ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, February 25, 2021

ஆசிரியர் பணி வயது வரம்பு அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு


ஆசிரியர் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக பள்ளி கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சுமதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை ஆசிரியர் பணிக்கு 58 வயது வரை விண்ணப்பிக்க முடியும். ஆனால் தற்போதைய அறிவிப்பில் 2021 ஜூலையில் 40 வயதை கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் 40 வயதை கடந்தோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

எனவே, தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வு விசாரித்தது. மனு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Post Top Ad