சேர்க்கையைத் திரும்பப் பெறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தைத் திரும்பக் கொடுங்கள்: ஏஐசிடிஇ உத்தரவு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 18, 2020

சேர்க்கையைத் திரும்பப் பெறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தைத் திரும்பக் கொடுங்கள்: ஏஐசிடிஇ உத்தரவு


நவம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் மாணவர் சேர்க்கையைத் திரும்பப் பெறும் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

கரோனா காரணமாகத் தள்ளிப்போன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கைப் பணிகள் தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்நிலையில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அனைத்துத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

''கல்வி நிறுவனங்களில் இணைந்த மாணவர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக, நவம்பர் 30-ம் தேதிக்குள் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்தால் அவர்களிடம் இருந்து வசூலித்த முழுக் கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும். செயல்முறைக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.1000-ஐ மட்டுமே வசூலிக்கலாம். அதே நேரத்தில் மாணவர்களின் அசலான பள்ளிச் சான்றிதழ்களை வைத்துக்கொள்ளக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

மாணவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு தனது இடத்தை விட்டுக்கொடுத்து, அந்த இடம் டிசம்பர் 5-ம் தேதிக்குள் மீண்டும் நிரப்பப்பட்டால், செயல்முறைக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.1000 தொகையுடன் விகிதாச்சாரக் குறைப்பு அடிப்படையில், கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கலாம்.

அதே நேரத்தில் நவம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கையை விட்டுக் கொடுத்து, அதே இடம் டிசம்பர் 5-ம் தேதிக்குள் மீண்டும் நிரப்பப்படாத சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு வைப்புக் கட்டணம் மற்றும் அசல் ஆவணங்கள் திருப்பித் தரப்பட வேண்டும்.

டிசம்பர் 1-ம் தேதிக்கு உள்ளாக லேட்டரல் என்ட்ரி மாணவர்கள் உட்பட இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

காலக்கெடுவைத் தாண்டிச் சேர்க்கையைத் திரும்பப் பெறும் மாணவர்களிடம் செமஸ்டர் கட்டணமோ, ஆண்டுக் கட்டணமோ வசூலிக்கப்படக் கூடாது. அதேபோல திருப்பித் தர வேண்டிய தொகையை 7 நாட்களுக்குள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். தாமதப்படுத்துவது ஏஐசிடிஇ விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்''. இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad