கல்லூரி மாணவர்கள் சரியாக தேர்வு எழுதாத காரணத்தினால் ஆன்லைன் மூலம் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் படிக்கும் பொறியியல் மாணவர்கள் அனைவரிடமிருந்தும் 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர்கள் கூறும்போது அண்ணா பல்கலை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் ஏராளமான மாணவர்கள் அரியர் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே பொறியியல் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெற்றபோது முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், புகார்கள் குறித்து மாணவர்களை அழைத்து பேச வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஆன்லைன் மூலம் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆன்லைன் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.