குரூப் 1 சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.


 



குரூப் 1-ல் அடங்கிய சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்காகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றுவது குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. கடந்த ஜன.3 அன்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் தேர்வெழுதினர். இதில் நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 3,752 பேர். இவர்களுக்கான நேர்காணல் மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு, மே. 28, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளது.


இந்நிலையில் சான்றிதழ் பதிவேற்றம் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்காகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) அரசு கேபிள் டிவி நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக நாளை (16/2/2021) முதல் மார்ச் 15 வரை பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது இணைய வழி விண்ணப்பத்தில் கோரியுள்ள அனைத்துத் தகுதிகளுக்கான ஆதாரங்கள் அடங்கிய அசல் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய முடியும்.

அதேபோல முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தேர்வுக்கட்டண விலக்குக் கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.200 கட்டணத்தை மார்ச் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறினால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் மார்ச் 15-ம் தேதிக்குள் சான்றிதழைப் பதிவேற்றம் செய்யவில்லை என்றாலும் அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive