மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 01.06.2021 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு இந்நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லி, விக்யான் பவனில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க மத்தியக் கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆர்.சி.மீனா இன்று அனைத்து மாநிலங்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும்/ செயலாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ''ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற நாளை (ஜூன் 1) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூன் 20 ஆகும்.
ஆசிரியர்கள் கூடுதலாகப் பங்கேற்கும் வகையில் மாநிலங்கள் விருது குறித்த அறிவிப்பைப் பரவலாக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு https://nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதள முகவரியைக் காணலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பிரிவில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 2 பேருக்கும் தேசிய நல்லாசிரியர் விருதை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கியது. கரோனா காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி முறையில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது