இணையவழி தேர்வில் தொடரும் குளறுபடி; பொறியியல் கல்லூரிகளில் நேரடி முறையில் மறுதேர்வு நடத்தவேண்டும்: ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, February 12, 2021

இணையவழி தேர்வில் தொடரும் குளறுபடி; பொறியியல் கல்லூரிகளில் நேரடி முறையில் மறுதேர்வு நடத்தவேண்டும்: ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தல்


பொறியியல் கல்லூரிகளுக்கான இணையவழி தேர்வில் நிகழும் தொழில்நுட்பக் குளறுபடிகளால் மாணவர்கள் தேர்வெழுத முடியாத நிலை நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நேரடி முறையில் மறுத்தேர்வு நடத்த ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கரோனா பரவல் காரணமாக முதுநிலை பட்டப்படிப்புகளில் 1, 2, 3-ம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடப்பு பருவத்துக்கான தேர்வுகள் ஆன்லைன் முறையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இதற்கிடையே இணையதள வசதியின்மை, மற்றும் கடுமையான தேர்வுக் கட்டுப்பாடுகளால் மாணவர்கள் இணையவழியில் தேர்வு எழுதுவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக கல்லூரிபேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் உதவிகொண்டு பருவத் தேர்வுகள்இணையவழியில் நடத்தப்படுகின்றன. இதனால் பல்வேறு தேர்வு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறையில் முழுமையான 4ஜி இணையதள வேகம் இருந்தால் மட்டுமே இடையூறின்றி தேர்வெழுத முடியும். அதேநேரம் பெரும்பாலான பகுதிகளில் இணையதள வேகம் சீராக இருப்பதில்லை. அந்தசூழலில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுகிறது. 

இதுதவிர தேர்வின்போது கணினி திரையை தவிர்த்து வேறு பக்கம் கண்களை திருப்பினால் அல்லது திடீர் சப்தம் கேட்டால் 2 முறை எச்சரிக்கை விடுக்கப்படும். 3-வது முறை தொடர்ந்தால் தேர்வில் இருந்து வெளியேற்றப்படுவர். எனினும், மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தேர்வு எழுதுவதால் வாகனங்கள், ஒலிப்பெருக்கி, சாலைப்பணிகள் போன்ற வெளிப் புறங்களில் இருந்துவரும் சப்தங்களால் தேர்வில் இருந்து வெளியேற வேண்டியதாகி விடுகிறது. 

அதேபோல், ஒருமுறை வலைதளத்தில் உள்நுழைந்து தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதியில் வெளியேறினாலும் மாணவர்கள் தேர்வு எழுதியதாக கணக்கில் கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரியின் உதவிமையத்தை தொடர்பு கொண்டால் உரிய பதில் கிடைப்பதில்லை. இத்தகைய நடைமுறை சிக்கல்களால் தினமும் ஏராளாமான மாணவர்கள் தேர்வை எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். 

எனவே, உதவி மையத்தில் புகார் தெரிவித்த மாணவர்களுக்கு மறுத்தேர்வு நடத்த வேண்டும். மேலும், கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி வழங்கிவிட்டதால் இனிவரும் தேர்வுகளை நேரடி முறையில் நடத்தவும் அண்ணா பல்கலை. முன்வர வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதுகுறித்து அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கரோனா பரவலை கருத்தில் கொண்டே இணையவழியில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தேர்வுகளை நடத்தினால்தான் காப்பி அடித்தல் உட்பட முறைகேடுகளை தவிர்க்க முடியும். . உதவி மையங்களை பொறுத்தவரை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முயற்சிப்பதால் தொடர்பு கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளுக்கு தினமும் 5 தொகுப்புகளாக பருவத்தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்படுகின்றன. சராசரியாக 80 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதிவருகின்றனர். வழக்கமாக நேரடி முறையில் தேர்வு நடத்தினாலும் 80 முதல் 85 சதவீதம் வரையே வருகைப்பதிவு இருக்கும். எனவே,தேர்வுகள் முடிந்தபின் மாணவர்கள் பதிவுசெய்த புகார்களின் அடிப்படையிலேயே மறுத்தேர்வு குறித்த முடிவெடுக்கப்படும்' என்றனர்.

Post Top Ad