வரும் 11ல் தலைமை செயலகம் முற்றுகை ஜாக்டோ - ஜியோ முடிவால் அரசு அதிர்ச்சி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 5, 2023

வரும் 11ல் தலைமை செயலகம் முற்றுகை ஜாக்டோ - ஜியோ முடிவால் அரசு அதிர்ச்சி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வரும், 11ம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு அறிவித்துள்ளது.


தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்.


ஆனால், ஏமாற்றமே மிஞ்சியதால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம், திருச்சியில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள்:


சட்டசபையில், மார்ச் 27ல் பேசிய நிதி அமைச்சர், 'ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகின்றனர்' என, உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளார்.


நிரந்தர பணியிடங்களை அகற்றி, தினக்கூலி அடிப்படையில், வெளி முகமை வழியே பணியாளர்களை அமர்த்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்தது சரியில்லை என்றும் பேசி உள்ளார். இது, கடும் கண்டனத்துக்கு உரியது.


ஜாக்டோ - ஜியோ சார்பில், கோரிக்கை சாசனத்தை, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், கட்சி தலைவர்களை சந்தித்து, வரும், 7, 8, 9ம் தேதிகளில் வழங்குவது; ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, 11ம் தேதி தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


ஜாக்டோ - ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்ற, அதன் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து, முதல்வர் பேச வேண்டும் என, வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பேச்சு நடத்த, அரசு தரப்பில் அழைக்கப்படவில்லை.


எனவே, போராட்டத்துக்கான ஏற்பாடுகளை, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர். இது, அரசு தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Post Top Ad