பணி நியமனம் கிடைக்காமல் ஏமாற்றம்; அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை: கோபியில் பரபரப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 24, 2021

பணி நியமனம் கிடைக்காமல் ஏமாற்றம்; அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகை: கோபியில் பரபரப்பு.


கோபியில் உள்ள அமைச்சர் செங்கோட்டை வீட்டை தகுதி தேர்வில் வெற்றிப்பெற்ற ஆசிரியர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் தகுதி தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று 4,500க்கும் மேற்பட்டோர் தேர்ச்சியடைந்தனர். இவ்வாறு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் 2013ம் ஆண்டு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு (மதிப்புகாண்) வெயிட்டேஜ் முறையில் பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்தார். 

ஆனால் பெரும்பாலானோருக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. தகுதிகாண் அடிப்படையில் நியமனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்குள் நியமனம் கிடைக்காவிட்டால், மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டி வரும் என்பதால் தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு கடந்த 7 ஆண்டுக்குள் நியமனம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களது ஆசிரியர் தகுதி கேள்விக்குறியானது. விதிவிலக்கு அளித்து, முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும், என்று தேர்ச்சி பெற்றவர்கள் கோரி வந்தனர். 

ஆனால், தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகள் கடந்தும், அவர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக அளவில் ஒருங்கிணைந்து, இன்று கோபியிலுள்ள அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, நியமனம் வழங்க கோர முடிவெடுத்தனர். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட தேர்ச்சி பெற்ற ஆண், பெண்கள் பல்வேறு மற்றும் பஸ்களில் இன்று காலை கோபி வந்தனர். அவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர், அவர்கள் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதை தடுக்கும் நோக்கில், கோபி - சத்தி பிரதான சாலையிலுள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் வாகன சோதனை நடத்தினர். 

அமைச்சர் வீட்டிற்கு வரும் வாகனங்களை கண்டறிந்து, அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட அனைவரையும் அங்கு நிறுத்தி வைத்து, அமைச்சர் வீட்டிற்கு செல்ல அனுமதி இல்லை. ஒரு சிலர் மட்டும் அமைச்சரை சந்தித்து முறையிடலாம் என்றனர். இதற்கு வந்திருந்தவர்கள் ஏற்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களும் இருந்ததால், அவர்கள் அவதியடைந்தனர். அமைச்சர் தங்களை வந்து சந்திக்க வேண்டும், கோரிக்கை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும், இல்லாவிட்டால் இங்கேயே காத்திருப்பு போராட்டத்தை நடத்துவோம், என்றனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து தேர்ச்சிபெற்றவர்கள் கூறுகையில், ‘‘அரசு பணிநியமனம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பினால் தனியார் பள்ளி வேலைக்கும் செல்லவில்லை. எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு முறையாக எங்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மேலும் பாதிக்கப்படுவோம். அமைச்சர் செங்கோட்டையன் தங்களை சந்திப்பார் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம்’’ என்றனர்.

Post Top Ad