11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிப்பு: கல்வித்துறை அதிகாரி தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, January 18, 2021

11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு குறித்து பின்னர் அறிவிப்பு: கல்வித்துறை அதிகாரி தகவல்


10, 12-ம் வகுப்புகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல என்றும், பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்குவது குறித்து அரசு பிறகு அறிவிக்கும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் இல.நிர்மல்ராஜ் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்புகளுக்காக நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையில், மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு வகுப்புகளைத் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய்ப் பரவல் ஏற்படாமல் தடுக்கவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும், பள்ளிகள் திறப்பு மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டலத்துக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம் 4 பேரை அரசு அண்மையில் நியமித்தது.

இதன்படி, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தின் அதிகாரியும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருமான இல.நிர்மல்ராஜ், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் நிர்மல்ராஜ் கூறும்போது, ''தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜன.19) 10, 12-ம் வகுப்புகள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி, பள்ளிகளில் கரோனா தடுப்பு மற்றும் மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய வகையில் செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு செய்து, அதை உறுதிப்படுத்தி வருகிறோம். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் 3 பள்ளிகளுக்குத் தலா ஒரு குழு வீதம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, வகுப்புகள் நடைபெறும் காலம் முழுவதும் தொடர்ந்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது கட்டாயம் இல்லை. வருகைப் பதிவேடும் கிடையாது. ஆனால், விரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன்தான் பள்ளிக்கு வர வேண்டும். பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்குவது குறித்து அரசு பிறகு அறிவிக்கும்'' என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது உடனிருந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறும்போது, ''திருச்சி மாவட்டத்தில் 503 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் 75,000 மாணவர்கள் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட நோய்ப் பரவல் தடுப்புப் பணிகளுக்குப் போதிய நிதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சமூக இடைவெளியைப் பின்பற்றி மாணவர்கள் அமர்வதற்குத் தேவையான இடங்கள் அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளன. அரசின் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் கோ.பாரதி விவேகானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post Top Ad