புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு என்று தனிக்கல்வி வாரியம் இல்லை. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் தமிழக கல்வி வாரியத்தையும், மாஹே மாணவர்கள் கேரள கல்வி வாரியத்தையும், ஏனாம் மாணவர்கள் ஆந்திர கல்வி வாரியத்தையும் பின்பற்றி பயின்று வருகின்றனர்.
தற்போது கரோனா தொற்றின் 2வது அலையின் காரணமாக நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகம், புதுச்சேரியிலும் கரோனா தொற்றுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் மத்திய அரசு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அறிவித்தது. இதேபோல் தமிழக அரசும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது.
தமிழக பாடத்திட்டத்தை புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் பின்பற்றி பயின்று வருவதால் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் கிடையாது. தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை என்ன வழிகாட்டுதலை தருகிறதோ, அது புதுச்சேரியிலும் பின்பற்றப்படும்'' என்று தெரிவித்தனர். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. தமிழக பாடத் திட்டத்தைப் பின்பற்றி புதுச்சேரியில் சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.