அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வேண்டும் என்பதால், சில வகுப்புகளுக்கு மட்டும் மீண்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே தளர்வற்ற நிலையில் இருந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களும் கடந்த இரண்டு நாட்களாக செயல்படத் தொடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக பள்ளிகளில் உள்ள அனைத்து பணிகளை தொடரவும், பள்ளிகளை தயார் நிலையில் வைக்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆ சிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் 14ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு நடத்தப்படமாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது , உயர்கல்வி படிப்பதற்கான சான்றுகள் வழங்குவது தொடர்பான பணிகள் நடக்க இருப்பதால், மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாலும், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள், கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டியுள்ளது. மேலும், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியில் கற்றல் சார்ந்த நிகழ்வுகளை பார்வையிட வைக்க வேண்டியுள்ளது. அதனால் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்( தொடக்கப்பள்ளிகள் முதல் மேனிலைப் பள்ளிகள் வரை) பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும். மேற்கண்டவர்கள் பணிக்கு வருவதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பிளஸ் 2 மதிப்பெண் எப்படி கணக்கிடலாம்! கல்வியாளர்கள் கருத்து
பிளஸ் 2 மதிப்பெண் கொண்டு தான் உயர்கல்வி சேர்க்கை நடக்க இருப்பதால், முந்தைய ஆண்டு பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு, கல்வியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.கொரோனா தொற்று காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.சி.பி.எஸ்.இ., சார்பில், மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாததால், மாநில அரசும் முடிவுகளை இறுதி செய்யாமல், தாமதம் காக்கிறது.
மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்து, கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.சதீஷ்குமார், மாநில ஒருங் கிணைப்பாளர், கல்வியாளர் சங்கம்:மற்ற வகுப்புகளை போல அல்லாமல், பிளஸ் 2 மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கை, சில போட்டித்தேர்வுகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே மதிப்பீட்டு நடைமுறை அறிவிக்கும் முன், குளறுபடிகள் இருப்பது தெரியவந்தால், மேற்கொள்ளப்படவுள்ள துறை ரீதியான நடவடிக்கை குறித்தும் வெளியிட்டு, நேர்மையான மதிப்பீட்டு முறையை உறுதி செய்ய வேண்டும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து, 30 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் இருந்து 30 சதவீதம், பிளஸ் 2வில் பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கலாம். மீதமுள்ள, 10 சதவீத மதிப்பெண்களுக்கு, அந்தந்த பள்ளி மதிப்பீட்டு குழு வழங்குமாறு தெரிவிக்கலாம்.
பீட்டர்ராஜா, மாநில தலைவர், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மட்டுமே, முறைப்படி நடந்துள்ளது. பள்ளி அளவிலான தேர்வுகள் நடத்த கல்வித்துறை உத்தரவிடவில்லை.
செய்முறை பாடங்களுக்கு, 30 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மதிப்பெண்களில், 20 சதவீதம், பிளஸ் 1 மதிப்பெண்களில் 50 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம். செய்முறை அல்லாத பாடங்களுக்கு, அகமதிப்பீட்டு தேர்வாக, பள்ளிகள் சார்பில், 10 மதிப்பெண் வழங்கப்படும். மீதமுள்ள, 90 மதிப்பெண்களில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து, 30 சதவீதமும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் இருந்து, 60 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடலாம். பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே, கணக்கீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.