பள்ளிகள் திறக்கப் படாததால் - அச்சமூட்டும் ஆய்வுமுடிவுகள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, February 16, 2021

பள்ளிகள் திறக்கப் படாததால் - அச்சமூட்டும் ஆய்வுமுடிவுகள்


ஐந்து மாநிலங்கள் – 44 மாவட்டங்கள் – 1137 அரசுப் பள்ளிகள் – 1 முதல் 5 வகுப்புகள் - 16067 குழந்தைகள் – இவர்களிடம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது அசிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம்.

கோவிட் காலத்தில் குழந்தைகளிடம் கற்றல் இழப்பு நேர்ந்துள்ளதா? அப்படி இருந்தால் அது எந்தளவுக்கு? என்ற குறைந்தபட்ச வினாக்களின் அடிப்படையில் மொழி மற்றும் கணிதப் பாடத்தில் ஆய்வை நடத்தியுள்ளது.
மிகவும் அச்சமூட்டும் முடிவுகள். (படங்களைப் பார்க்கவும்)


முந்தைய ஆண்டு மூன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை, நான்காம் வகுப்பு படிக்காமல் ஐந்தாம் வகுப்புக்கு வந்திருக்கும். அதாவது மூன்றாம் வகுப்பில் படித்ததும் மறந்துபோயிருக்கும் நான்காம் வகுப்புக் கருத்துகள் தெரியவும் செய்யா. ஐந்தாம் வகுப்புக் கருத்துகளைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். இது குழந்தைக்கும் ஏன் ஆசிரியருக்கும் கூட மிகவும் கடினமான சூழல்.
இங்கு அரசும் ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகிகளும் இரண்டு திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஒன்று பெற்றோரின் எதிர்பார்ப்பு கலந்த அச்சத்தைக் குறைப்பது அதற்கு தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இரண்டு பாடத்திட்டம், பாடங்கள், காலஅட்டவணை, தேர்வு, திருப்புதல் தேர்வு என்ற வழக்கமான பாணியில் வரும் ஆண்டும் பணிபுரிவதா என்பதைப் பற்றி அவசியம் யோசிக்க வேண்டும்.
ஒரு பகுதியை வாசித்துப் புரிந்துகொள்வது எப்படி, புரிந்துகொண்டதை தெளிவாக பிறருக்குச் சொல்லுவது எப்படி? எளிய வாக்கியங்களில் எழுதி அறிவிப்பது எப்படி? அடிப்படைக் கணிதக் கருத்துகளில் ஐயம் ஏற்படா வண்ணம் தெளிவுபெறச் செய்வது எப்படி? என்னும் வினாக்களுக்கு விடைகிடைக்க உதவும் செயல்பாடுகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தகையச் செயல்பாடுகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.
அப்படியே பாடக்கருத்துகளைக் கற்பிப்பதாக இருப்பின், அக்கருத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவருக்கு எப்படிப் புரியவைப்பீர்கள் என்று யோசித்துக் கற்றல் செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் பாதிப் பாடங்களை நடத்தினால் போதும் என்று முடிவுசெய்வது மிகமிக நல்லது. வாசித்துப் புரிந்துகொள்ளும் திறமையை மீட்டெடுத்துவிட்டால் குழந்தைகள் சுயமாகக் கற்க முயற்சி செய்வார்கள். ஒருவருடம் போனது அவர்களுக்கும் தெரியுமே. வாசித்துப் புரிந்துகொள்ள முடிகிறது என்று தோன்றும்போது அதிக நேரம் ஒதுக்க அவர்கள் தயங்கமாட்டார்கள்.
கீழே தரப்பட்டிருப்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து
சிலவேளை இது நான் விரும்பும் கருத்தாக இருக்கலாம். ஆய்வு நடத்தப்படிவில்லை. தரவுகளும் இல்லை. அது அது அப்படி அப்படி இருந்தால் இது இது இப்படி இப்படி இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் சொல்வதுதான்.
இந்த ஊரடங்கு காலத்தில் இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொண்டது என்று செய்திகளில் பார்த்தோம். நதிநீரின் மாசு பெருமளவு குறைந்தது. காற்று சுத்தமானது. சாலைகளில் விலங்குகள் நடமாடத் தொடங்கின.... போன்ற செய்திகள். அதாவது வழக்கமான வேலைகள் முடங்கும்போது வேறு சில நல்ல விளைவுகளும் ஏற்படுகின்றன. அதுபோல் வழக்கமான, சலிப்பான கற்றல் கற்பித்தலிலிருந்து விலகியிருக்கும் குழந்தைகளின் மூளையும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். புதிய ந்யூரோண் சிற்ற்றைகள் உருவாகியிருக்கும். இதுவரை தூண்டப்படாத மூளையின் பகுதிகளில் மின்னூட்டம் சென்றிருக்கும். குழந்தைகள் தயாரித்த குறும்படங்கள். காணொளித் தொடர்கள், எழுதிய கதைகள், கட்டுரைகள், ஆசிரியர்களாக மாறிய குழந்தைகள் போன்றவை இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.
ஆனால் நாம் நினைக்கும், எதிர்பார்க்கும், பாடங்களை, கருத்துகளைக் கற்றிருக்காது. அவ்வளவே. இருந்தாலும் நமக்கு அடி வயிறு கலங்கும் அல்லவா?
நாங்கள் ஆசிரியப் பயிற்சியில் எப்போதும் கேட்கும் அந்தக் கேள்வி இப்போது நம்முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
• நாம் பாடப்பொருளைக் கற்பிக்கிறோமா?
• நாம் செய்முறையைக் கற்பிக்கிறோமா?
• நாம் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோமா?
அடுத்த கல்வியாண்டு உங்களால் கடைசிக் கேள்வியிலிருந்து தப்பிக்க முடியாது. குழந்தைகளுக்காக நீங்கள் கற்பித்தேயாக வேண்டும். காரணம் குழந்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பாடப்பொருளைக் கற்பிப்பதும் செய்முறையைக் கற்பிப்பதும் வீணாகிவிடுமே.
குழந்தைகளுக்காகக் கற்பிப்பது எப்படி? குழந்தைகளுக்காக கற்பிப்பவர்கள் யோசிக்க வேண்டியவை என்னென்ன? அவர்கள் தங்கள் எண்ணங்களில் செயல்களில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் என்னென்ன?
யோசியுங்கள்.
ஜி. ராஜேந்திரன்
கல்வி இயக்குநர்

Post Top Ad