புதுமைப் பெண் திட்டத்தில் இதுவரை 2,02,824 மாணவிகள் பயன்: தமிழக அரசு தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, April 4, 2023

புதுமைப் பெண் திட்டத்தில் இதுவரை 2,02,824 மாணவிகள் பயன்: தமிழக அரசு தகவல்

 

தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டத்தின் மூலம், பிப்ரவரி 28, 2023 வரை 2,02,824 மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் (MRAHES)- புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் அரசுப் பள்ளிகளில் இருந்து உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் பெண்களின் சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தும் தனித்துவமான திட்டமாக விளங்குகிறது.

இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள அனைத்து மாணவிகளுக்கும் இளங்கலைப் பட்டம், பட்டயம், தொழிற்கல்விப் பயிற்சி வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட படிப்பை முடிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000 நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை, நேரடியாக மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) வாயிலாக செலுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள முக்கிய அம்சமானது, பயனாளிகளை பதிவு செய்தல், தகுதியான மாணவிகளுக்கு ஒப்புதல் அளித்தல், பணம் செலுத்துதல் ஆகியவை இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருவதாகும். இருமுறை பதிவு மற்றும் தவறான பதிவுகளைத் தவிர்ப்பதற்காக உயர்கல்வி நிறுவனங்களால் மட்டுமே விண்ணப்ப பதிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் தாக்கம் > பெரும்பாலான தரவுகள் பல்வேறு தரவுத்தளங்களிலிருந்து பெறப்படுவதால், இந்த பயன்பாடு விண்ணப்பத்தை நிரப்பும் நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.

> தானியங்கி ஒப்புதல் வழங்குவது, விண்ணப்ப செயல்முறையை உடனடியாக முடிக்க உதவுகிறது.

> இத்திட்டத்தின் அறிவிப்புக்குப் பிறகு மாநிலம் முழுவதும் மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துள்ளது.

> நாளது தேதியின்படி, பள்ளிக்கல்வியை முடித்து 2 முதல் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சுமார் 14,758 மாணவிகள் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

> உயர் கல்வியைத் தொடராத மாணவிகளை (பள்ளிக் கல்விக்குப் பிறகு இடைநிற்றல்) கண்டறிந்து, அவர்களை உயர்கல்வியின் கீழ் கொண்டு வர, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கு இந்த இணையதளம் உதவுகிறது.

> 28 பிப்ரவரி 2023 வரை, இத்திட்டத்தின் மூலம் சுமார் 2,02,824 மாணவிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad