முதல்வர் ஸ்டாலினுக்கு 7 வயது மாணவி எழுதிய கடிதம் எதிரொலி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, May 11, 2021

முதல்வர் ஸ்டாலினுக்கு 7 வயது மாணவி எழுதிய கடிதம் எதிரொலி: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு!


பொன்னேரியில் புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கக் கோரி முதல்வருக்கு 7 வயது மாணவி கடிதம் எழுதியதன் விளைவாக, இன்று சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாஸ்கரன். இவரது மகள் அதிகை முத்தரசி (7). இவர் பொன்னேரி சிவன்கோயில் அருகே உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பள்ளிக் கட்டிடத்தைச் சீரமைக்கக் கோரியும், ஆக்கிரமிப்புக்குள்ளான பள்ளி மாணவர்கள் விளையாடப் பயன்படுத்திய அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக் கோரியும் 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் அதிகை முத்தரசி பொதுநல வழக்குத் தொடர்ந்தார். 

அந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. அப்போது, ஒரு ஆண்டுக்குள் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தர வேண்டும். ஆக்கிரமிப்புக்குள்ளான புறம்போக்கு நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது

இதற்கிடையே பள்ளி நிர்வாகம் தரப்பில் அதிகை முத்தரசிக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எதிர்கால நலன் கருதி, அதிகை முத்தரசி, தற்போது தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். பொன்னேரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்கக் கோரி முதல்வருக்கு 7 வயது மாணவி கடிதம் எழுதியதால், நேற்று அப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். 

இந்நிலையில், ஓராண்டாகியும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 7-ம் தேதி அதிகை முத்தரசி கடிதம் எழுதினார். அதன் விளைவாக இன்று பொன்னேரிக்கு வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவி அதிகை முத்தரசி, அவரது தந்தை பாஸ்கரன் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்; முதல்வருக்குக் கடிதம் எழுதிய மாணவியைப் பாராட்டி, அவருக்குப் புத்தகத்தைப் பரிசாக அளித்தார். தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளி வளாகத்தைச் சுற்றிப் பார்த்து, ஆய்வு மேற்கொண்டார்.

அந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ''பொன்னேரியில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 17.32 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு சமீபத்தில்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆகவே, புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். 

அரசுக்கு வருகிற மனு பெரியவர்களிடம் இருந்து வருகிறதா? சிறியவர்களிடம் இருந்து வருகிறதா? எனப் பார்ப்பதில்லை. மனுவின் உண்மைத் தன்மை குறித்து அறிந்து, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என்ற மனநிலையில் முதல்வர் ஸ்டாலின் என்னை பொன்னேரிக்கு அனுப்பியுள்ளார்” என்று தெரிவித்தார். 

அமைச்சரின் இந்த ஆய்வின்போது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி எம்.எல்.ஏ.,க்களான டி.ஜெ. கோவிந்தராஜன், துரை. சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post Top Ad