கல்லூரி வாகனங்களுக்கு சி.சி.டி.வி., கட்டாயம்?: அலைச்சல் தருவதாக நிர்வாகிகள் அதிருப்தி


பள்ளி வாகனங்களில் மட்டுமே, சி.சி.டி.வி., மற்றும் ஜி.பி.எஸ்., பொருத்த ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், எப்.சி., செல்லும் கல்லுாரி வாகனங்களுக்கும் கட்டாயம் என்பது குழப்பமும், அலைச்சலும் தருவதாக, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கோவையில், பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அனைத்து பள்ளி வாகனங்களிலும், சி.சி.டி.வி., கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் எனக்கோரி, 2019ல், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் ஒரு மாதத்திற்குள் சி.சி.டி.வி., கேமராக்கள், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தி நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இவ்விரு அம்சங்கள் பொருத்தப்பட்ட, பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே, போக்குவரத்து துறை சார்பில், எப்.சி., எனப்படும், தகுதிச்சான்று வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, முதலாமாண்டு கல்லுாரி மாணவர்களுக்கு, நாளை வகுப்புகள் துவங்குகின்றன.இதற்கென, எப்.சி., உள்ளிட்ட தேவைகளுக்கு, கல்லுாரி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செல்கின்றன. ஆனால், சி.சி.டி.வி., மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் கல்லுாரி வாகனங்களுக்கு மட்டுமே எப்.சி., என, வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. கல்லுாரிகள் அதிருப்திஐகோர்ட் உத்தரவில், பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே என குறிப்பிட்டுள்ள நிலையில், உயர் கல்வி நிறுவன வாகனங்களுக்கும் கட்டாயம் என்பது, கல்லுாரிகள் துவங்கும் சமயத்தில், வீண் அலைச்சலை தருவதாக, கல்லுாரி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கத் தலைவர் அஜித்குமார் லால் மோகன் கூறியதாவது: சென்னை ஐகோர்ட் உத்தரவில், பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே, சி.சி.டி.வி., கேமராக்கள் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி வாகனங்களுக்கு என, எந்த வார்த்தையும் உத்தரவில் இடம்பெறவில்லை.அப்படியிருக்க, எப்.சி., செல்லும் கல்லுாரி வாகனங்களை, சி.சி.டி.வி., கேமரா - ஜி.பி.எஸ்., கருவி பொருத்தவில்லை என வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திருப்பி அனுப்புகின்றனர். அதுவும், முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும் சமயத்தில் இது வீண் அலைச்சலையும், பாதிப்பையும் தருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive