ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, June 2, 2021

ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தல்


தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான வேலைவாய்ப்பும் எளிதாகவும், விரைவாகவும் கிடைத்து வந்தது.
அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதித் தேர்வும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மருத்துவத் துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்று “மருத்துவத் துறை பணியாளர் தேர்வு வாரியம்” இந்தியாவிலேயே முதல்முறையாக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது. 

இதன்மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டமைப்பு இல்லை, பணியாளர்கள் இல்லை,நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் இல்லை, வெளிப்படைத்தன்மை இல்லை, நிதிச்சுமை ஆகியவற்றை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு அதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைப்பது என்பது காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை காலதாமதமாக்கும் செயலாகும்.

இதனால் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதில் தொய்வு நிலை ஏற்படும்.ஏனெனில் லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கப்படும் போது, அங்கும் பணியாளர் பற்றாக்குறை, கட்டமைப்பின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டது என்பதற்காக இது கலைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால், அவற்றை முற்றிலும் போக்கி வாரியம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


Post Top Ad