NCERT - இனி சைகை மொழியில் பள்ளிப் பாடங்களைப் படிக்கலாம்!


இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் என்சிஇஆர்டி  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாத குழந்தைகள், சைகை மொழியில் பாடப்புத்தகங்களையும் பிற கல்வி உபகரணங்களையும் உபயோகப்படுத்திக் கற்க முடியும்.

குழந்தைப் பருவத்தில்தான் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் வளர்கின்றன. அதனால் அப்போதில் இருந்தே அவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப, கல்வி உபகரணங்களை வழங்க வேண்டியது அவசியம். இதுநாள் வரை காது கேளாத மாணவர்கள், வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ கற்றலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போது காது கேளாத மாணவர்கள், இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் வகையில் என்சிஇஆர்டி, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மெய்நிகர் முறையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

இதுகுறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறும்போது, ''இந்திய சைகை மொழியில் இனி என்சிஇஆர்டி புத்தகங்களும் பிற கற்றல் உபகரணங்களும் கிடைக்கும். இதன்மூலம் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் காது கேளாதோர் சமூகத்தினர் மிகுந்த பயன் பெறுவர்'' என்றார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive