கரோனா களப் பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, May 25, 2021

கரோனா களப் பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு!



வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் உள்ளதா என கண்டறியும் களப்பணியில் ஈடுபட ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், ஆசிரியர்கள்வீடு வீடாகச் சென்று தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கண்டறிய வேண்டும் என ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கல்வித் துறை மூலம் ஆசிரியர்களுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது:

500 ஆசிரியர்கள் உயிரிழப்பு

மாநிலம் முழுவதும் தேர்தல் பணி மற்றும் பாடப் புத்தக விநியோகத்தில் ஈடுபட்டதன் விளைவாக, கரோனா தொற்றுக்கு ஆளாகி 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் செவிலியர் செய்யக்கூடிய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மற்றும் அறிகுறிகளைக் கண்டறியும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். எவ்வித பயிற்சியும் இல்லாமல், ஆசிரியர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் கரோனா பரவும்.

கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது, ஆசிரியர்கள் மருத்துவமற்ற பணிகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நடைமுறையை இந்த ஆண்டும் பின்பற்ற வேண்டும்.

தவிர்க்க இயலாத சூழலில் ஆசிரியர்களுக்கு களப்பணி வழங்கப்பட்டால், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கூடாது. ஆசிரியர்களை நேரடி களப்பணியாளர்களாக நியமிக்கும் முன்பாக, அவர்களை முன்களப் பணியாளர்களாக கருதி அரசாணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்தகோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மனுவும் அனுப்பியுள்ளார்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கரோனா அறிகுறிகள் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட களப்பணியை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் களப்பணி அல்லாத இதர பணிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.

இறந்த ஆசிரியைக்கு பணியாணை

ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆசிரியை மணிமேகலை நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கும் கரோனா தொற்றை கண்டறியும் பணியில் ஈடுபட, பணியாணை வழங்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


Post Top Ad