கொரோனா பரவல் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகம் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் தமிழகம் வந்து தேர்தல் பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் பின்னர் தெரிவித்தது.
அதே போல், 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 50 வயதுக்கு மேற்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் பட்டியலை ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.