முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.
முதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அட்டவணையை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் அண்மையில் வெளியிட்டது. இப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்.23) தொடங்கியுள்ளது.
மாணவர்கள் nbe.edu.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் 3 மணி முதல் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் தேர்வு, கட்டணம், தேர்வு எழுதத் தேவையான தகுதி, ஹால்டிக்கெட், தேர்வு மையங்கள், கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் என்பிஇ வெளியிட்டுள்ளது.
அதன்படி முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம் ரூ. 3,750 இல் இருந்து, ஜிஎஸ்டி வரி ரூ.765 சேர்த்து, தற்போது ரூ.5,015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோலப் பட்டியலின, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளிப் பிரிவினருக்கான நீட் தேர்வுக் கட்டணம் முன்னர் ரூ.2,750 ஆக இருந்த நிலையில், 18 சதவீத ஜிஎஸ்டி வரி ரூ.585 சேர்த்து, தற்போது ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர்த்து இணையச் சேவையைப் பயன்படுத்துவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விவரங்களுக்கு: https://www.digialm.com//per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/1111535453007404457970.pdf