்துவ உதவியாளர் என்னும் நான்கு வகையில் பிரிவுகளாக மருத்துவம் அமையும் எனக் குறள் கூறுகிறது.
     
    2. படைக்குப் பாதுகாப்பாக இருப்பவை எவை?
    • வீரம், மானம், முன்னோர் வழியில் நடத்தல், நம்பிக்கைக்கு உரியவராதல் என்னும் நான்கே படைக்குப் பாதுகாப்பாக இருப்பவையாகும்.
     
    3. பகைவர் வலிமையற்று இருக்கும்போதே வென்றுவிட வேண்டும் என்னும் குறட்பாவைக் கூறுக.
    “இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து".
     
    4. எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
    • உண்டதும், செரித்தலும் அறிந்து உண்டால், மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

    சிறு வினா

    1. உருவக அணிக்குத் திருக்குறள் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தந்து விளக்குக.
    இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும்”
    அணி விளக்கம்:
            உவமானம், உவமேயம் என்னும் வேறுபாடு இல்லாமல் இரண்டும் ஒன்றே எனத் தோன்றுமாறு கூறுவது உருவக அணியாகும்.
    சான்று விளக்கம்:
            'வறுமைக் கடலைக் கடக்கும் ஒருவன் கைக்கொண்ட இரத்தலாகிய பாதுகாப்பு இல்லாத படகு, கரத்தல் என்னும் பாறை தாக்குமாயின் சிதைந்து விடும்' என்பது குறளின் பொருள்.
            இக்குறளில் இரத்தலைப் படகாகவும், கரத்தலைப் பாறையாகவும் உருவகப் படுத்திக் கூறியதால், உருவக அணியாகும்.
     
    2. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
            கைகொல்லும் காழ்த்த இடத்து இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
    அணிச்சுட்டல் :
            இக்குறட்பாவில் 'பிறிதுமொழிதல் அணி' பயின்று வருகிறது.
    அணி விளக்கம்
            புலவர் தாம் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாய்க் கூறாமல், அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றனைக் (உவமையைக்) கூறி, அதிலிருந்து தாம் கூறக் கருதிய பொருளைப் (உவமேயத்தைப்) பெற வைப்பது பிறிதுமொழிதல் அணியாம்.
    சான்று விளக்கம் :
            களைந்து எறிய வேண்டிய முள் மரத்தினை அஃது இளையதாய் இருக்கும் போதே களைந்தெறிய வேண்டும். அது வளர்ந்து முற்றி வைரமுடையதானபின் களைய முற்பட்டால், களைபவரின் கைகளை அழித்துவிடும்.
    அணிப்பொருத்தம்
            அழிப்பதற்குரிய பகைவர் வலிமையற்றவராய் இருக்கும்போதே அவர்களை அழித்துவிட வேண்டும்" என்பதனைக் கூறி வலிமை பெற்றபின் அவர்களை அழிக்க முற்பட்டால், அவர்கள் நம்மை அழித்து விடக்கூடும் என்னும் கருத்தைப் பெற வைத்தலால், இஃது பிறிதுமொழிதல் அணி ஆகும்.
     
    3. எண்ணியதை அடைதல் எப்போது எளிதாகும்? குறள் கருத்தை விளக்குக.
            மறதி என்பது மனிதனைக் கெடுத்துவிடும். முயற்சிகளுக்குத் தடையாக அமையும். எனவே, ஒன்றை அடைய அதனை நினைத்து முயற்சி செய்தல் வேண்டும்.
            இதனைக் குறள், “எப்போதும் (அடைய) எண்ணியதை எண்ணிக் கொண்டே இருந்தால், அவ்வாறு எண்ணியதை எளிதில் அடையலாம்" எனக் கூறுகிறது.
     
    4. பகைத்திறம் தெளிதல் குறித்துத் திருக்குறள் கூறும் கருத்துகள் யாவை?
            பகை என்பது பண்பற்ற தன்மையாகும். எனவே, விளையாட்டுக்கு கூட அதை விரும்புதல் கூடாது. பகைவரைத் தேடுவதில், பாதுகாப்பை உருவாக்க வேண்டும்.
    வில் வீரனின் பகை உடலுக்குத் தீங்கு செய்யும். ஆனால் சொல் வல்லானிடம் பகை கொண்டால், அது தீராத பழியைத் தரும். எனவே, அறிஞர் பகை கொள்ளக்கூடாது. பகையை முழுமையாக அழிக்கவேண்டும். இல்லையானால் அது வளர்ந்து நம்மை அழித்துவிடும்.
            இதனை விளக்க வள்ளுவம், முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே அழித்தல் எளிது என்பதைச் சுட்டிக்காட்டிக் குறள் அறிவுறுத்துகிறது. இக்கருத்து மனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

    நெடு வினா

    1. வாழ்வின் உயர்வுக்கு உறுதுணையாக நீங்கள் கருதும் குறட்பாக்கள் சிலவற்றை விளக்கிக் கட்டுரையாக்குக.

    முன்னுரை :
            மக்களாய்ப் பிறந்தவர் மக்களாக வாழ உரிய நெறிகளைக் காட்ட வள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். அந்தத் திருக்குறள் காட்டும் நெறியே குறள் நெறியாகும். இனிக் குறள் நெறி வாழ்வுக்கு உறுதுணையாவதைக் காண்போம்.
     
    நெறி என்பது யாது? :
            'நெறி' என்றால் 'வழி' என்று பொருள். நல்வழி, தீவழி என அவ்வழி இருவகைப்படுமெனினும், 'வழி' என்பது 'நல்ல வழி'யையே குறிக்கும். 'வழியே ஏகுக; வழியே மீளுக' என்பது சான்றோர் உரை. இங்கு வழி என்பது நல்ல வழியையே குறிக்கிறது. தீவழியை 'நெறியல்லா நெறி' என்றனர் பெரியோர். இனி வாழ்விற்கு உறுதுணையாகக் கூடிய சில குறட்பாக்கள் குறித்துக் காண்போம்.
     
    உள்ளம் உயரட்டும் :
            ஒருவன் வாழ்வில் உயர வேண்டுமானால், அவன் தன் உள்ளத்தில் உயர்வான எண்ணங்களை வளர்த்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஒன்றை எண்ணிக்கொண்டே இருந்தால் அதனை அடைதல் எளிது என்கிறார். அதனை,
    “உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
    உள்ளியது உள்ளப் பெறின்"
    என்பது அவர் படைத்த குறள். இது ஒருவனுக்குச் சரியான நெறிகாட்டல் அல்லவா?
     
    எதையும் குறிப்பால் அறிதல் வேண்டும் :
            உலகில் நம்பிக்கைக்கு உரியவர் சிலராகவே இருப்பர். பகைவன் எவன், நண்பன் எவன் என்பதை எளிதில் தெளிய முடியாது. நண்பனா, பகைவனா என்பதனை எவ்வாறு அறிவது? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா? முகத்தை உற்று நோக்கித் தெளிவதும் கடினமே. எனவே, வள்ளுவர், 'முகக்குறிப்பால் அகக்குறிப்பை அறி” என்று கட்டளை இடுகிறார். முகத்தில் உள்ள பொறிகளுள் கண் எதனையும் தெளிவாகக் காட்டிவிடும் என்கிறார். அதனை, கண்ணின் குறிப்பை உணர்வதற்குரிய வல்லமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். அத்தகைய ஆற்றல் உள்ளவர்களை எவரும், எதைக் கொடுத்தும் உறவு கொள்ள முன்வருவராம். எனவே, குறிப்பு அறிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
    "குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்தும் கொளல்”
    என்கிறார். குறிப்பறிந்து செயல்படுவோர் வாழ்வில் சிறப்பிடம் பெறுவர் என்பது இதனால் புலப்படும்.
     
    நோயற்ற வாழ்வு:
            வள்ளுவர் 'மருந்து' என்றோர் அதிகாரம் வைத்துள்ளார். அதில் நோயுற்றவருக்கு மருத்துவம் செய்யும் நெறிமுறைகளைத் தெளிவாகக் கூறுகிறார். நோய் உண்டாவதற்கான காரணத்தைக் கூறுகிறார். நோய் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளைக் கூறுகிறார். எனினும், அந்த அதிகாரத்தில் 'ஒருவனுக்கு மருந்தே தேவை இல்லை' என்று குறளில் குறிப்பிடுகிறார். நோயற்ற வாழ்வு தானே குறைவற்ற செல்வம்! நோய் வருமுன் காத்தல் தானே அறிவுடைமை! நோய் ஏன், எப்படி வருகிறது? சரியான, அளவான, தீமை பயவாத உணவை உண்ணாமை என்பதே முதல் காரணம் அல்லவா?
    “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்"
    என்பதே அக்குறள். மருந்து எதற்கு உண்கிறோம்? நோய் தீர்வதற்குத்தானே! இவர் 'நம் யாக்கைக்கு மருந்து என ஒன்று தேவை இல்லை' என்றே குறளைத் தொடங்குகிறார். நோயற்ற வாழ்வுக்கு வழி கூறுகிறார். அதில் மனிதனுக்கு நலமான நோயற்ற வாழ்வுக்கு 'உணவே மருந்து' எனச் சுட்டுகிறார். எப்படி உண்டால் நோய் வராது, மருந்துண்ணத் தேவை இல்லை என்பதை விளக்குகிறார். அதாவது, “முன் உண்டது செரித்ததை அறிந்து, அடுத்த வேளை உணவை உண்டால் போதும்” என்கிறார். இது மனித வாழ்வுக்கு உற்ற துணையாகும் கருத்து அல்லவா?
     
    முடிவுரை :
            மனித வாழ்வின் உயர்வுக்கு உற்றதுணையாக விளங்கக்கூடிய இத்தகைய குறள்களை வாழ்வில் கடைப்பிடிக்கின்ற எவரும் மனிதருள் மாணிக்கமாகத் திகழ முடியுமல்லவா. ஒவ்வொரு குறளையும் ஆழ்ந்து கற்போம்! வாழ்வில் உன்னத நிலைபெற, வாழ்வாங்கு வாழ வழி வகுப்போம்.
     


     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     









    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive