நீட் பாதிப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, June 29, 2021

நீட் பாதிப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்த தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கவேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதை ரத்து செய்யக்கோரியும் கே.நாகராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். (இவர் தமிழக பா.ஜ.க.-வின் பொதுச் செயலாளராக இருப்பதாக மனுவில் கூறியுள்ளார்). அந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post Top Ad