பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, May 31, 2021

பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்க அனுமதி


கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு, இபிஎஃப் சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2-வது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎஃப்ஓ) அனுமதித்துள்ளது.

இதுதொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கொரோனா தொற்று சமயத்தில் இபிஎஃப் சந்தாதாரர்கள் சிறப்பு முன்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ் (PMGKY) கடந்த 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான திருத்தத்தை அரசாணை மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1952-ல், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்தது.

இந்த விதிமுறையின் கீழ், 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது இபிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ, அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக இபிஎஃப் சந்தாதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம். குறைவான தொகைக்கும், உறுப்பினர்களால் விண்ணப்பிக்க முடியும்.

இந்த கொரோனா கால முன்பணம், தொற்று காலத்தில் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு குறிப்பாக ரூ.15,000-க்கும் கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. தற்போது, வரை இபிஎஃப்ஓ 76.31 லட்சம் கொரோனா கால முன்பண கோரிக்கைகளை ஏற்று, உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.18,698.15 கோடி விநியோகித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை சமயத்தில், 'மியுகோமைகோசிஸ்' அதிகமாக பரவும் நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிக்கலான நேரத்தில், உறுப்பினர்களின் நிதி தேவைகளை தீர்க்க, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட இபிஎஃப்ஓ முயற்சிக்கிறது.

ஏற்கெனவே முதல் முன்பணம் எடுத்த இபிஎஃப் உறுப்பினர்கள், தற்போது, 2வது முறையாக முன்பணம் எடுக்கலாம். இதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள், முதல் முன்பணம் எடுத்ததற்கான விதிமுறைகளை போன்றதுதான்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad