ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி ! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, May 24, 2021

ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி !


தனியார் பள்ளியில் பாலியல் புகார் எழுந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னையில் இன்று (மே 24) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மீது, முன்னாள், இந்நாள் மாணவிகள் பலர் பாலியல் புகார் அளித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "அதுகுறித்த தகவல் எனக்கும் வந்தது. இது தொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். தலைமைக் கல்வி அதிகாரி (சிஇஓ) அதற்கான விளக்கத்தையும் அவர்களிடம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகார்கள் நேற்றைக்குத்தான் தங்களுக்கும் வந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புகாருக்கான விளக்கத்தை சிஇஓ மூலமாக பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது. கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்படும் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இதே மாதிரியான புகார்கள் வந்திருந்தால், உரிய ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நடந்தது என்ன?

சென்னையில் தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் மோசமாகப் பேசி மாணவிகளைப் பாலியல் தொல்லை செய்வதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், ''சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு பற்றி பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தால் தண்டிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

திமுக எம்.பி. கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், ''சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதைக் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பாலியல் புகார் எழுந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்.

Post Top Ad