2021, ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, November 7, 2020

2021, ஜனவரி 1-ம் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்ட் டேக் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு


2021ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் நாடுமுழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும் போது பாஸ்ட் டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாஸ்ட்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்தது.

இதன்படி வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்ட் டேக் அட்டையில் பணம் வசூலிக்கப்பட்டு விரைவாகச் செல்ல முடியும்.

இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

2017, டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு (M and N ) 4 சக்கர வாகனங்களுக்கும் இனிமேல் 2021, ஜனவரி 1-ம் தேதி முதல் பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்படுகிறது.
மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ன்படி, 4 சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்களிடம் புதிதாக 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்யும்போதே பாஸ்ட் டேக் எண்ணை அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4 சக்கர வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ்(பிட்னஸ் சர்டிபிகேட்) பெறும்போது, கண்டிப்பாக பாஸ்ட் டேக் வைத்திருக்க வேண்டும். பாஸ்ட் டேக் வைத்திருக்கும் வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச்சான்று தரப்படும்.
2019, அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து நேஷனல் பெர்மிட் வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காப்பீடுச் சட்டத்தில் திருத்தத்தின்படி, வாகனங்களுக்கு தேர்டு பார்ட்டி இன்சூரந்ஸ் பெறும்போதும் கண்டிப்பாக பாஸ்ட் டேக் அட்டை வைத்திருக்க வேண்டும். காப்பீடு எடுக்கும்போது, பாஸ்ட் டேக் அடையாள எண்ணை அளிப்பது கட்டாயமாகும். இந்த நடைமுறை மட்டும் 2021, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்ட் டேக் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் சுங்கச் சாவடிகள் 100 சதவீதம் மின்னணு முறையில் செயல்படும். வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியதில்லை, இதனால் எரிபொருளும் சேமிக்கப்படும்.

வாகனங்களுக்கு எளிதாக பாஸ்ட் டேக் கிடைக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அடுத்த இரு மாதங்களுக்குள் 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் பாஸ்ட் டேக் அட்டையை வாகனத்தில் ஒட்டிக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

Post Top Ad