தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க, அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 9, 10, 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், தொடக்க கல்வி இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் எம்.பழனிசாமி அனுப்பிய சுற்றறிக்கையில், 'குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ம் வகுப்பு வரை எந்த ஒருமாணவரையும் தேக்க நிலையில் வைக்காமல், தேர்ச்சி செய்யவேண்டும்.
எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியேற்றக் கூடாது. அதன்படி 2020-21-ம் கல்வியாண்டில் அனைத்துவித பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளின் தலைமைஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் பள்ளிகளைத் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். அதேபோல் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும்' என்று அதில் கூறப்பட்டுள்ளது.