மார்ச் 1ஆம் தேதியிலிருந்து அதாவது நாளையிலிருந்து என்னென்ன விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன, என்னென்ன மாற்றங்கள் உருவாகவிருக்கின்றன என்பன குறித்தும் அதனால் பொதுமக்களின் வாழ்வில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் விரிவாகக் காணலாம்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இவ்விதி மிக மிக அவசியம்!
மார்ச் 1ஆம் தேதியிலிருந்து உங்களின் எஸ்பிஐ கணக்கு செயலில் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் கேஒய்சி (KYC) தகவல்களைப் பதிந்துகொள்ள வேண்டும். அதாவது வாடிக்கையாளர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உங்கள் கணக்கு செயல் இழந்துவிடும்.
2,000 ரூபாய் நோட்டுக்களை ஏடிஎம்மிலிருந்து எடுக்க முடியாது?
இந்தியன் வங்கி ஏடிஎம்களில் இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஏற்றப்படாது என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கட்டாயம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் வேண்டுமென்றால் வங்கிக்குச் சென்று பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
இனி இலவச பாஸ்டேக் கிடைக்காது?
நாளையிலிருந்து அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் 100 ரூபாய் கொடுத்தே பாஸ்டேக் பெற்றுக்கொள்ள வேண்டும். பாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு விலை:
இது வழக்கம் போல உள்ள ஒரு மாற்றம் தான். மாதத்தின் முதல் நாள் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்கும் என எண்ணெய் நிறுவனங்கள் கூறியிருப்பது அனைவரும் அறிந்தே ஒன்றே. இருப்பினும், இம்மாதம் மட்டுமே மூன்று முறை விலையேற்றமடைந்து 100 ரூபாய் அதிகமாகியிருக்கிறது. இப்போதைய விலை 810 ரூபாயாக இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்:
நாட்டில் பெரும் பேசுபொருளாக இருப்பது பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தான். இதனால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான மதிப்பு பொறுத்து தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இருப்பினும், குளிர்கால முடிவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வரும் என பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.