'டெட் தேர்வில் நடந்த குளறுபடிகளால் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அதற்கு தீர்வாக கட் - ஆப் மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும்' என கோரிக்கை எழுந்துள்ளது.
பிப். 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை டெட் 2ம் தாள் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடந்தது. 2.54 லட்சம் பேர் தேர்வெழுதி 15 ஆயிரத்து 430 பேர் அதாவது 6 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
காரணம் என்ன
தேர்ச்சி குறைந்ததற்கு வினாத்தாள் வடிவமைப்பு பாட வாரியாக மதிப்பெண் நிர்ணயித்ததில் குளறுபடி உள்ளிட்டவையே காரணம் என தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
டெட் தேர்வர்கள் சிலர் கூறியதாவது: ஆந்திரா கர்நாடகா அசாம் போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 40; எஸ்.சி. - எஸ்.டி. 45; பி.சி. - எம்.பி.சி. 50 சதவீதம் கட்-ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் பொது 60; மற்ற பிரிவினர் 55 சதவீதம் கட்-ஆப் பெற வேண்டும். இதனால் ஓரிரு மதிப்பெண்ணில் தேர்ச்சி வாய்ப்பை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு கூறினர்.
குளறுபடிகள்
டெட் 2ம் தாள் முதன்முறையாக ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதில் சாதகங்களைப் போலவே பின்னடைவுகளும் ஏராளம். ஒரே பாடத்துக்கு வெவ்வேறு 'பேட்ஜ்'களில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதில் ஒரு பேட்ஜுக்கு எளிது இதர பேட்ஜுக்கு கடினம் என சமவாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஒரே பாடத்தில் வெவ்வேறு வினாத்தாள்களுக்கு தவறான கேள்விக்கு நட்சத்திரக் குறியீடு வழங்கியதிலும் பாரபட்சங்கள் இருந்தன.
இதற்கு முன் டெட் தேர்ச்சி பெற்றால் ஆசிரியராக நியமிக்கப்படுவர். தற்போது நியமனத் தேர்வையும் எழுத வேண்டும் என்பதால் முன்பிருந்ததைப் போல 55 சதவீத மதிப்பெண் கட்-ஆப் கூடாது.
ஆந்திராவைப் பின்பற்றி குறைக்க வேண்டும். நியமனத் தேர்வில் கூடுதல் வாய்ப்பு அளித்து அதிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என டெட் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.