பள்ளிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிப்பு - அரசு தீவிர ஏற்பாடு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, August 10, 2021

பள்ளிகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிப்பு - அரசு தீவிர ஏற்பாடு!


செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்ததை அடுத்து, பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதற்கான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில், பள்ளிகள், கல்லூரிகளை திறக்க கடந்த வாரம் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் திறக்கப்படும் என்றும், ஆகஸ்ட் 16ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் கல்வி அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். அதில், முதல்வர் அறிவிப்புக்கு இணங்க 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளை செப்டம்பர் 1ம் தேதி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டு வழிமுறைகள் தயாரிக்கும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி 50 சதவீத மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரும் வகையில் சுழற்சி முறையின் கீழ் வகுப்புகளை நடத்துவது என்றும், ஒற்றைப்படை இரட்டைப்படை என மாணவர்களை பிரித்து சுழற்சி முறையில் வரவழைப்பது என்றும், முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வகுப்பு இடைவேளையின்போது அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குவிந்துவிடாத வகையில் இடைவேளையின் நேரமும் மாணவர்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்கைகள் இடைவெளியுடன் கூடியதாக அமைக்கப்பட உள்ளன. உணவு வேளையின் போது மாணவ மாணவியர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. சமூக இடைவெளியுடன் தான் அமர்ந்து சாப்பிட வேண்டும். மேலும் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி வாயிலில் தெர்மல் கருவி மூலம் சோதிக்கப்படுவார்கள். சானிடைசர்கள், கையுறைகள், முகக் கவசம் அணிந்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அது குறித்து மாணவர்களுக்கும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகங்களை தூய்மை செய்து வைக்க வேண்டும் என்றும், வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டு தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அவர்களின் மனநலம் சீராகும் வகையில் உடற்பயிற்சி, உளவியல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஆன்லைனில் படித்த பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால் அந்த பாடங்களை மீண்டும் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாடத்திட்டத்தில் இருந்து சில பாடப் பகுதிகள் குறைக்கப்பட்டது போல இன்னும் சில பாடப்பகுதிகளை குறைக்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மாணவர்களுக்கு உதவிகள் வழங்க வசதியாக அனைத்து பள்ளிகளிலும் அந்தந்தபகுதியில் உள்ள மருத்துவமனைகளின் எண்கள், சுகாதார மையங்களின் எண்கள் ஆகியவற்றை பள்ளி வளாகத்திலோ அல்லது தகவல் பலகையிலோ எழுதி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து ஆலோசனைகளும் நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்டு அதன்படி வழிகாட்டு நெறிமுறைகள் தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஆகஸ்ட் 16ம் தேதி முதல் மருத்துவக் கல்லூரிகளை திறக்க மருத்துவ கல்வி இயக்ககம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

Post Top Ad