பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்குநுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் சூழலை கருத்தில்கொண்டு 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு முழுஆண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்ச்சிக்கான மதிப்பீட்டு முறைகள் தொடர்பான பணிகளில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதால் பிளஸ் 1 சேர்க்கையில் மாணவர்களுக்கு பாடப்பிரிவு வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதனால் 11-ம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் பரவின.
இதுகுறித்து கேட்டபோது பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும்திட்டம் ஏதும் தற்போது இல்லை.பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் தொடர்ந்து வகுப்புகள் நடந்து வருகின்றன. மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாதபடி மதிப்பெண் வழங்கவே தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது.
தற்போது நடப்பு கல்வியாண்டில் 2 பருவத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதையடுத்து மாணவர்களின் பருவத்தேர்வு மதிப்பெண்கள், வருகைப்பதிவு மற்றும் பள்ளியில் மேற்கொள்ளும் செயல்முறைதிட்ட அம்சங்களுக்கான அகமதிப்பீடு ஆகியவற்றை கணக்கீடு செய்து இறுதி மதிப்பெண்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அரசின் வழிகாட்டுதல்படி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.