ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள நாளை அஞ்சலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, சென்னை மத்திய முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்திய அஞ்சல் துறையின் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 13ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதியதாக ஆதார் பதிவு, முகவரி, புகைப்படம், பெயர், பாலினம், பிறந்த தேதி, கைபேசி எண், மின்னஞ்சல் திருத்தம், 5 மற்றும் 15வது வயதில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் ஆகிய சேவைகள் தபால் நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதன்படி, மயிலாப்பூர், தியாகராய நகர், பார்த்தசாரதி கோயில், சேப்பாக்கம், கோபாலபுரம், மெட்ராஸ் யுனிவர்சிட்டி, மந்தைவெளி, அக்கவுண்டன்ட் ஜெனரல் தபால் நிலையம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, சூளைமேடு, கிரீம்ஸ் ரோடு, இந்தி பிரசார சபா, நுங்கம்பக்கம் ஹைரோடு, தியாகராய நகர் வடக்கு ஆகிய தபால் நிலையங்களில் பொதுமக்கள் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகளை தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆதார் திருத்தங்களுக்காக ரூ.50 சேவைக் கட்டணமாக பெறப்படும். புதிதாக ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு கட்டணம் இல்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.