நீதிமன்ற வழக்குகளைக் கையாளுவது எப்படி?-பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, January 2, 2021

நீதிமன்ற வழக்குகளைக் கையாளுவது எப்படி?-பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


நீதிமன்ற வழக்குகளைக் கையாளுவது எப்படி என்பது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் தங்களுடைய பணிகளை முறையாகச் செய்யாதது, காலம் கடத்துவது போன்றவை நீதிமன்றத்தில் வழக்காக மாறுவற்கு முக்கியக் காரணங்களாகின்றன.

வழக்குகளின் முக்கியக் கருத்துகளை, அரசு வழக்கறிஞர்களுக்கு எடுத்துரைத்து வழக்கின் முழு விவரங்களையும் நீதிமன்றத்திற்கு உரிய காலத்தில் சமர்ப்பிக்கத் தவறுதல், பிரதிவாதிகள் எந்த அலுவலராக இருந்தாலும், தங்கள் அளவில் செய்ய வேண்டிய கடமைகளை உடனடியாகச் செயல்படுத்தத் தாமதம் செய்தல் போன்றவையும் காரணங்களாகின்றன.

அலுவலர்களின் அதிகார வரம்புகள்

இவற்றைத் தவிர்ப்பது குறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:

''கல்வி அலுவலர்கள் தங்களுடைய அதிகார வரம்புகளைத் துல்லியமாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறரால் தொடுக்கப்படும் எந்த வகையான வழக்குகளாக இருந்தாலும், இவ்வழக்கு தங்களுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டதுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதிகார வரம்புக்கு உட்பட்டது எனில், தங்களது கடமைகளைத் தாமதமின்றிச் செய்ய வேண்டும்.

சட்டம், விதிகள், அரசாணை, செயல்முறைகள் ஆகியவற்றிற்கு உட்பட்டு, நீதிமன்றத் தீர்ப்பாணைகளை நடைமுறைப்படுத்தத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறைகள் அளவில் பிறப்பிக்க வேண்டிய ஆணைகளைக் காலதாமதமின்றி, உரிய விவரங்களுடன் இயக்குநர் வழியாக அரசுக்குக் கருத்துரு சமர்ப்பிக்க வேண்டும்.

வழக்குத் தொடரப்பட்ட ஆணை

வழக்குகளில் குறிப்புரை கோரும்போது சட்டம், விதி மற்றும் அரசாணைப்படி ஏன் அந்தப் பணியைச் செய்ய முடியவில்லை என்ற விவரம், வழக்கில் தளர்ச்சி அளிப்பதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு, எதிர்வாதத்தில் எவ்வாறு பாதிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் பிறரால் வழக்குத் தொடரப்பட்டால், அதற்கான நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவுடன் அரசு வழக்கறிஞர்களை அணுகி, வழக்கை நடத்துவதற்குக் கடிதம் அளிக்க வேண்டும்.

நோட்டீஸ், வாதியின் உரை, தடையாணை போன்றவற்றைத் தேவையான அளவு நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வழக்குத் தொடுக்கப்பட்ட நிகழ்வைக் குறித்து சுருக்கமான அறிக்கை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வழக்கில் பல அலுவலர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அதில் எந்த அலுவலரின் ஆணை வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதோ? அதையே அனைவரும் பின்பற்ற வேண்டும். நீதிமன்றத்தில் இருந்து அறிவிப்பு கிடைத்தவுடன், 24 மணி நேரத்திற்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும்.

வழக்கில் அரசுச் செயலர், இயக்குநர், இணை இயக்குநர்கள் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டிருந்தாலும், வழக்குத் தொடர்ந்த நபர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்கள் வழக்கு சார்ந்த விவரங்களை நீதிமன்றத்திற்கு உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு சார்ந்து அரசு வழக்கறிஞர்களுடன் கடிதப் போக்குவரத்து மட்டுமின்றி, அவ்வப்போது அவர்களை நேரில் சந்தித்தும் நினைவூட்ட வேண்டும்.

குறிப்புரை அனுப்புதல்

வாதியின் உரை குறித்து ஒவ்வொரு பத்தியாகக் குறிப்புரை அனுப்புதல் வழக்கின் மிக முக்கியக் கட்டமாகும். எந்த அலுவலரின் ஆணை மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதோ? அவரே வாதியின் உரை குறித்த குறிப்புரையைத் தயாரிக்க வேண்டும். இதற்கான ஆவணங்கள், கருத்துகள் மற்றும் புள்ளிவிவரங்களை 15 நாட்களுக்குள் சேகரித்துத் தொகுக்க வேண்டும். சார்நிலை அலுவலர்களுடன் உரிய விவரங்களைக் கேட்டுப் பெற வேண்டும்.

வழக்கில் வலுவூட்டக்கூடிய கருத்துகள் இருந்தால், அவற்றை ஆங்காங்கே சுட்டிக் காட்ட வேண்டும். அரசோ, இயக்குநரோ சேர்க்கப்படாத வழக்குகளில், நோட்டீஸை அரசு வழக்கறிஞருக்கு நேரடியாக அனுப்பி ஒப்புதல் பெற்று, அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த விவரத்தை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பிரதிவாத உரை தயாரிக்கச் செய்தல், வழக்கின் நிலை அறிதல், வழக்கின் முடிவறிதல், தொடர் நடவடிக்கை எடுத்தல் போன்றவை வழக்கின் அடுத்தடுத்த நகர்வுகளாகும். நீதிமன்ற வழக்குகளில் தவறான கருத்துகளை எடுத்துரைப்பதாலும், கருத்தைச் சொல்லாமல் தவிர்ப்பதாலும் ஏற்படும் விளைவுகளுக்குச் சம்பந்தப்பட்ட அலுவலரே பொறுப்பாவார்.

மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், அலுவலக உதவியாளர்களிடம் ஒப்புதல் பெற்று கோப்பில் வைக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கும் கொண்டுச் செல்ல வேண்டும்''.

Post Top Ad