தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக இருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த புதிதாக அமைந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு போராடி வருகிறது. அமைச்சர்களும் கடுமையாக பாடுபட்டு வருகின்றனர். ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க அதனை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து பெற்று வருகின்றனர். உலகளாவிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மொத்தத்தில் தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
இந்நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்ற தொடங்கிவைக்கிறார். திருப்பூரில் இன்று தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி பதிவு செய்யப்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி போடப்படுகிறது.