டெபிட் கார்டு-கிரடிட் கார்டு சில வித்தியாசங்கள்:தெரிந்து கொள்ளுங்கள் :


தற்போது டெபிட் கார்டு, கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டெபிட் கார்டுக்கும், கிரடிட் கார்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்

டெபிட் கார்டு-கிரடிட் கார்டு
இந்தியாவில் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு இவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜன்தன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு டெபிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கணக்குகள் தொடங்கிய அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஎம்ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

டெபிட் கார்டுக்கும், கிரடிட் கார்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்:

வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்கும் போது, இக்கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு டெபிட் கார்டை வங்கி அவருக்கு அளிக்கும். இந்த டெபிட் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் கணக்கில் இருக்கும் நிலுவை பணத்தை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

எனவே கணக்கில், பணம் இல்லையென்றால் டெபிட் கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியாது. இதில் பண பரிமாற்றத்திற்கு வட்டி விகிதங்கள் முற்றிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. டெபிட் கார்டை ஒப்பிடுகையில் கிரடிட் கார்டு பயன்பாடு என்பது முற்றிலும் மாறுபட்டது. கிரடிட் கார்டு பெற்றுள்ளவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக அறிவித்திருக்கும்.

உதாரணமாக வங்கி கணக்கில் ஒருவருக்கு உச்சவரம்பு ரூ.1 லட்சம் என்றால் அந்த தொகை வரை பணம் எதுவும் செலுத்தாமலேயே பணத்தை எடுக்க முடியும். எனினும் இத்தொகைக்கான குறிப்பிட்ட வட்டி தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டி கட்டவில்லை எனில் அபராத தொகை செலுத்த நேரிடும்.

எனவே பணம் கிடைக்கிறது என்பதற்காக தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் கிடைக்கும் வருமானம் வட்டி கட்டவே போய்விடும். இயன்றவரை டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்த முயலுங்கள். அவசரமான சூழ்நிலையில் மட்டும் கிரடிட் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாகும். மேலும் கிரடிட் கார்டில் செலவு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியில் செலுத்தி விட வேண்டும். அவ்வாறு செய்தால் வட்டி தொகையை சேமிக்கலாம்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive