சென்னை:'மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள ஆசிரியர்கள், வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, தமிழகபள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசின் விருதுகளுக்கு, தமிழக அரசில் இருந்து நேரடியாக பரிந்துரை கடிதம் அனுப்புவதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.தகுதியான ஆசிரியர்களுக்கு மட்டுமே நல்லாசிரியர் விருதை வழங்கும் வகையில், நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, மத்திய கல்வித்துறை கூறியுள்ளது.
இந்த ஆண்டு, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை, தமிழக அரசு விமர்சிக்கும் நிலையில், மத்திய அரசின் நல்லாசிரியர் விருதை பெற அனுமதி அளிக்குமா என, ஆசிரியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.இந்நிலையில், மத்தியஅரசின் விருதுக்கு விண்ணப்பிக்க, ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் அனுமதி வழங்கி உள்ளார்.
அதன்படி, முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:கடந்த 2020ம் ஆண்டுக்கான, மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதை பெற தகுதியுள்ள ஆசிரியர்கள், http://nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளத்தில், நேரடியாக தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம்.
வரும் 20ம் தேதிக்குள்விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மத்திய கல்வி துறையின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-