கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவின் தங்க நுகர்வு 700 - 800 டன்னாக இருக்கிறது. இது கடந்த 2019-ல் 690 டன்னாக இருந்திருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த முதலீடுகள் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. 2020-ம் ஆண்டின் ஆகஸ்ட் 7-ம் தேதி , இதுவரை தங்கள் சந்தித்திராத விலை ஏற்றத்தைக் கண்டு, ஒரு கிராம் தங்கம் விலை 5,654 ரூபாய்க்கு விற்பனையானது. 22 கேரட் தங்கம் (8 கிராம்) 43,328 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதுவே தங்கத்தின் உட்சபட்ச விலையாகும்.
உலகச் சந்தையிலும் விலை குறைந்தது
நம் நாட்டில் ஆபரணத் தங்கம் விலை குறைவதற்கு முக்கியமான காரணம், உலகச் சந்தையில் தங்கம் விலை குறைந்ததுதான். தற்போது ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம் விலை உலகச் சந்தையில் 1,727 டாலராக இருக்கிறது. தங்கம் விலை உலகச் சந்தையில் கடந்த ஆறு மாதங்களில் 207 டாலரும் (சுமார் 10.74%), மூன்று மாதங்களில் 134 டாலரும் (7.23%) குறைந்துள்ளது. இதனால் நம் நாட்டிலும் தங்கம் விலை குறைந்துள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் டாலரின் மதிப்பு குறைந்ததும் நம் நாட்டில் தங்கம் விலை குறைந்ததற்கு முக்கியமான காரணம் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி அன்று ஒரு டாலரின் மதிப்பு ரூ.75.50-ஆக இருந்தது. அதாவது, ஒரு அமெரிக்க டாலரை வாங்க வேண்டும் என்றால், ரூ.75.50 தந்தால் மட்டுமே நம்மால் வாங்க முடியும்.
ஆனால், இது கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்று ரூ.72.44-ஆகக் குறைந்துள்ளது. இது மீண்டும் உயரத் தொடங்கி தற்போது ரூ.73.92-ஆக வர்த்தகம் ஆகிவருகிறது. உலகச் சந்தையில் தங்கம் விலை குறைந்து வருவதும், டாலர் மதிப்பு குறைந்து, தற்போது மெல்ல அதிகரித்து வருவதாலும் தங்கம் விலை நம் நாட்டில் குறைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே தங்கத்தின் விலை 3,752 ரூபாய் வரை சரிந்திருக்கிறது. தங்கத்தின் அதிகபட்ச விலையான 43,328 ரூபாயுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் நடப்பு மார்ச் 2-ம் தேதிக்கு இடைப்பட்ட ஏழு மாதங்களில் தங்கத்தில் விலை 9,200 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் வாங்க சரியான நேரமா?
இந்த நிலையில், தங்கம் இப்போதுள்ள விலைக் குறைவைப் பயன்படுத்தி பலரும் தங்கம் வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், பலரும் 'தங்கம் இன்னும் விலை கொஞ்சம் குறையட்டும் அப்போது வாங்கிக் கொள்ளலாம்' என்று காத்திருக்கிறார்கள். இன்னும் சிலர், இப்போது கொஞ்சம் வாங்கிவிட்டு, விலை இன்னும் கொஞ்சம் குறைந்தபின் வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், தங்கம் விலை அடுத்துவரும் நாள்களில் எப்படி இருக்கும் என்று யாராலும் துல்லியமாகச் சொல்ல முடியாது. காரணம், உலக அளவில் நடக்கும் நிகழ்வுகள் தங்கத்தின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும் என்பதே உண்மை!