உணர்வுப்பூர்வமான தொடர்பு ஆன்லைன் வகுப்புகளில் இல்லை; பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து: பல்கலைக்கழக ஆய்வில் முடிவு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 18, 2020

உணர்வுப்பூர்வமான தொடர்பு ஆன்லைன் வகுப்புகளில் இல்லை; பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து: பல்கலைக்கழக ஆய்வில் முடிவு.


‘ஆன்லைன் கல்வி குறித்த கட்டுக்கதைகள்’ என்ற தலைப்பில் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் அண்மையில் ஆய்வு நடத்தியது. கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்களைச் சேர்ந்த 1,522 பள்ளிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

இதில், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது உணர்வுப்பூர்வமான தொடர்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஏற்படவில்லை என்று பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் கல்வி மூலமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் அனுபவம் குறித்து இந்த ஆய்வை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மேற்கொண்டது. 

80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டவை: “இந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் வகுப்புகளின்போது தங்களுடைய மாணவர்களுடன் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

அதேபோல ஆன்லைன் வழியில் தாங்கள் கற்பிக்கும் பாடம், மாணவர்கள் மனத்தில் சரியாகப் பதிகிறதா என்பதை மதிப்பீடு செய்ய முடியவில்லை என்று 90 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்யாததால் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 50 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

தங்களுடைய குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் முழுமையான கல்வி பெறவில்லை என்று 70 சதவீதப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். திறன்பேசி இல்லாததால் 60 சதவீதக் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சென்றடையவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக 90 சதவீதப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடங்கள் வழக்கப்படி திறக்கப்பட்டால் தங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமில்லை என்று 65 சதவீதப் பெற்றோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், கல்வியை ஆன்லைன் வழியாகக் கொண்டு சேர்ப்பதில் போதாமையும் குறைபாடுகளும் காணப்படுவதாக இந்த ஆய்வில் பங்கேற்ற பெருவாரியான ஆசிரியர்களும் பெற்றோரும் தெரிவித்துள்ளனர். 

உரிய சுகாதார, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைக்க பெரும்பாலான பெற்றோர் தயாராக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இணைய வசதி இல்லாதது, ஆன்லைன் பாடக் குறிப்புகள் கிடைக்காதது ஆகியவை மட்டுமே சிக்கல் அல்ல.

பள்ளி வயதுக் குழந்தைகளுக்கு நேரடியாக அல்லாமல் ஆன்லைன் வழியாகக் கற்பிப்பது போதுமானதாக இல்லை. பள்ளிப் பருவத்தினருக்குச் சிறந்த முறையில் கற்பிக்க ஆசிரியரும் மாணவரும் நேருக்கு நேர் சந்திப்பது, கவனம், சிந்தனை, உணர்வு இவை அனைத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. படிப்படியாக, ஒவ்வொரு மாணவருக்கு ஏற்றாற்போல கல்வி கற்பிக்கப்பட வேண்டியது அவசியம். 

பேச்சு மொழி மட்டுமின்றி உடல்மொழிக்கும் இதில் முக்கியப் பங்குள்ளது. இவை அனைத்தும் அசல் வகுப்பறையில்தான் சாத்தியப்படும்”. இவ்வாறு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post Top Ad