பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்தது ஏன்?
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அளித்த சிறப்பு பேட்டியில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது;-
“பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக கடந்த 2 மாதங்களாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. தமிழக அரசை பொறுத்தவரை எந்த நேரத்திலும் தேர்வை நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது. கடந்த 1ந் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், சி.பி.எஸ்.சி.க்கான பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்வது குறித்து முடிவு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அவர்களின் உடல்நலமும் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அரசு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே ஆரம்பத்திலேயே எந்த முடிவும் எடுக்காமல், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் கடந்த 2 நாட்களாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் உடல்நலத்தை காக்கும் வகையில் அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்ற கருத்தையே அனைவரும் பிரதானமாக முன்வைத்தனர்.
அதே நேரம் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதன் மூலம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை கொண்டு வந்தால் அதை நாம் எதிர்த்தாக வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தெரிவித்தனர்.
இவ்வாறு பல்வேறு தரப்பினரிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மாணவர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் இன்று பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.”
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்..