2வது மனைவி ஓய்வூதியம் பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 26, 2020

2வது மனைவி ஓய்வூதியம் பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2வது மனைவி ஓய்வூதியம் பெற உரிமை உண்டு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பஞ்சாயத்து யூனியனில் கிராம மருத்துவராக பணியாற்றியவர் டாக்டர் சின்னச்சாமி.இவருக்கு பஞ்சோலை, சரோஜினிதேவி என இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1997ல் பஞ்சோலை மரணமடைந்தார். டாக்டர் சின்னச்சாமி கடந்த 1999ல் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, தான் பெறும் குடும்ப ஓய்வூதியத்திற்கு வாரிசாக 2வது மனைவி சரோஜினிதேவியை நியமித்தார்.  சரோஜினிதேவி  அரசு ஊழியராக இருந்ததால் ஓய்வூதிய பலன்களைப்பெற ஓய்வூதிய விதிகளில் இடமில்லை எனக்கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சரோஜினிதேவி தனக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குமாறு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: இந்த வழக்கில் டாக்டர் சின்னச்சாமியின் முதல் மனைவி இறந்துவிட்டார். இரண்டாவது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியுமா என்பதுதான் இந்த வழக்கில் கேள்வியாக எழுந்துள்ளது. 

ஓய்வூதிய விதிகளில் 2வது மனைவி சட்டப்பூர்வ  மனைவி இல்லை என்றும், அவர் வாரிசு உரிமை கோர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளதால்தான் மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மனுதாரர் சின்னச்சாமியின் 2வது தாரமாக 1975 முதல் சின்னச்சாமி இறக்கும்வரை 2009 வரை அவருடன் வாழ்ந்துள்ளார். சின்னச்சாமியின் முதல் மனைவி இறந்த பிறகும் 12 ஆண்டுகள் மனுதாரர் கணவருடன் வாழ்ந்துள்ளார்.

முதல் மனைவி விவாகரத்து வாங்கினாலோ அல்லது இறந்துவிட்டாலோ நீண்டநாட்கள் கணவருடன் வாழ்க்கை நடத்தும் 2வது மனைவிக்கு ஓய்வூதிய பலன்களை தரலாம் என்று தனுலாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது.

முதல் மனைவி இருக்கும்போது 2வது திருமணம் செய்வது சட்டவிரோதம்தான். ஆனால், முதல் மனைவி இறந்த நிலையில் மனுதாரர் போன்றவர்கள் உரிமை கோருவதையும் கணக்கில் கொள்ள வேண்டும். வழக்கின் தன்மையையும்  நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியத்தை அவரின் இறுதிக்காலம் வரை தரவேண்டும். எனவே, அவருக்கு குடும்ப ஓய்வூதியம் தர மறுத்த துறையின் உத்தரவு ரத்து  செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 12 வாரங்களில் 2009 ஜனவரி 20 முதல் கணக்கிட்டு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

Post Top Ad