5, 8ம் வகுப்புக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாள்
'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில அளவில், பொதுவான ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டு, பொதுத்தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப் பட்டுள்ளது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குநர் பழனிச்சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநில பாட திட்டத்தை பின்பற்றும், அனைத்து பள்ளிகளிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான திருத்திய நெறிமுறைகளை, மாவட்ட கல்வி அலுவலர்கள் பின்பற்ற வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும், தேர்வு மையங்கள் செயல்பட வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பாளராக தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். மாநில அளவில் பொதுவான வினாத்தாள்கள், சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தால், ரகசிய முறையில் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும்.
தனியார் சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள் மற்றும் மழலையர் தொடக்க பள்ளிகளில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தலா, 100 ரூபாயும்; 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, 200 ரூபாயும் தேர்வு கட்டணமாக வசூலிக்க வேண்டும். அரசு, அரசு உதவி மற்றும் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு, கட்டண விலக்கு அளிக்கப்படும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.